விடுதியில் ஓர் அறைக்கு ஒரு மாணவர்தான் : கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டது யூஜிசி

9 November 2020, 4:09 pm
UGC-UPDATENEWS360
Quick Share

டெல்லி : கல்லூரிகள் திறக்கப்பட்டால், மாணவர்களின் விடுதிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யூஜிசி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் கட்டுக்குள் வருகிறது. இதனால், படிப்படியாக தளர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவுகள் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து விட்டது. அதன்படி, வரும் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இன்று பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்பு நடந்த நிலையில், வரும் 12ம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டால், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை யூஜிசி வெளியிட்டுள்ளது. அதில், கல்லூரி விடுதிகளில் ஓர் அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்றும், மாணவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0