சட்டசபையில் சட்டையை கழற்றிய காங்., எம்எல்ஏ: அநாகரீக செயலால் சஸ்பெண்ட்..!!
5 March 2021, 11:55 amபெங்களூர்: கர்நாடக சட்டசபை கூட்டத்தில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அவர் பேச ஆரம்பித்தார்.
விவாதத்தை சபாநாயகர் விஷ்வேஷ்வரா ஹெக்டே காகேரி தொடங்கி வைத்து பேசியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை என்று கூறி முழக்கங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில், அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். சட்டையை அணிந்துகொள்ளும்படி சபாநாயகர் கூறியும் அவர் கேட்கவில்லை.
பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வந்து அவரை சட்டையை அணியச் செய்தார். இந்த சம்பவம் சட்டசபையை மட்டுமின்றி அவரது கட்சியையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. எம்எல்ஏ சங்கமேஷ் இவ்வாறு நடந்துகொண்டதால் சபாநாயகர் கடும் அதிருப்தி அடைந்தார். சபை மாண்புகளை மதிக்காமல் நடந்துகொண்ட அவரை ஒரு வாரம், அதாவது, மார்ச் 12ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கமேஷ், பாஜக அரசு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் எதிராக ஏராளமான பொய் வழக்குகளை போட்டிருப்பதாகவும், இதை அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக சட்டையை கழற்றியதாகவும் கூறினார்.
0
0