தொகுதி பங்கீட்டில் திமுக பிடிவாதம் : கடும் அதிருப்தியில் காங்.,மதிமுக, CPM… கூட்டணியில் இருந்து விலக முடிவு?

5 March 2021, 11:54 am
DMK alliance - updatenews360
Quick Share

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு கடந்த ஒரு வாரமாகவே அண்ணா அறிவாலயத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டன.

ஆனால் அந்த அணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, CPM என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்ட மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டும் திமுக தருவதாக சொன்ன தொகுதிகளின் எண்ணிக்கையை கேட்டு ‘அப்செட்’ ஆகிப் போயிருக்கின்றன. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவை மீண்டதாகவும் தெரியவில்லை.

41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இதுவரை சம்பிரதாய முறையில் இரண்டு முறையும், அதிகாரபூர்வமாக இரு தடவையும் பேசியுள்ளது. முதலில் 12 தொகுதிகள் தருவதாக சொன்ன திமுக, பின்னர் கொஞ்சம் தாராளம் காட்டி 15 தொகுதிகள் கொடுக்கிறோம் என்று கூறியது.

congress DMK - updatenews360

இத்தனைக்கும் காங்கிரஸ் சார்பில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, தமிழக தலைவர் கே எஸ்.அழகிரி உள்ளிட்டோர் நேரடி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றிப் பேசும்போது, கறாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே உம்மன் சாண்டியை ராகுல்காந்தி அனுப்பி வைத்திருந்தார்.

ஆனாலும் திமுக தலைவர்கள் ரொம்பவும் சிக்கனம் காட்டியதால் பேச்சுவார்த்தையை பின்னர் தொடரலாம் என்று கூறிவிட்டு அவர்கள் வெளியேறினர். அதிகாரபூர்வ இரண்டாம் சுற்றில் காங்கிரசுக்கு 18 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக திமுக உறுதி அளித்தது. ஆனால் 36 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். திமுக அந்தளவிற்கு தொகுதிகளை ஒதுக்குமா? என்பது சந்தேகம்தான்.

குறைந்தபட்சம் 32 தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றால் திமுக அணியிலிருந்து வெளியேறி, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. அதற்கு முன்னோட்டமாக மாவட்ட செயலாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கருத்தும் கேட்டுள்ளது. ராகுல் காந்தி சொன்ன யோசனையின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Rahul_Gandhi_UpdateNews360

இதை அறிந்ததும், பதறிய திமுக 21 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாக தற்போது மீண்டும் காங்கிரசை பேச்சுக்கு அழைத்து இருக்கிறது. இது கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் பாதிதான் என்பதால் காங்கிரஸ் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இருதரப்பிலும் மூன்றாம் சுற்று பேச்சு விரைவில் நடக்கலாம்.

இதிலும் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் வாய்ப்புகளே அதிகம். மேலும் 7-தேதி திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டின்போது கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சி தலைவர்களை பங்கேற்க வைத்து விடவேண்டும் என்பது திமுகவின் எண்ணம்.

அதன் காரணமாகவும் வலியச் சென்று காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுத்து இருக்கிறது என்கிறார்கள். தனது கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக கருதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் நிலைமையோ இன்னும் மோசம். அக்கட்சி 12 தொகுதிகள் கேட்டுள்ளது. 2001, 2006, 2011 ஆகிய மூன்று தேர்தல்களிலும் திமுக, அதிமுக கூட்டணிகளில் சராசரியாக போட்டியிட்ட 10 தொகுதிகள் கிடைத்தால் கூடபோதும் என்று நினைக்கிறது. ஆனால் திமுக தருவதாக சொன்னது என்னவோ
6 சீட்டுகள்தான்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
முதல் சுற்று பேச்சுவார்த்தையோடு நின்றுவிட்டது. திமுகவும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இவர்களும் அறிவாலய கதவுகளை தட்டவில்லை.

cpm - updatenews360

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அவசர அவசரமாக சென்னையில் 6-ம் தேதி கூடுகிறது. இது திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு பற்றிய இழுபறியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை என்றாலும்கூட
தமிழகத் தேர்தல் வரலாற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இதுபோல் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த தேர்தலில், குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெற முடியாமல் போனால் தேசிய அளவில் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு சின்னமும் பறிபோகும் நிலை ஏற்படும் என்பதால்தான் குறைந்தபட்சம் 10 தொகுதிகள் வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.

திமுக கூட்டணியில் உள்ள இன்னொரு பிரதான கட்சியான மதிமுக முதலில் கேட்டதோ 18 தொகுதிகள். அந்த பட்டியலை திமுகவிடம் கொடுத்தபோது, அதை வாங்கி படித்துகூட பார்க்காமல் அப்படியே ஒரு ஓரமாக வைத்து விட்டார்களாம். இதனால் உடனடியாக 12 தொகுதிகளின் லிஸ்ட்டை மதிமுக நிர்வாகிகள் கைப்பட எழுதி கொடுத்திருக்கின்றனர்.

கூட்டணியில் கட்சிகள் நிறைய இருக்கின்றன. எனவே 5 தொகுதிகளே உங்களுக்கு அதிகம் என்று திமுக தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இரண்டாவது சுற்றுபேச்சுக்கு மதிமுகவை அழைத்தபோதும் இதே பதில்தான் கிடைத்து இருக்கிறது.

Stalin Vaiko - Updatenews360

இத்தனைக்கும், ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பேன் என்று 2017-ல் முதன்முதலாக சபதம் எடுத்தவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான். அவருடைய கட்சியே இப்போது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

தனது கூட்டணியில் இருந்து மதிமுக தானாகவே கழன்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே திமுக இந்த தந்திரத்தை கையாள்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் 2011 போல் தேர்தலை மதிமுக புறக்கணிக்கவும் செய்யலாம்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கப்போகிறது? என்பதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் விடை கிடைத்துவிடும்.

Views: - 38

0

0