வரும் 15-ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடக்கம் : உயர்கல்வித்துறை அறிவிப்பு

4 September 2020, 1:36 pm
Exam_Corona_UpdateNews360
Quick Share

சென்னை : வரும் செப்.,15ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களை திரட்டி தேர்வு எழுதுவது கடினமானது என்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து விட்டன.

இதனிடையே, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக நடத்துவது குறித்து அந்தந்த பல்கலை.,களே முடிவு செய்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை நேற்று அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், வரும் செப்.,15ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் 3 மணி நேரம் நடைபெறும் என்றும், எழுத்து தேர்வு, ஆன்லைன் தேர்வு ஆகியவை ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0