ஒரு தொகுதிக்காக ‘கை’யேந்தும் காங்கிரஸ் : பாஜகவால் திமுக கூட்டணியில் குழப்பம்..!!

Author: Babu
5 January 2021, 6:31 pm
Congress - updatenews360
Quick Share

அதிமுகவிடம், பாஜக கேட்கும் 38 தொகுதிகள் பற்றிய பட்டியல், வேட்பாளர்கள் விவரம் சமூக ஊடகங்களில் வெளியானது முதலே, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், சோர்வுக்கும் உள்ளாகிவிட்டனர். அதன் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி நிம்மதியாக உறங்கி இருப்பாரா? என்பதும் சந்தேகம்தான்.

கட்சிக்குள் பூசல் வராமலிருக்க அண்மையில்தான் துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு நீண்ட நெடிய நிர்வாகிகள் பட்டியல் ஒன்றை காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன் வெளியிட்டு, அவர் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு, கண் அயர்ந்திருந்தார்.

Alagiri- updatenews360-min

அதற்குள் அதிமுகவிடம் பாஜக வைத்த தொகுதிகள் கோரிக்கை பட்டியல் கே.எஸ். அழகிரியை தட்டி எழுப்பி விட்டுள்ளது.
தேசிய கட்சியான பாஜக ஒரு வழியாக அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. ஆனால், ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸோ, இன்று பேச்சு வார்த்தைக்கு தங்களை திமுக எப்போது அழைக்கும் என்று ஏங்கி, தவியாய் தவித்து காத்துக் கிடக்கிறது.

Congress_UpdateNews360

தமிழக காங்கிரசின் இந்த காத்திருப்புக்கு பல பின்னணிக் காரணங்கள் உண்டு. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து இரு முறை கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. 2011 தேர்தலில் காங்கிரசுக்கு 63 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. ஆனால் காங்கிரஸ் வென்றதென்னவோ வெறும் 5 இடங்களில் மட்டுமே. இப்படி காங்கிரசின் Strike Rate குறைந்ததால் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிரடியாக பெருமளவில் தொகுதிகளை குறைத்தது. மொத்தம் 41 சீட்டுகளை மட்டுமே ஒதுக்கியது. அதாவது முந்தைய தேர்தலைவிட 22 தொகுதிகளை குறைவாக கொடுத்தது. இதில் ஓரளவு முன்னேற்றம் கண்ட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது.

ஆனால் 2016-ல் தங்கள் ஆட்சி கனவு பலிக்காமல் போனதற்கு, காங்கிரஸ் தான் முழுக்காரணம் என்று திமுக இன்று வரை உறுதியாக நம்புகிறது. அதனால் இம்முறை திமுக அணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.தமிழக காங்கிரசும் முதலில் இதுபற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல்தான் இருந்தது. ஆனால் பாஜகவின் தொகுதிகள் கேட்பு பட்டியலை சமூக ஊடகங்கள் வெளியிட்ட பின்பு விழித்துக் கொண்டுவிட்டது.

admk - bjp - updatenews360

அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு எப்படியும் 27 முதல் 29 தொகுதிகள் கிடைக்கும் என்பது உறுதியாக தெரிய வருவதால் காங்கிரசுக்கு புதிய தலைவலி ஒன்றும் உருவாகி விட்டது. ஏற்கனவே தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட தலைவர்கள், அவர்களின் வாரிசுகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசை கட்டி நிற்கின்றனர்.
திமுக ஒதுக்கும் தொகுதிகளை இவர்களுக்கு பங்கு வைப்பதே விழி பிதுங்க வைத்து விடும்.

இந்த நிலையில் 25 சீட்டுகளை மட்டுமே காங்கிரசுக்கு திமுக ஒதுக்கும் என்று கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை விட கூடுதலாக நான்கைந்து தொகுதிகளிலாவது போட்டியிடவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. இந்த கணக்கின்படி பார்த்தால் 30 முதல் 35 தொகுதிகள் வரை போட்டியிட காங்கிரஸ் ஆசைப்படுவது தெளிவாய் தெரிகிறது. ஆனால் இது நிராசை ஆவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

stalin-ks-alagiri-updatenews360

இத்தனை தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு கிடைப்பதைவிட ஒரு தொகுதியாவது கூடுதலாக பெற்று தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதில் தற்போது தமிழக காங்கிரஸ் மிக உறுதியாகவும், தீவிரமாகவும் உள்ளதாம். இது தங்களுக்கு கௌரவப் பிரச்சினை என்பதால் இதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கிச் சென்று திமுகவிடம் ‘கை’யேந்த காங்கிரஸ் தயாராகி விட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் காந்தியை மீறி தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதால் இங்குள்ள தலைவர்கள் விழி பிதுங்கியும் நிற்கிறார்கள். தமிழக காங்கிரஸ் நிலையை கண்டால் பரிதாபமாகத்தான் இருக்கிறது!

Views: - 129

0

0