‘ஐபேக்’கின் புது கணக்கு… கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலினுக்கு மனக்கசப்பு..!

19 January 2021, 6:21 pm
dmk alliance - updatenews360
Quick Share

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 44 வயது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனது ‘ஐபேக்’ டீம் மூலம் வகுத்துக் கொடுக்கும் தேர்தல் உத்திகள் சில மாநிலங்களில் அவர் பணியாற்றிய கட்சிகளுக்கு பெரிய அளவில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

குறிப்பாக, 2019 ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் YSR காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்காக தேர்தல் உத்திகளை வகுத்துத் தந்தார். அந்த தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151-ஐ YSR காங்கிரஸ் வென்று மகத்தான சாதனை படைத்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பலத்த அடி வாங்கியது.

இதேபோல் கடந்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி மாநில நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஐ-பேக் டீம் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி வென்றெடுத்தது. பாஜக 8 இடங்களில் மட்டும் வெற்றி கண்டது. காங்கிரஸ் இருந்த சுவடே தெரியாமல் தவிடு பொடியானது.

அடுத்தடுத்த இந்த பிரமாண்ட வெற்றிகளுக்கு பிரசாந்த் கிஷோரின் சாதுர்யமே காரணம் என்று இந்தியா முழுவதும் பேச்சு எழுந்தது.

இதைத் தொடர்ந்தே அவரை நம்பிக்கையுடன் தமிழகத்திற்கு
திமுக அழைத்து வந்தது. ஐபேக் டீம் திமுகவிற்குள் நுழைந்த பின்பு அக்கட்சியில் ஏற்பட்ட சலசலப்புகள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

கட்சியின் சீனியர் தலைவர்கள் கூட இவர்கள் தரும் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும் என்பது எழுதாத விதி ஆகிப் போனது. இந்த டீம் தான் திமுகவின் வேட்பாளர்களை நிர்ணயம் செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதனால் திமுகவில் யாருக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைக்கும் என்பதே கேள்விக்குறியாகி விட்டது.

முதலில் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய ஐபேக் டீம் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு உள்ளும் குழப்பத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது.

“திமுக கூட்டணியை 200 சீட்டுகளில் ஜெயிக்க வைப்பது எனது லட்சியம். அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்” என்று பிரசாந்த் கிஷோர் மார்தட்டிக் கொள்கிறார்.

ஆனால் அவர் தேர்ந்தெடுத்திருப்பது முழுக்க முழுக்க 2016 தேர்தலில் ஜெயலலிதா எடுத்த அதிரடி பாணியைத்தான்.
அதாவது அந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு அதிமுக 134 இடங்களை வென்றது.

jayalaitha - updatenews360

“ஜெயலலிதா சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தனித்தே ஆட்சியைப் பிடித்து விட்டார் என்றால் பெரிய அளவில் கூட்டணி கட்சிகளை வைத்துள்ள நீங்கள் ஏன் 200 தொகுதிகளில் ஜெயிக்க முடியாது” என்று பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

ஆனால் அதற்காக அவர் கையாளும் வழிமுறைகள்தான் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் போன்றவற்றுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

காங்கிரசுக்கு 20 தொகுதிகள் கொடுப்பதே அதிகம் என்று ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் கடுமையாகவே கூறியிருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதுவும், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியது தான் ராஷ்ட்ரிய ஜனதாதள கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிஇருக்கிறார்.

stalin prasanth kishore - updatenews360

ஆனால் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நிறையவே பயப்படுவதாக தெரிகிறது. ‘ஐ பேக்’ டீம் கூறுமளவிற்கு காங்கிரசுக்கு சீட்டுகளை ஒதுக்கினால் பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் அப்போது தேவையின்றி காங்கிரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஸ்டாலின்
என்று சற்று ஆழமாகவே சிந்திக்கிறாராம்.

சோனியா, ராகுல்காந்தி முகத்தில் எப்படி விழிப்பது என்று அவருக்கு மிகுந்த தயக்கமும் இருக்கவே செய்கிறது.

அதனால் 25 முதல் 30 சீட்டுகள் வரை கொடுக்கலாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் பிரசாந்த் கிஷோர் கடும் கோபத்துடன் நான் சொல்வதைக் கேளுங்கள் இல்லையென்றால் 200 இடங்களில் வெற்றி என்ற இலக்கை எப்போதுமே எட்டவே இயலாது என்று முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டார் என்கின்றனர்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்….என்று ஸ்டாலின் எதிர்க் கேள்வி கேட்க அப்படியெல்லாம் நடக்க ஒரு போதும் வாய்ப்பில்லை. அது மாதிரி நடந்தால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். இப்போது கவலைப்படாதீர்கள் என்று தைரியம் அளித்திருக்கிறார், பிரசாந்த் கிஷோர்.

இப்படி இருவருக்கும் நடந்த நீண்ட வாக்குவாதம், கருத்து மோதலுக்கு பின்பு ஸ்டாலின் பணிந்து வந்து காங்கிரசுக்கு 20 சீட்டுகள் கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதாவது பிரசாத் கிஷோர் சொல்வதுபோல் திமுக 200 இடங்களில் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு 20 தொகுதிகள்.
மீதமுள்ள 14 தொகுதிகள்தான் மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் உதிரிக் கட்சிகளுக்கு கிடைக்கும்.

இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் அரண்டு போயிருக்கின்றன.
மேலும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படிதான் மதிமுக விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளை தங்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் விடாப்பிடியாக வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.

இதனால் தேர்தல் கூட்டணி அமையும்போது எந்த கட்சிகள் திமுக அணியில் இருக்கும் என்பது கேள்விக்குரிய விஷயமே.

DMK - Congress - Updatenews360

இதுகுறித்து பெயரை வெளிப்படுத்த விரும்பாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், “இப்போது ஸ்டாலினுக்கு ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பது மட்டுமே குறி. அதனால் பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால்தான் திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டார் என்று நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். ஏனென்றால் பிரசாந்த் கிஷோர் எப்போதும் ஜெயிக்கிற மாதிரி தெரிகிற குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவார்.
அதுபோல்தான் இங்கு திமுக வுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இருக்கிறார். அவருக்கு கூட்டணி கட்சிகளின் அருமை, வலிமை பற்றி தெரியவில்லை. கூட்டணிக் கட்சிகளை அதிகப்படுத்தி தன்னுடன் வைத்துக்கொண்டு வெற்றி இலக்கை நோக்கி செல்வதுதான் கருணாநிதியின் தேர்தல் உத்தி. ஆனால் அவருடைய மகனோ
அதற்கு நேர்மாறாக இருக்கிறார்.

அண்ணாவும், கருணாநிதியும் பேச்சுத் திறமையால் ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் ஸ்டாலினிடம் கொஞ்சமும் பேச்சு சாதுர்யம் இல்லை.

இதனால்தான் அவர் பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை நாடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்.
கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து செல்லாமல் ஸ்டாலின் ஒதுக்குவதற்கும் இதுதான் காரணம். அதேநேரம் கூட்டணியில் இல்லாத வேறு கட்சிகளுக்கு மறைமுக அழைப்பும் விடுக்கிறார். அதற்காக திரைமறைவு பேச்சும் நடத்துகிறார்.
இந்தத் தேர்தலில் திமுக தோற்றால் அதற்கு கூட்டணிக் கட்சிகளை அவர் நடத்தும் விதமும், பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை முழுக்க முழுக்க கேட்டு நடப்பதுமே காரணமாக அமையும்” என்று ஆதங்கத்துடன் கூறினர்.

“ஐபேக் டீம் உத்திகளின்படி வெற்றி பெறவில்லை என்றால் அது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். எதிர்காலத்தில் கூட்டணி கட்சிகளுடன் அவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அணுகுவார்கள்” என்றும் அந்தத் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இது நியாயமான கேள்வியாகத்தான் தெரிகிறது.

ஆக, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் திமுக கூட்டணி கட்சிகளை தேர்தலுக்கு முன்பே காலிபண்ணி விடும் போல் தெரிகிறது.

Views: - 0

0

0