மனதில் விதைத்த சிந்தனைகளால் தலைமுறைக்கும் நினைவில் வாழ்வீர் : நடிகர் விவேக்கின் மறைவிற்கு திரைபிரபலங்கள் இரங்கல்..!!!

17 April 2021, 11:51 am
Quick Share

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்,” என தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு,” என்றார்.

நடிகர் சீயான் விக்ரம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “என்மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கு தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,” எனக் கூறினார்.

நடிகர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் பதிவில், “நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஈடு இணை செய்ய முடியாத அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ‘சின்ன கலைவாணர்’ என போற்றப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை. தன்னலம் பார்க்காமல் சமூக அக்கறையோடு சேவை புரிந்து வந்த நடிகர் விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் விவேக்கின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சமூகம் மற்றும் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. சமூகத்திற்கு நிறைய நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைத்தவர்,” என்றார்.

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ” அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன், எனக் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்… மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அர்ஜுன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு… வேதனையை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை.. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்,” எனக் கூறினார்.

Views: - 15

0

0