“ஏழை மாணவர்கள் படிக்க சப்போர்ட் பண்ணுங்க சார்.!” – செய்தியாளரிடம் கொந்தளித்த முதலமைச்சர் பழனிசாமி..!

18 November 2020, 6:47 pm
cm cbe 1- updatenews360
Quick Share

கோவை : ஏழை மாணவர்களுக்காக கஷ்டப்பட்டுட்டிருக்கிறேன், நீங்கள் ஏழை மாணவர்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க சார் என்று நிருபரின் கேள்விக்கு ஆக்ரோஷமாக பதில் அளித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீட் தேர்வு அனைத்து மாநிலங்களும் எழுத வேண்டும். அதில் எந்த மாநிலத்திற்கும் இதுவரை விலக்கு வழங்கப்படவில்லை. தமிழகத்தில் நீட் தேர்வு இருக்க கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு. இந்த தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 படித்து முடித்த நிலையில், வெறும் 6 பேர் தான் மருத்துவ கல்வியில் சேர முடிந்தது. இந்தாண்டு 313 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட செயலர்கள் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி குறித்த புகார் அடிப்படையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மத்திய அரசு அளித்த பிறகே, அதனை நடைமுறைப்படுத்த முடியும். 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு நடைபெறுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது,
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

இதனிடையே செய்தியாளர் ஒருவர் நீட் தேர்வு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், “இந்தியாவில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் ஒரே மாநிலம் தமிழகம் தான். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் திமுக தான். அப்போது நீங்கள் யாரும் கேட்கவில்லை. இப்போது கேள்வி கேட்கின்றீர்கள். ஏழை மாணவர்களுக்காக கஷ்டப்பட்டுட்டிருக்கிறேன். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். நீங்கள் ஏழை மாணவர்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க சார்,” என்றார்.