காங்., கூட்டத்தில் வாய்ஸ் இழந்து நின்ற கேஎஸ் அழகிரி… முன்னேறிச் செல்லும் செல்வப்பெருந்தகை… காங்கிரஸில் வெடித்த புது அரசியல் கலாட்டா…!!

Author: Babu Lakshmanan
8 April 2022, 5:17 pm
Quick Share

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது என்றாலே அன்றைய நாளில் ஏதாவது ஒரு சுவாரஸ்யம் நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து விடுகிறது.

பெரும்பாலும் ‘அது எங்கள் தலைவருக்கு மேடையில் உட்கார இடம் ஒதுக்கவில்லை’ என்ற எதிர்ப்பு காரணமாக உருவாகும் மோதாலாக இருக்கும். சில நேரங்களில் அது கோஷ்டிப் பூசலாக மாறி வேஷ்டி, சட்டைகளை கிழித்துக்கொள்ளும் வைபவத்திலும் முடியலாம்.

காங்., கூட்டத்தில் புதிய கூத்து

சிலநேரம் தலைவர்களே ஒருவருக்கொருவர் மனதில் பட்டதை மேடையில் வெளிப்படையாகப் பேசி, வம்பில் சிக்கிக் கொள்வதும் உண்டு.

இது போன்றதொரு நிகழ்வுதான் மிக அண்மையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கொண்டாட்டத்தில் அரங்கேறியது. அதுவும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.சீனிவாஸ் முன்னிலையில் இந்த கூத்து நடந்துள்ளது.

செல்வப்பெருந்தகை அதிரடி

இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது திடுக்கிடும் சில உண்மைகளையும் போட்டு உடைத்தார்.

“ஒரு காலத்தில் தமிழகத்தில் 44 சதவீத வாக்கு வங்கியை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி இப்போது 4 சதவீதமாக குறைந்து போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம் தான்தான் தலைவர் என்று ஒவ்வொருவரும் தங்களையே முன்னிலைப்படுத்திக் கொள்வதுதான். தங்கள் பின்னால் இருப்பவர்கள் யாரோ அவர்கள்தான் எம்எல்ஏ, எம்பி ஆக முடியும் என்பதுபோல் பேசுகிறார்கள்.

போஸ்டர்களில் ராகுல்காந்தி படத்தை ஸ்டாம்ப் அளவு படமாக போடுகிறார்கள். ஆனால் இந்த தலைவர்கள் படத்தை பெரிய அளவில் போடுகிறார்கள். இப்படி எந்த கட்சியிலாவது நடக்குமா…? இப்படியே ஒவ்வொருவரும் செயல்படுவதால்தான் கட்சி செயலிழந்து வருகிறது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

கேஎஸ் அழகிரி கோபம்..!!

இது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிக்கு சுரீர் என்று அடி கொடுத்தது போலாகி விட்டது.

உடனடியாக செல்வபெருந்தகையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, “எந்த கருத்தை எங்கே பேசுவது என்று இருக்கிறது. செல்வப்பெருந்தகை இந்த மாதிரி கட்சி விவகாரங்களை பொது இடங்களில் பேசக்கூடாது.

KS Alagiri - Updatenews360

பொது இடங்களில் பேசும்போது நேர்மறையான கருத்துகளையே சொல்வது மட்டும் நல்லது.

அதுதான் இளைஞர்களுக்கு உந்து சக்தியாகவும் இருக்கும். இல்லாவிட்டால் சோர்ந்து போவார்கள். நமக்கு தலைவர் ராகுல்காந்திதான். ராகுல்காந்தி அணி என்ற ஒரே அணிதான் நம்மிடம் இருக்க வேண்டும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேடையில் செல்வப்பெருந்தகை மீது கேஎஸ் அழகிரி இப்படி கோபப் பட்டதற்கு காரணம் உண்டு. ஏனென்றால் அவருடைய தயவால்தான், செல்வப்பெருந்தகைக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியே கிடைத்தது. மேலும் தனது தீவிர ஆதரவாளரான செல்வப்பெருந்தகை திடீரென இப்படி பேசுவார் என்று அழகிரி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

கேஎஸ் அழகிரி அதிருப்தி

இதில் வேடிக்கை என்னவென்றால் விழாவின் நிறைவாக பேசிய அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் அதிரடி காட்டி செல்வப்பெருந்தகையின் பக்கம் நின்றதுதான்.

“தமிழக இளைஞர் காங்கிரசில் புதிய உறுப்பினர்களாக 7 லட்சம் பேரை சேர்த்து விட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கே வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தால், அப்படி தெரியவில்லையே?…

மிகக் குறைந்த அளவில்தான் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள்.
இது நமக்கு மட்டுமல்ல கட்சி தொண்டர்களுக்கும் அதிருப்தி அளிக்கும் விதமாக உள்ளது.

ஒரு கட்சியில் இளைஞர்களின் எழுச்சி எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்பத்தான் கட்சியின் வளர்ச்சியும் இருக்கும். எனவே தமிழகத்தில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த தலைவர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்”என்று ஆதங்கத்துடன், அட்வைசும் செய்தார்.

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை

தமிழக இளைஞர் காங்கிரசில் முன்புபோல இளைஞர்கள் ஆர்வத்துடன் உறுப்பினர்களாக சேராதது ஏன்? இதற்கான காரணங்கள் என்ன?…என்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்துகளும் சிந்திக்கத் தூண்டுவதாக இருக்கிறது.

“2012-ம் ஆண்டில் 12 லட்சம் இளைஞர்களை தமிழக காங்கிரசில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 8.5 லட்சம் பேர்தான் சேர்க்கப்பட்டனர். இதிலும்கூட பல்வேறு கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டது பின்னர் அம்பலம் ஆனது. இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது. எனவேதான், கடந்த ஆண்டின் இறுதியில், டிஜிட்டல் முறையில் இளைஞர் காங்கிரசுக்கு18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.

Rahul_Sonia_UpdateNews360

மேலும் வயது சான்றிதழுடன் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்றும் ராகுல் உத்தரவிட்டிருந்தார். போலியாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுவதை தடுக்கவே இந்த நடைமுறையை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

அதேநேரம் அகில இந்திய அளவில் இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை கடந்த நவம்பர் 8-ல் தொடங்கி டிசம்பர் 7-ந்தேதி வரை நடைபெற்றது.

ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறாததால் தமிழக காங்கிரஸ் தலைமை மேலும் சில வாரங்கள் அவகாசம் கேட்டு உறுப்பினர் சேர்க்கையை நடத்தியது.

குறைந்து போன மவுசு..

அப்போதும்கூட 7 லட்சத்து 19 ஆயிரம் பேர் மட்டுமே தமிழக இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 55 ஆயிரம் பேர் போலியான முறையில் சேர்க்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கோபத்தைத் தான், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பேசும்போது, குறிப்பிட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அதாவது தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையும் குறைந்து போய்விட்டது. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவிற்கு கூட தொண்டர்களை திரட்ட முடியாமல் கட்சியினர் அலட்சியம் காட்டுவதை அவர் மாநில தலைவர் கே எஸ் அழகிரி முன்பாக கொட்டியும் விட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

Cbe KS Alagiri Byte - updatenews360

இன்னொரு பக்கம், 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சிக்கு 44 சதவீத வாக்குகள் இருந்தது உண்மைதான். ஆனால் அப்போது திமுக மட்டுமே பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. இன்றோ திமுக தவிர அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்று 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகத்தில் உள்ளன.

இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு,18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களமிறங்கி வேலை பார்ப்பதில்லை என்பதால் இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கை மந்தமாகவே இருக்கிறது. அதையும் தாண்டி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 4 சதவீத ஓட்டு கிடைத்ததே பெரிய விஷயம் தான்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கிண்டலாக குறிப்பிட்டனர்.

இதுவும் ஏற்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது.

Views: - 661

0

0