‘கொதிநிலை’யில் கொங்கு திமுக…! கே.என். நேருவிடம் புகார் பட்டியல் வாசித்த உ.பி.க்கள்…! ஸ்டாலின் ஷாக்

14 August 2020, 1:47 pm
Quick Share

சென்னை: கொங்கு மண்டலத்தில் திமுகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் ஸ்டாலினை உச்சக்கட்ட கொதிநிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றன.

கோவையில் 2 நாட்களுக்கு முன்பு, மாவட்ட அளவில் திமுக ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளார் திமுகவின் தலைமை கழக முதன்மை செயலாளர் கேஎன். நேரு.  தென் மாவட்டங்களை முடித்துவிட்டு இப்போது கொங்கு மண்டலம் வந்திருக்கிறார். கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர், திமுகவில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

அதிலும் குறிப்பாக திமுகவில் கொங்கு மண்டலத்தில் கட்சியின் நிலைமை பற்றி பிகே அணியின் சர்வே பற்றி விவாதிக்கப்பட்டது. கோவை மாநகர் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்ட திமுகவினர் பங்கேற்றனர். திமுக கொறடா திண்டுக்கல் சக்கரபாணி, மதுரை மா.செ மூர்த்தி ஆகியோரும் கேஎன் நேருவுடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில் கே.என். நேருவின் பேச்சு தான் ஹைலைட். 2021ம் ஆண்டில் திமுக ஆட்சியை பிடிக்கவேண்டும். கொங்கு மண்டலத்தில் திமுக நிலை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. நான் இங்கே வந்திருப்பதே அனைத்தையும் சரி செய்யத்தான். எல்லா பிரச்னைகளையும் தீர்க்க தான் நான் வந்திருக்கேன்.

தவறான புகார் தொடர்பாக யாராவது நீக்கப்பட்டிருந்தா, அது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கும் உத்தரவாதம் தரேன். ஆகையால் எல்லோரும் பேசலாம் என்றார்.

முதலில் பீளமேடு பகுதி திமுக வட்ட செயலாளர் சேரலாதன், மா.செ கார்த்திக் சரியாக நடத்துவது இல்லை, கட்சியினரை மதிப்பதில்லை. கோவையில் சூயஸ் நிறுவனத்தின் திட்டம் பற்றி பேருக்கு தான் போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதுமாதிரி தான் அனைத்து போராட்டங்களும் நடந்துள்ளது என்று பேசி உள்ளார். ஆனால் கட்சியின் மற்ற நிர்வாகிகள், பகுதி செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார் என்கின்றனர்.

இது தொடர்பாக பொறுப்பாளர் முத்துசாமியிடமும் பேசி இருக்கிறார் நேரு. பின்னர் ஆக.11ம் தேதி வடக்கு, தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதில் திமுகவினர், அதிமுகவினருடன் நேரடியாக வைத்துள்ள தொடர்புகள் பற்றி விரிவான புகார் பட்டியல்கள் வாசிக்கப்பட்டுள்ளன.

அதாவது அவை தலைவர் கணேசமூர்த்தி, அதிமுக எம்எல்ஏ அருண்குமார் இடையேயான நெருக்கம் பற்றி தான் அது. அருண்குமார் எம்எல்ஏ நிதியில் நடைபெறும் அனைத்து திட்டங்களும் எலக்ட்ரிகல் சப்ளை செய்வது கணேசமூர்த்தி. அதை கேட்டவர்கள் மீது பொய் வழக்கு என்று புகார் கூறப்பட்டுள்ளது. இப்படி அதிமுகவுடன் ஒட்டி, உறவாடி இருந்தால் எப்படி திமுக வெற்றி பெறும்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர் கட்சியினர்.

நேரு இதுபற்றி கணேசமூர்த்தியிடம் கேட்க அவர் மறுத்துள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்களை கட்சியினர் நேருவிடம் கொடுத்துள்ளனர் என்பது தனிக்கதை. பின்னர் தெற்கு மாவட்டம் பற்றி ஆலோசனை திரும்பி இருக்கிறது. மா.செ தென்றல் செல்வராஜ் கட்சியினரை கண்டு கொள்வதே இல்லை, தானே முடிவெடுத்து செயல்படுத்துகிறார் என்று கூறி உள்ளனர்.

இதுபோன்று திமுக, அதிமுக கூட்டு, வியாபாரம், கடைகள் வாடகை என பல விஷயங்களை கட்சியினர் ஆதாரங்களுடன் நேருவிடம் கொடுத்துள்ளனர். பின்னர் நேரு பேசியதாவது: அமைச்சர் வேலுமணியை கடுமையாக எதிர்த்து வருபவர் ராமச்சந்திரன். அவர் போன்று அதிமுகவை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கூறினார்.

அதற்காக ராமச்சந்திரனின் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களையும் கட்சியினர் மத்தியில் விரிவாக விளக்கினாராம் நேரு. அவர் போன்று அனைவரும் இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனராம். பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகளான வீரகோபால், நாச்சிமுத்து, மீனாலோகு  உள்ளிட்டோரை ஸ்டாலினுடன் போனிலும் பேச வைத்துள்ளார்.

அவர்களிடம் பேசிய ஸ்டாலின், உரிய நேரத்தில் உங்களுக்கான கட்சி பதவி வரும், கட்சி பணியாற்றுங்கள் என்று பேசி இருக்கிறாராம். ஆக மொத்தம் நேருவின் இந்த கோவை ஆலோசனை கூட்டம், மாற்றத்தை ஏற்படுத்தும் நம்புகின்றனர் உ.பி.க்கள்…!

Views: - 12

0

0