காங்., தலைவர்களுக்கு பா.ஜ.க.வுடன் தொடர்பு : ‘நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்’..! ராகுலுக்கு கபில்சிபில் பதிலடி..!

24 August 2020, 1:53 pm
sibbal-rahul_ updatenews360
Quick Share

காங்கிரஸ் தலைவர்களுக்கு பா.ஜ.க.வுடன் தொடர்பு இருப்பதை நிரூபித்து விட்டால், அரசியலை விட்டு விலகத் தயார் என்று ராகுல் காந்திக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபில் சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத தோல்வியை சந்தித்தது. இதனால், அதிருப்தியடைந்த அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மீண்டும் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

ஆனால், உடல்நலக்குறைவால் முன்பை போல செயல்பட முடியாத நிலையில் சோனியா காந்தி இருந்து வருவதால், கட்சியை பலப்படுத்த முடியாது என காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மூத்த தலைவர்களின் அதிருப்திக்கு மத்தியில் தலைவர் பதவியை வகிக்க முடியாது என்பதை உணர்ந்த சோனியா காந்தி, இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு பரிந்துரைத்தார்.

இதனிடையே, தலைமையை மாற்ற வேண்டும் என கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்களுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும். சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், சோனியா காந்தி உடல்நலம் பாதித்துள்ள நிலையில் தலைமையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன..? என்றும், காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதம் பொது வெளியில் வெளியானது எப்படி..? எனவும் கூறிய அவர், தலைமை மாற்றம் குறித்த விவாதிக்க வேண்டியது ஊடகத்தில் அல்ல எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், “பா.ஜ.க.வுடன் தொடர்பிருப்பதை நிரூபித்து விட்டால் அரசியலை விலகத் தயார். கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ.க.விற்கு சாதகமான கருத்தைக் கூட கூறியதில்லை. காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருகிறேன். அண்மையில் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாதாடி வெற்றி கண்டோம்.,” எனத் தெரிவித்தார்.

இதேபோல, மற்றொரு காங்., தலைவர் குலாம்நபி ஆசாத், ” பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்யத் தயார்,” என்றார்.

தலைமையை மாற்றக் கோரி காங்கிரஸ் மேலிடத்திற்கு கையெழுத்திட்டு கடிதம் எழுதிய 23 காங்., தலைவர்களின் பட்டியலில் கபில் சிபில், குலாம் நபி ஆசாத்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருத்தை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அதனை திரும்பப் பெறுவதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராகுல் காந்தி, என்னை பற்றி கூறவில்லை என விளக்கம் அளித்ததாகவும் மீண்டும் டுவிட் போட்டுள்ளார்.

Views: - 0

0

0