அதிமுக கூட்டணியில் காங். இணைகிறதா?… அரசு நிகழ்ச்சிகளில் காங். எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 9:18 pm
DMK Cong
Quick Share

அதிமுக கூட்டணியில் காங். இணைகிறதா?… அரசு நிகழ்ச்சிகளில் காங். எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை!

தமிழகத்தில் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து அல்லது ஆறு தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படும் தகவலால் டெல்லி மேலிடம் அதிர்ந்து போய் உள்ளது.

திமுக தலைமை தமிழக காங்கிரசை குறைத்து மதிப்பிடுவதாக கருதும் சோனியா, ராகுல், கார்கே மூவரும் 2019 தேர்தலில் ஒதுக்கியது போல ஒன்பது தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் திமுகவோ இதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அதுவும் தமிழகத்துக்கான டெல்லி மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் இதே கோரிக்கையை திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாக வைத்தும் கூட எந்த பலனும் இல்லாமல் போனது.

இந்த நிலையில்தான், திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக மேலிட காங்கிரஸ் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

திமுக அரசு சார்பில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் என யாருமே கலந்து கொள்ளக் கூடாது என்று சோனியா வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார், என்கிறார்கள்.

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இது போன்ற அதிரடி முடிவை எடுப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 25 ம் தேதி காலை இந்த முடிவு எடுக்கப்பட்டு அது உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இதனால்தான் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பிப்ரவரி 26-ம் தேதி மாலையில் நடந்த கருணாநிதி நினைவிட திறப்பு விழாவிற்கு
திமுக அழைப்பு விடுத்திருந்தும் கூட காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் என யாருமே கலந்து கொள்ளவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை முன்னாள் தலைவர்களான கே எஸ் அழகிரி, ஈ வி கே எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் போன்றோர் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

அதேநேரம் திமுகவின் அதி தீவிர விசுவாசிகளாக மாறிவிட்ட கே வி தங்கபாலு மற்றும் தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பதவி வகிக்கும் பீட்டர் அல்போன்ஸ் இருவர் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேவி தங்கபாலு தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு எம்பி சீட் கேட்டிருப்பதால் வேறு வழியின்றி கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார், என்கின்றனர். மூத்த காங்கிரஸ் நிர்வாகியான பீட்டர் அல்போன்ஸ் இந்தியாவின் விடிவெள்ளி ஸ்டாலின் என்று வர்ணித்தவர். தமிழக அரசின் பதவியிலும் இருக்கிறார். அதனால் அவர் பங்கேற்றதை காங்கிரஸ் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.

அதேநேரம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கார்கேயும், பொதுச் செயலாளர் கே சி வேணுகோபாலும் 26ம் தேதி அவரை டெல்லிக்கு வரவழைத்து திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இரண்டாவது நாளாக பிப்ரவரி 27ம் தேதியும் இது நீடித்தது. மூன்று மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கார்கேயுடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாரும் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். அப்போது திமுக தரப்பில் மிகக் குறைந்த அளவில் தொகுதிகளை ஒதுக்குவதற்குத்தான் முன் வந்துள்ளனர். இது அஜோய் குமாருக்கும் நன்றாகத் தெரியும் என செல்வப் பெருந்தகை போட்டு உடைத்துள்ளார்.

இதைக் கேட்டு கடும் அப்செட்டுக்கு உள்ளான கார்கே, “நாம் ஏன் திமுகவையே நம்பியிருக்க வேண்டும், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமே? திமுகவிடம் நாம் ஐந்து ஆறு தொகுதிகளை போராடி பெற்று போட்டியிடுவதை விட அதிமுகவிடம் 12 தொகுதிகள் வரை நம்மால் வாங்கிவிட முடியும். அதில் கணிசமான அளவிற்கு நமக்கு வெற்றியும் கிடைத்துவிடும்” என்ற யோசனையை தெரிவித்திருக்கிறார்.

இப்படியொரு சிந்தனை டெல்லி செல்வதற்கு முன்பாகவே செல்வப் பெருந்தகையிடம் இருந்துள்ளது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை ஒரு நண்பரின் வீட்டு விழாவில் சந்தித்தேன். அப்போது அவர் என்னை வருக வருக என வரவேற்றார். அப்படியே எங்களது கூட்டணிக்கும் வாருங்கள்” என்று அழைப்பும் விடுத்தார் என குறிப்பிட்டார்.

இதை திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் செல்வப் பெருந்தகை ஏன் கூறினார் என்பது பெரும்பாலானவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. ஆனால் அவர் எங்களுக்கு இன்னொரு கூட்டணியின் கதவும் திறந்தேதான் இருக்கிறது. அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்பதை திமுக தலைமைக்கு சுட்டிக்காட்டும் விதமாகத்தான் அப்படி கூறியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே கார்கே சொல்லித்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் தீட்டப்பட்டதா அல்லது செல்வப் பெருந்தகை காங்கிரஸ் மேலிடத்திற்கு அந்த யோசனையை தெரிவித்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இது தொடர்பான தகவலை பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது என்பதை தெரிந்து கொண்டவுடன் திமுக விழித்துக் கொண்டு விட்டது. உடனடியாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரசுக்கு அவசர அழைப்பு விடுத்தும் இருக்கிறது.

“காங்கிரஸ், அதிமுக பக்கம் சாய்ந்து விடாமல் இருக்க அக்கட்சி கேட்கும் ஒன்பது தொகுதிகளை ஒதுக்குவதற்கு திமுக ஒப்புக் கொண்டு விடும்”என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“அதேநேரம் எதிர்பார்க்கும் தொகுதிகளை திமுக ஒதுக்காவிட்டால், அதிமுகவுடன் கைகோர்க்க காங்கிரஸ் தயங்காது. அதற்காக இண்டியா கூட்டணியில் அதிமுக இணையும் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் தேசிய அளவில் ஒரே அணியில் இருக்கும் காங்கிரஸும், மார்க்சிஸ்ட்டும் கேரளாவில் எதிரும் புதிருமாகத்தான் உள்ளன. அதனால் இண்டியா கூட்டணியில் இணையவேண்டும் என்ற கோரிக்கையை அதிமுகவிடம் காங்கிரஸ் வைக்க வாய்ப்பில்லை.

அதே சமயம் திமுக கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் கடந்த தேர்தலை விட இம்முறை ஓரிரு தொகுதிகளை கூடுதலாக கேட்பதற்கு முக்கிய காரணமே, பாஜக கூட்டணியில் தற்போது அதிமுக இல்லை என்பதுதான். இதற்கு முன்பு இந்த கட்சிகள் இப்படி திமுகவிடம் வெளிப்படையாக கேட்டதில்லை. அதாவது திமுகவை மறைமுகமாக மிரட்டுவதற்கு அதிமுகவை ஆயுதமாக திமுக கூட்டணி கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் ஒரு படி மேலே போய் அரசு சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் எம்பிக்களோ, எம்எல்ஏக்களோ கலந்து கொள்ளக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் தயார் என்று ஒரு செய்தியை டெல்லி மேலிடம்
திட்டமிட்டு ஊடகங்களில் பரப்பியும் விட்டது.

இதற்கு எதிர்பார்த்த பலனும் காங்கிரஸுக்கு கைமேல் கிடைத்துள்ளது. திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பது உறுதியாக தெரிய வராத நிலையில் பிப்ரவரி 29ம் தேதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை திரும்பிய செல்வப் பெருந்தகை திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் எம்பி சீட் பிரச்சினையை காரணம் காட்டி வெளியேறாது என்பதை உறுதியாக கூற முடியும். ஏனென்றால் ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த கட்சிகள் எல்லாம் தேர்தல் ஆதாயத்தை மட்டுமே கணக்கு போட்டுத்தான் கூட்டணியிலேயே நீடிக்கின்றன.

இதில் தமிழக காங்கிரஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. திமுக ஐந்து இடங்களை ஒதுக்கி இந்த தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் வேட்பாளர்கள் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்று நிபந்தனை விதித்தாலும் அதையும் கூட அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு தமிழக காங்கிரஸின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் எப்போதோ வந்து விட்டனர்.

மாறாக அதிமுகவுடன்தான் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று டெல்லி மேலிடம் முடிவெடுத்தால் 1996ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்த கதை மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் சோனியாவையும், ராகுலையும் எதிர்க்கும் அளவிற்கு இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் துணிச்சலுடன் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அனைவருமே திமுக நிர்வாகிகள் போல மாறிப்போய் விட்டதுதான். திமுக அரசில் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஏதாவது நடந்தால் அதை கண்டிக்காமல் கூட்டணி தர்மத்தை காரணம் காட்டி காங்கிரஸ் பதுங்கிக் கொண்டதால்தான் அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்ச்சியே காணாமல் போய்விட்டது.

திமுகவிடம் அதிக தொகுதிகளை பேரம் பேசி வாங்கவேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸ் இந்த நாடகத்தையே நடத்துவதாக தெரிகிறது. அதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸோ, விசிகவோ வெளியேறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

மேலும் ஒரே நேரத்தில் மத்திய பாஜக அரசையும், மாநில திமுக அரசையும் அதிமுக துணிந்து எதிர்ப்பதால் இருதரப்பில் இருந்தும் பல்வேறு நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
போதாக்குறைக்கு பிரபல டிவி செய்தி சேனல்கள் சிலவும் திட்டமிட்டு அதிமுகவுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்குகின்றன. எனவே இந்த சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமான முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தால்
அதிமுகவின் எதிர் காலத்துக்கு நல்லது.

குறிப்பாக பாமக, தேமுதிகவை தனது கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சி மட்டுமே அதிமுகவிற்கு கைகொடுக்கும். இக் கூட்டணி அமைந்துவிட்டால் பலத்த மும்முனை போட்டியில் 32 சதவீத வாக்குகளை பெற்று 14 முதல் 16 தொகுதிகள் வரை வெற்றி கண்டு விட முடியும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

அதிமுகவுடன் யார் கூட்டணி அமைக்கப் போகிறார்கள்? என்பதற்கு இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான விடை கிடைத்துவிடும் என்று நம்பலாம்!

Views: - 105

0

0