இன்று வெளிநாடு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… ஜப்பான், சிங்கப்பூரில் 9 நாட்கள் சுற்றுப்பயணம்…!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 8:33 am
Quick Share

சென்னை ; தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளிநாடு செல்கிறார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்படச் செய்வதை ஒரு லட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இந்த இலக்கினை அடைந்திட ரூ.23 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக, தொழில் துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டில் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் மற்றும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன. தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை-2021, தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை-2021, தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை-2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை-2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை-2022, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை-2022, தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை-2023 மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத்திட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-ல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கிறார். 23-5-2023 அன்று (இன்று) சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்று, அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை மந்திரி ஈஸ்வரனையும், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் அதிபர்கள், முதன்மைச் செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்கள்.

இன்று மாலை நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம் டி.என்., டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான எஸ்.யு.டி.டி., சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர். அண்மையில் உலக அளவில் முன்னணி குளிர்சாதன எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம் ரூ.1,891 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய நிசான் நிறுவனம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் ரூ.3,300 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்தது மட்டுமல்லாமல், தனது தொழில் நடவடிக்கைகளை நம்மாநிலத்தில் மேலும் விரிவாக்கம் செய்து வருகிறது. முதலீடு செய்ய அழைப்பு இந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்கிறார். அங்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க இருக்கிறார்.

ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன. இதுவரை ஜப்பான் சென்றுள்ள அரசுக் குழுக்கள் டோக்கியோ மட்டுமே சென்று வந்துள்ளனர். ஒசாகாவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு பல முன்னணி தொழில் நிறுவனங்களும் அமைந்துள்ளன. எனவே, ஒசாகா நகருக்கும் வருகை தரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முதல் முறையாக ஒசாகா நகருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு செல்ல உள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சி ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து, அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். மேலும், முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்.

டோக்கியோ நகரில் அந்நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிஷூமுரா யசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். மேம்பட்ட தொழில் மையம் மேலும், 200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்.

கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் அங்குள்ள மேம்பட்ட தொழில் மையத்தை பார்வையிட உள்ளார். தமிழ்நாட்டிற்கும், ஜப்பானுக்கும் இடையே நீண்ட நெடிய வரலாற்று உறவு இருந்து வருகிறது. இந்த உறவு மேலும் வலுவடையும் வகையில், இந்த அரசு முறைப் பயணம் அமைந்திடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 272

0

0