வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே! : முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்

Author: Babu Lakshmanan
3 June 2021, 10:21 am
Quick Share

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளையொட்டி, அவரது மகனும், முதலமைச்சருமான ஸ்டாலின் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய தினம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதனிடையே, தலைநிமிர்ந்து வருகிறேன்! என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசுவது போன்ற 3 நிமிட வீடியோ உள்ளது. அதில் அவர் பேசியதாவது :- திருவாரூரில் கருவாகி தமிழகத்தையே தனது ஊராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர். முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே! இன்று நீங்கள் பிறந்த ஜூன் 3. இது உங்களின் பிறந்த நாள் மட்டுமல்ல. உயிரினும் மேலான உங்களின் உடன்பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள். அதனால் தான் கழகத்தின் கண்மணிகளாம் கருப்பு, சிவப்பு தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனி பிறந்த நாட்கள் இல்லை. எங்கள் ஆருயிர் தலைவரே! இந்த ஜூன் 3 நான் கம்பீரமாய் வருகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்.

ஈரோட்டில் அன்றொரு நாள் நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை உடன்பிறப்புகளின் துணையோடு நிறைவேற்றி காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வருகிறேன். தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன். நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னை கவனிப்பதாகத் தான் எப்போதும் நினைத்தேன். இப்போதும் என்னை கவனித்துக் கொண்டு தான் இருப்பீர்கள். கோட்டையில் கொடியேற்றி நாள் முதலே கொரோனாவை விரட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று என்னை நீங்கள் உருவகப்படுத்தினீர்கள்.

அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன். அன்றொரு நாள் விழுப்புரத்தில் சொன்னீர்கள். யாரிடமிருந்து பாராட்டு வரவில்லையோ, அவர்களும் பாராட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். தேர்தலில் நமக்கு வாக்களிக்காத பலரது பாராட்டுகளையும் கழகத்திற்கு வாங்கி தர பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களது வளர்ப்பான நான் இந்த ஜூன் 3 உங்களை வெற்றி செய்தியுடன் சந்திக்க வருகிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே!, எனக் கூறியுள்ளார்.

Views: - 317

0

0