2021 சட்டமன்ற தேர்தலுக்கான கோவை மாவட்ட திமுக வேட்பாளர்கள் இவர்களா…? கசிந்த தகவல்!!

1 August 2020, 7:15 pm
DMK - updatenews360
Quick Share

சென்னை : அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கசிந்துள்ளன.

2011ம் ஆண்டை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் திமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்தே கிடைத்தது. குறிப்பாக, கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நடந்து முடிந்தத் தேர்தலின் முடிவுகளும் வெளிக்காட்டியது. மொத்தம் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சிங்காநல்லூரைத் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்று, சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள்.

கோவையில் மக்களிடம் எடுபடாத வேட்பாளர்களாக வலம் வந்த திமுகவைச் சேர்ந்த பையா கவுண்டர் கவுண்டம்பாளையம் தொகுதியிலும், கோவை வடக்கு தொகுதியில் மீன லோகுவும், கோவை தெற்கில் கூட்டணி கட்சி (காங்.,) வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், மேட்டுப்பாளையம் தொகுதியில் சு. சுரேந்திரனும், வால்பாறை தொகுதியில் த. பால்பாண்டியும், பொள்ளாச்சி தொகுதியில் தமிழ்மணியும் தோல்வி முகத்தையே எதிர்கொண்டனர்.

கோவை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளால் அதிருப்தியடைந்த திமுக தலைவர் ஸ்டாலின், உடனடியாக கட்சியின் முக்கிய தலைவர்களை திரட்டி ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில், கோவை மாநகரை கட்சியின் நிர்வாக வசதிக்காக பிரிப்பது, புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டார். இருப்பினும், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக ஸ்டாலின் தொடர்ந்து அதிருப்தியிலேயே இருப்பதாக உ.பிக்கள் கூறி வருகின்றனர்.

Stalin-07-updatenews360-6

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் என்ன செய்வது என்று புரியாத திமுகவின் தலைமை, விரைவில் கோவை மாவட்டத்திற்கான வேட்பாளர்களை தேர்வு செய்து, தேர்தலுக்கான பணிகளை துரிதப்படுத்த முடிவு செய்து, ரகசிய களப்பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் தென்றல் செல்வராஜும், கவுண்டம்பாளையம் தொகுதியில் கூட்டணி கட்சி (கம்யூ.,) வேட்பாளர் ராமமூர்த்தியையும் களமிறக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல, சிங்காநல்லூர் தொகுதியில் கூட்டணி கட்சி (காங்.,) வேட்பாளராக மயூரா ஜெயக்குமாரும், கோவை வடக்கு தொகுதியில் சண்முகசுந்தரமும், கிணத்துக்கடவு தொகுதியில் முத்துசாமியும், வால்பாறை தொகுதியில் கோவை தங்கத்தையும் களமிறக்க திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளையில், கடந்த முறை தான் வெற்றி பெற்ற தொகுதியான சிங்காநல்லூரில் மீண்டும் போட்டியிடவே தற்போதைய எம்எல்ஏ நா.கார்த்திக் விரும்புகிறார். ஆனால், சிங்காநல்லூர் தொகுதியில் மயூரா ஜெயக்குமாரை களமிறக்க மேலிடம் முடிவு செய்திருப்பதால், அங்கு கோஷ்டி பூசல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தலையை பிய்த்துக் கொள்ளும் தலைமைக்கு, தொண்டாமுத்தூர் தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் வெகு சுலபமாக இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், அந்த தொகுதியில் மிகவும் பிரபலமான வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்பி வேலுமணியை எதிர்த்து போட்டியிட திமுக வேட்பாளர்கள் தயக்கம் காட்டுவதாக அக்கட்சியினரே கூறி வருகின்றனர்.

எனவே, தொண்டாமுத்தூர் தொகுதியை தவிர்த்து வேறு எந்த தொகுதியை கொடுத்தாலும் பரவாயில்லை என்று தலைமையை சந்திக்க கோவை திமுக நிர்வாகிகள் வரிசை கட்டி நிற்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு தொகுதியான சிங்காநல்லூரை, இந்த முறை காங்கிரஸுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை கைகொடுக்குமா..? என்ற சந்தேகங்களும், அதிருப்திகளும் கட்சியினரிடையே உலா வந்து கொண்டிருக்கிறது.

கடந்த தேர்தலில் கோவையில் வெற்றி பெற்ற ஒரேயொரு திமுக எம்எல்ஏவான நா.கார்த்திக் இந்த முறை வேட்பாளர் பட்டியலில் கழற்றி விடப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கியவர்களில் ஒருவருக்கும் கூட இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட போவதில்லை என்றே விளங்குகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் திமுகவின் மேலும் பல கிளைகளாக பிரியும் நிலை உருவாகியுள்ளது.

திமுக வட்டாரத்தில் இருந்து வெளியாகிய தகவலின்படி கோவை மாவட்ட திமுக வேட்பாளர்கள் இவர்கள்தானா என்பது அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்போதுதான் தெரிய வரும்.

Views: - 50

0

0

1 thought on “2021 சட்டமன்ற தேர்தலுக்கான கோவை மாவட்ட திமுக வேட்பாளர்கள் இவர்களா…? கசிந்த தகவல்!!

Comments are closed.