அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு… நள்ளிரவில் நடந்த சம்பவம் ; திமுகவினர் பரபரப்பு புகார்…!!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 1:35 pm
Quick Share

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலலை நேற்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது… பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் : முதலமைச்சர் ஸ்டாலின்

இந்த நிலையில், ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு 10.30 மணிக்கு பின்னர் வந்துள்ளார். வாகனத்தில் வந்த அவருக்கு, அப்பகுதியில் திரண்டிருந்த பாஜகவினர் மலர் தூவியும், பாரத் மாதாகி ஜெ எனக் கூறியும் வரவேற்பு அளித்தனர். இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில், 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது எனக் கூறி அப்பகுதியில் இருந்த திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து பாஜகவினருக்கும், திமுக கூட்டணி கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. அப்போது, திமுகவை சேர்ந்த மோகன்ராஜ், செல்லப்பா, ரங்கநாதன், சேகர், சதீஷ், சிபிஎம் கட்சியை சேர்ந்த ஜோதிபாசு மற்றும் மதிமுகவை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் படிக்க: 10 ஆண்டுகள் ஆயிடுச்சுல.. பாஜகவுக்கு இறுமாப்பு வரத்தான் செய்யும் ; முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

இதனிடையே அண்ணாமலையின் பிரச்சார வாகனம் அப்பகுதியில் இருந்து கிளம்பி சென்றது. பாஜகவினர் தாக்கியதில் நெஞ்சு பகுதியில் அடிபட்ட மதிமுகவை சேர்ந்த குணசேகரன் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .இதனைத்தொடர்ந்து, வந்த காவல் துறையினர் அப்பகுதியில் திரண்டு இருந்த பாஜகவினரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் அவர்கள் கலைய மறுத்து பாரத் மாதா கி ஜெ என முழக்கமிட்டனர். அவர்களை சமரசப்படுத்திய காவல் துறையினர் கலைந்து செல்ல செய்தனர். தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்ல செய்தார்.

இது தொடர்பாக குணசேகரன் என்பவர் அளித்த புகார் அடிப்படையில் ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகிய நான்கு பேர் மீது பீளமேடு போலிசார் இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 147 உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்ததாக பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை மீது தேர்தல் அலுவலர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 111

0

0