தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரசில் குடுமிப்பிடி சண்டை : புதிய பொறுப்பாளர் குண்டுராவைக் குழப்பும் கோஷ்டிகள்!!
25 September 2020, 7:38 pmசென்னை: தமிழ்நாட்டுக்கு முதன்முதலாக நேற்று வருகை புரிந்த மாநிலத்தின் புதிய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திக்குமுக்காடிப் போகும் வகையில், கட்சியினர் ஒருபக்கம் வரவேற்பு கொடுத்தாலும், கட்சியில் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று பல கோஷ்டிகளும் கச்சை கட்டியதால் அவருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மீது புகார்ப் பட்டியல் வாசித்த பல தலைவர்களும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவாளராக அரசியலைத் தொடங்கிய அழகிரிக்கு, 2009 நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்கித் தந்து வெற்றிபெறச் செய்தது சிதம்பரம்தான். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் சிதம்பரமே அழகிரிக்குப் பெற்றுக்கொடுத்தார்.
ஆனால், தலைவரானதும் சிதம்பரத்துக்கு ஆதரவாக அவர் இல்லை என்று கோபம் அவருக்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஊழல் வழக்கில் சிதம்பரம் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த அழகிரி போராட்டம் எதையும் உடனடியாக அறிவிக்கவில்லை. தாமதமாக அறிவிக்கப்பட்ட போராட்டத்திலும் தொண்டர்களோ, மக்களோ கூடவில்லை. போராட்டமும் முறையாக நடத்தப்படாமல் பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றது.
சிதம்பரம் கைதுக்கு தமிழ்நாட்டில் மக்கள் மத்தியிலும், காங்கிரஸ் தொண்டர்களிடமும் எந்தவித எதிர்ப்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே காங்கிரஸ் நடத்திய போராட்டம் உதவியது. இதனால், அழகிரியின் மீது சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் கடும் கோபத்தில் இருப்பதால் அழகிரியை நீக்கிவிட்டு, கார்த்தி சிதம்பரத்தையே தலைவராக்கலாம் என்று சிதம்பரம் முடிவெடுத்துக் களத்தில் இறங்கியுள்ளார். சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது திமுக தலைவர்கள் யாரும் ஒப்புக்குக் கூட கண்டனம் தெரிவிக்காத நிலையில், திமுகவை அழகிரி உரிய முறையில் எதிர்க்கவில்லை என்பதும் சிதம்பரம் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபிறகு அந்தத் தேர்தலில் இடங்கள் ஒதுக்குவதில் திமுக காங்கிரசை முறையாக நடத்தவில்லை என்று அழகிரி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார். இதற்கு, திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சமாதானம் செய்தார். திமுகவை எதிர்த்தால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் இருக்க முடியாது என்று தெரிந்துகொண்ட அழகிரி, அதன்பின் சிதம்பரத்துக்காக திமுகவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இதனால், தேர்தலுக்கு முன் கார்த்தியைத் தலைவராக்க சிதம்பரம் காய் நகர்த்தி வருகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் களத்தில் இறங்கியிருப்பதை அறிந்த மற்ற கோஷ்டிகளும் கோதாவில் குதிக்க உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டதை அடைந்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதால் தலைமைப் பதவிக்கான போட்டியில் விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூரும் இறங்கியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியும் பெண் ஒருவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தனக்குத் தலைமை பதவி கேட்டுவருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமாருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டிருப்பதால் அவர் போட்டியில் இறங்கவில்லை. வன்னியர் ஒருவருக்கு காங்கிரஸ் தலைமைப் பதவி தரப்பட்டால் வட மாவட்டங்களில் கட்சி வளரும் என்று விஷ்ணுபிரசாத்தும் பந்தயத்தில் சேர்ந்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒருவருக்குப் பதவி தரப்பட்டால் மற்ற தலைவர்கள் தேர்தலில் வேலை பார்க்கமாட்டார்கள். ஏற்கனவே, கூட்டணியில் காங்கிரசுக்குக் குறைவான இடங்களே ஒதுக்க வேண்டும் என்ற கருத்து திமுகவில் நிலவிவரும்போது, கட்சிக்குள் தலைவர் பதவிக்காக நடக்கும் சண்டை இடங்கள் ஒதுக்குவதிலும் தேர்தலில் வெற்றிபெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் புலம்பி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் காங்கிரசுக்குள் இருக்கும் குழப்பத்தை சரிசெய்யும் கடினமான பணி போதிய அனுபவம் இல்லாத தினேஷ் குண்டுராவிடம் இருப்பதும் தொண்டர்களை கவலை அடையச் செய்துள்ளது.