தேர்தல் முடிவுக்காக காங்., காத்திருப்பு : கே.எஸ்.அழகிரியின் தலைவர் பதவி தப்புமா?

14 April 2021, 6:53 pm
Congress - alagairi - updatenews360
Quick Share

திமுக கூட்டணியில் தமிழக தேர்தல் முடிவுகளை மற்ற எல்லோரையும் விட மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பவர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி என்று சொல்லலாம். அதற்கான காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும்.

கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவிடம் தொகுதி பங்கீடு பேரத்திற்காக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சத்தியமூர்த்தி பவனுக்கும், அண்ணா அறிவாலயத்திற்குமாக அலையாய் அலைந்தது அவர்தான். எப்படியும் 30 தொகுதிகளுக்கு குறையாமல் திமுகவிடம் வாங்கி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்த அவருக்கு கடைசி ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இத்தனைக்கும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது திமுக தலைவர்கள் தங்களை நடத்திய விதம் குறித்து தனது கட்சி நிர்வாகிகள் இடையே அவர் கண்ணீர்விட்டு அழவும் செய்தார்.
ஆனாலும் திமுக மசியவில்லை.

Stalin_KSAlagiri - updatenews360

இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைத்தபோது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோருடன் சேர்ந்துகொண்டு அதற்கு முட்டுக்கட்டை போட்டவரும் கே.எஸ். அழகிரிதான்.

அத்துடன் அவருடைய தலைவலி ஓயவில்லை. திமுக 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த பின்பும் கூட பிரபல தலைவர்களின் வாரிசுகளுக்கும், பணக்காரர்களுக்கும் சீட்டுகளை பேரம் பேசி விற்று விட்டார் என்ற குற்றச்சாட்டும் கே.எஸ். அழகிரி மீது விழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டைக் கூறியவர் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்பியான ஜோதிமணி ஆவார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையேயான பனிப்போர் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

69 வயது அழகிரி இரண்டு வருடங்களுக்கு முன்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார். கட்சியை வளர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் எந்த நேரமும் திமுகவுடனேயே ஒட்டிக் கொண்டிருந்ததாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் உண்டு.

ஒருமுறை நாடாளுமன்ற எம்பி ஆகவும், இருமுறை எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்துள்ள கே.எஸ்.அழகிரிக்கு அவ்வளவாக அரசியல் அனுபவம் போதாது என்றும் கூறுவார்கள்.

இந்த சூழலில்தான் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் அவருக்கு ஒரு அக்னி பரீட்சையாக அமைந்துவிட்டது. தன் மீது கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால், தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் குறைந்தபட்சம்
9 தொகுதிளிலாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற கடும் நெருக்கடியில் அவர் இருக்கிறார்.

அது என்ன 9 இடங்களில் வெற்றி? ஏன் இரட்டை இலக்கங்களில் அது இருக்கக் கூடாதா? என்ற கேள்வி எழலாம்.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் வென்றது என்னவோ வெறும் ஐந்தே ஐந்து தொகுதிகள்தான்.

Stalin Meet KS Alagiri- updatenews360

2016 தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டது. அப்போது காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் 25 ஆக குறைந்து போய் விட்டது.

எனவே கடந்த தேர்தலை விட ஒரு தொகுதியிலாவது கூடுதலாக காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும் என்று கே.எஸ். அழகிரி விரும்புகிறார். இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி என்பது காங்கிரஸ் மேலிடத்தின் ஆசையாக இருந்தாலும் கூட, இதுவும் நடப்பதற்கான சாத்தியக் கூறு இல்லை என்றே கூறவேண்டும்.

காங்கிரஸ் சார்பில் 5 தொகுதிகளில், பிரபல தலைவர்களின் வாரிசுகளும் 15 சீட்களில் பெரும் கோடீஸ்வரர்களும் இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்சியில் உண்மையான விசுவாசிகள், கடும் உழைப்பாளிகள் 5 பேருக்கு மட்டுமே சீட் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கடைசியாக வெளியான 3 கருத்துக் கணிப்புகளில் காங்கிரசும், தங்களது சொந்த மற்றும் தனி சின்னங்களில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் அதிக அளவில் தோற்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்துபோய் இருப்பது திமுக மட்டுமல்ல காங்கிரசும்தான்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, காங்கிரஸ் தலைவரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

ஆனால் தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டு விட்டதால், இதன் மீது எந்த நடவடிக்கையையும் டெல்லி காங்கிரஸ் மேலிடம் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மாநில தலைவரை மாற்றினால் பிரச்சினைகள் உருவாகலாம் என்று கருதி அந்தத் திட்டத்தை காங்கிரஸ் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது.

எனவே, வருகிற 2-ம் தேதி நடைபெறவுள்ள ஓட்டு எண்ணிக்கை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரியிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது, என்கின்றனர்.

Nellai KS Alagiri Byte - updatenews360

இதை ஆமோதிப்பதுபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது,
“கடந்த தேர்தலில் திமுக தோல்வி கண்ட 15 தொகுதிகள், இந்தமுறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படிப் பார்த்தால், தமிழக காங்கிரஸ் போட்டியிடுவது
10 இடங்களில்தான். இந்த 10 தொகுதிகளிலும் காங்கிரசால் எளிதில் வெற்றி பெற முடியுமா? என்பது கேள்விக்குறியே.

தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடும் 5 தொகுதிகளில் மூன்றில் வெற்றி கிடைக்கலாம். அப்படி என்றால் மிச்சமுள்ள 20 தொகுதிகளில் 7-ஐ கைப்பற்றினால் மட்டுமே இரட்டை இலக்க வெற்றி என்பது சாத்தியம். போட்டி மிகக் கடுமையாக உள்ள நிலையில், கடந்தமுறை காங்கிரஸ் வென்றதை விட ஒரு தொகுதி கூடுதலாக கிடைத்தாலும் கூட கே.எஸ். அழகிரி மகிழ்ச்சி அடையத்தான் செய்வார்.

இதன் மூலம் அவருக்கு உள்ள பல்வேறு நெருக்கடிகள் தீர்ந்துவிடும். குறிப்பாக, பணம் வாங்கிக் கொண்டுதான் காங்கிரஸில் சீட் கொடுக்கப்பட்டது என்ற ஜோதிமணியின் குற்றச்சாட்டுக்கு எந்த பலனும் இல்லாமல் போய்விடும். அதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியும் தப்பிவிடும். அதோடு மட்டுமின்றி மாநிலத்தில் கட்சியை வளர்க்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் அடிபட்டுப் போகும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய நிலையில், காங்கிரஸ் 5 தொகுதிகளுக்கும் குறைவாக தோற்றால் மட்டுமே, தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவி பறிக்கப்படும் என்று சில நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை, துடிப்பான இளம் எம்பி ஜோதிமணியிடம் ஒப்படைத்தால் தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்துவார் என்று ராகுல் காந்தி கருதுவதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

தமிழக தேர்தல் முடிவுகளை பொறுத்தே, கே.எஸ்.அழகிரியின் தலைவர் பதவி தப்புமா? என்பது தெரியவரும். எனவேதான் மே 2-ம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் மற்றவர்களைவிட கே.எஸ்.அழகிரியும் அவருடைய ஆதரவாளர்களும் மிகுந்த ஆர்வத் துடன் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை!

Views: - 33

0

0