கோவை கார் வெடிப்பு சம்பவம்… மயக்கத்தில் இருக்கும் தமிழக அரசு… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 4:09 pm
Jayakumar Stalin - Updatenews360
Quick Share

சென்னை ; எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மழை நீர் வடிகால்வாய் அரசு அமைத்து வருவதாகவும், மழை நீர் வடிகால்வாய் ஒரு மரண குழி எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதால், அதற்கான அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், வருகிற 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாகவும், இதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்து இருப்பதாக அவர் கூறினார்.

வழக்கமாக எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் பகுதியில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார் என்ற கேள்விக்கு, கடந்த காலத்தில் பல முறை எடப்பாடி பழனிச்சாமி நந்தனத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து இருப்பதாக அவர் மறுப்பு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கோவை சிலிண்டர் விபத்து சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை எனவும் தீபாவளி முடிந்து நான்கு நாட்களாகியும் அரசு மயக்கத்திலே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் தான் எடுத்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாகவும், எந்த விசாரணைக்கும் சட்டப்படி ஆஜராகி விளக்கம் அளிக்க தயார் என விஜயபாஸ்கர் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.

மழைநீர் வடிகால்வாயில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலியான விவகாரத்தில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபடாமல் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவரது மரணத்திற்கு காரணமான காண்ட்ராக்டர், மாநகராட்சி பொறியாளர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். மேலும் மரணமடைந்த ஊழியரின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, அவர் வாழ்நாள் சம்பாதிக்கும் ஊதியத்தை அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

தமிழக மாணவர்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டது தொடர்பாக அரசு இதுவரை வாய் திறக்கவில்லை எனவும் தமிழர்கள் எங்கு தாக்கப்பட்டாலும் வாய் திறக்காத ஒரே கட்சி திமுக தான் என காட்டமாக தெரிவித்தார்.

Views: - 305

0

0