பள்ளி மாணவி தற்கொலை… வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்க : அரசியல் தலைவர்கள் வலியுறுத்துவது என்ன..?
Author: Babu Lakshmanan13 November 2021, 3:47 pm
கோவை : கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், நேற்று முன்தினம் மாலை மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தங்களது மகளின் தற்கொலைக்கு அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு இன்னும் பலருக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த டுவிட்டர் பதிவில், ” கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்!
மாணவி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, திமுக எம்பி கனிமொழி விடுத்துள்ள பதிவில், “ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும்,” எனக் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள பதிவில், “பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது :- கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நலவாழ்வு, அவர்களது சமூகப்பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன.
பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதுசெய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனையை உறுதிசெய்ய வேண்டும். மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
0
0