கோவையில் 3 தொகுதிகளை குறி வைக்கும் பாஜக!! கோட்டையை விட்டுக்கொடுக்குமா அதிமுக?

13 January 2021, 2:06 pm
bjp - coimbatore - updatenews360
Quick Share

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் படு தீவிரமாக தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் முதன்மை திராவிட கட்சியான அதிமுக, தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, அடுத்தடுத்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் என்பதால் வெற்றி முனைப்போடு அதிமுக பங்காற்றி வருகிறது. ஆனால், அதிமுகவில் எந்த கட்சியினர் கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜகவினர், அதிமுக முதல்வர் வேட்பாளரை முன்னர் ஏற்காமலும் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளது.

admk - bjp - updatenews360

இந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள வேலையில், கொங்கு மண்டலமான கோவையில் பாஜக 3 தொகுதிகளை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் படியேற வேண்டும் என்ற முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் கொங்கு மண்டலமான கோவை அதிமுகவின் கோட்டையாக உள்ளதால், பாஜகவுக்கும் ஆதரவு தரும் மாவட்டம் என்பதால், கோவையில் மூன்று தொகுதியை பாஜகவினர் குறிவைத்துள்ளனர்.
குறிப்பாக, கிணத்துக்கடவு தொகுதியில் எட்டிமடை சண்முகம் தற்போது எம்எல்ஏவாக இருந்தாலும், அவருக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவரின் செயல்பாடுகள் அதிருப்தியில் உள்ளதால், அந்த தொகுதியில் இந்த முறை அண்ணாமலையை களமிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Amman Arjunan MLA updatenews360

மற்றொரு தொகுதியான தெற்கு தொகுதியில் தற்போது அம்மன் கே அர்ச்சுணன், சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் இந்த முறை அவர், வேறு தொகுதிக்கு வேட்பாளராக களமிறக்கலாம் என்றும், அந்த தொகுதியில் பாஜகவின் தேசிய மளிரணித் தலைவியும் கடந்த முறை பாஜக சார்பாக தனித்து நின்ற வானதி சீனிவாசனை களமிறக்க பாஜகவினர் முடிவு செய்துள்ளனர். கடந்த முறை தனித்து நின்று, 33 ஆயிரம் வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்த வானதி சீனிவாசன் போட்டியிட விரும்புகிறார்.

அதேவேளையில், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள கோவை தெற்கு தொகுதியில் களமிறங்க திமுகவும் பிளான் போட்டு வருகிறது. சிங்காநல்லூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள திமுகவின் நா. கார்த்திக், இந்த முறை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகிறது. அந்த தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் உள்ளதால், திமுக அந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

vanathi sree - updatenews360

சிறுபான்மையின மக்கள் ஆதரவு அதிகம் உள்ள திமுகவை எதிர்த்து, பாஜக களமிறங்கும்பட்சத்தில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி என்பது எட்டா கனியாகிவிடும். ஏற்கனவே, இந்தத் தொகுதியை கைப்பற்றியிருக்கும் அதிமுக, நா. கார்த்திக் ஒருவேளை வேட்பாளராக நிறுத்தப்படும்பட்சத்தில், அவருடைய சமூகத்தை சேர்ந்தவரும், கடந்த முறை 59 ஆயிரம் வாக்குகள் பெற்று எம்எல்ஏவாக உள்ள அம்மன் அர்ச்சுணனை மீண்டும் களமிறக்கினால், வெற்றியை தன்வசமாக்க முடியும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். எனவே, கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு தாரை வார்ப்பது சந்தேகம்தான்.

கிணத்துக்கடவு, கோவை தெற்கு மற்றும் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி கோவை கொங்கு மண்டலத்தில் மட்டும் 3 சட்டமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்த அதிமுகவின் கோட்டையாக உள்ள கோவையில், 3 தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க அதிமுக முன்வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!!

Views: - 12

0

0

1 thought on “கோவையில் 3 தொகுதிகளை குறி வைக்கும் பாஜக!! கோட்டையை விட்டுக்கொடுக்குமா அதிமுக?

Comments are closed.