சட்டப்பேரவை கொறடாவாக நியமனம்… பனிப்போரில் கே.எஸ்.அழகிரியை வீழ்த்திய விஜயதாரணி!!

21 June 2021, 4:23 pm
congress - updatenews360
Quick Share

கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக காங்கிரசில் தனக்கென செல்வாக்கை உருவாக்கிக் கொண்டு, கட்சியில் மெல்லமெல்ல முன்னேற்றம் கண்டவர், விளவங்கோடு தொகுதியில் வெற்றிபெற்ற விஜயதாரணி.

சீட்டுக்கு படாதபாடு..!

யாருடைய பின்புலத்தையும் அதிகம் சாராமல் காங்கிரசில் தனித்து வளர்ச்சி பெறுவது குதிரை கொம்பான விஷயம். அதுவும் மகளிர் அணியினர் என்றால் பெரும் போராட்டமே நடத்தவேண்டி இருக்கும்.

அதையும் கடந்து, விஜயதாரணி தமிழக காங்கிரசில், முன்னணித் தலைவர்களின் வரிசைக்கு வந்தார். 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 2011, 2016 தேர்தல்களில், விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு எளிதாக கிட்டியது. இந்த முறை சீட் பெற அவர் படாதபாடு பட வேண்டியதாயிற்று.

Vijayadharani_UpdateNews360

ஏனென்றால், தொடர்ந்து மூன்றாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரக்கூடாது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் நெருக்கடி அளிக்கப்பட்டது.

மாஸ்டர் பிளான் :

வெளிப்படையாகச் சொல்லப்போனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக
கே.எஸ். அழகிரி நியமிக்கப் பட்டதிலிருந்தே அவருக்கும் விஜயதாரணிக்கு ஏழாம் பொருத்தம்தான்.
அதற்கு முன்பு திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றோர் தலைமையில் அவர் செயல்பட்டிருந்தாலும், கே.எஸ்.அழகிரியிடம் சற்று இறுக்கமான மனதுடன்தான், கட்சி பணியாற்றி வருகிறார், என்பது வெளிப்படை.

Nellai KS Alagiri Byte - updatenews360

கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொள்கிறார் என்பது விஜயதாரணி மீது பொதுவாக கூறப்படும் குற்றச்சாட்டு. அதேபோல் கட்சி தலைவரான கே.எஸ். அழகிரியை அவர் மதித்து நடந்து கொள்வதில்லை என்றும் எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் செய்வதையே வழக்கமாக கொள்வார் என்றும் விஜய தாரணியை பற்றி சிலர் கூறுவதும் உண்டு.
இதனால்தான் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது முறையாக அவர் போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

காங்கிரஸின் முதல் வேட்பாளர் முதல் பட்டியல் டெல்லியிலிருந்து அறிவிக்கப்பட்டபோது அவருடைய பெயர் இடம் பெறவில்லை. இரண்டாவது பட்டியலில்தான் அறிவிக்கப்பட்டது.
அதையும்கூட டெல்லியில் மேலிட தலைவர்களிடம் நேரடியாக பேசி, சீட் வாங்கும் நிலைக்கு விஜயதாரணி தள்ளப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, இன்னொரு சோதனை தேர்தலின்போது ஏற்பட்டது. அவரை தோற்கடிப்பதற்காக சிலருடைய தூண்டுதலின் பேரில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் திட்டமிட்டே களமிறக்கப்பட்டார். இதனால் விஜயதாரணி தோல்வி அடைந்து விடுவார் என்றே கருதப்பட்டது. அதையும் மீறி அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக விளவங்கோடு தொகுதியில் வெற்றி கண்டார்.

விஜயதாரணிக்கு வெற்றி:

தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 18 எம்எல்ஏக்கள் வெற்றிபெற்ற போதிலும், தனக்கே சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என்று விஜயதாரணி உறுதியாக நம்பினார். ஆனால் உட்கட்சி பூசலால், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட செல்வப்பெருந்தகைக்கு கே.எஸ். அழகிரியின் ஆதரவு இருந்ததால் விஜயதாரணி ஓரங்கட்டப்பட்டார்.

செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாவி காங்கிரசுக்கு வந்தவர் என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டு எழுந்தபோதும் அது எடுபடவில்லை. அவரே சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. ஆனால் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் டெல்லி மேலிடம் தன்னை, இப்பதவிக்கு நியமித்ததாக செல்வபெருந்தகை குறிப்பிட்டார்.

VIjayadharani-updatenews360

இனி காங்கிரசில் தனக்கு எந்த பதவியும் கிடைக்காது, ஒவ்வொரு நிலையிலும் அடுத்த படிக்கு முன்னேற முடியாதவாறு தன் கட்சி தலைவர்களே முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதை உணர்ந்து விஜயதாரணி மௌனமாகி விட்ட நிலையில்தான், தற்போது சட்டப்பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கொறடாவாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு எதிராக நடத்திவந்த பனிப்போரில் விஜயதாரணிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

கோஷ்டிபூசலில் சீனியர்ஸ் :

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சட்டப்பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு இருப்பதாக டெல்லி மேலிடம் சார்பில் அழகிரி அறிவித்தார். அதேநேரம் கொறடா பதவியை தானே நியமித்தது போல் அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து விஜயதாரணியின் ஆதரவாளர்கள் சிலர் கூறும்போது, “இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று கடைசிவரை டெல்லி மேலிடத்துக்கு கே.எஸ்.அழகிரி அழுத்தம் கொடுத்தார். முதல் பட்டியலில் அவருடைய பெயரை வேண்டுமென்றே டெல்லிக்கு அனுப்பவில்லை.

ஆனால் கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் அவருக்கு ஏன் போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய பிறகுதான் விஜயதாரணியின் பெயரை சேர்த்து அழகிரி அனுப்பினார். அதேபோல் தொகுதியில் அவரை தோற்கடிக்க காங்கிரசிலேயே சிலர் சதி வேலையிலும் ஈடுபட்டனர்.

selvaperunthagai - vijayatharani - updatenews360

செல்வப்பெருந்தகை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில்
ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே காங்கிரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்த உண்மையை மறைத்து அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட கே.எஸ். அழகிரி வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார். அதைவிட மிகக் கொடுமை அவர் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டது.

இன்னும் சொல்லப்போனால் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு, அனைவருடைய சிபாரிசும் விஜயதாரணி என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே பிரின்ஸ் எம்எல்ஏ பெயரும் சேர்க்கப்பட்டது. பிறகு இருவருமே கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள் என்ற காரணத்தைக் காட்டி தங்களுடைய திட்டப்படி விஜயதாரணிக்கு அப்பதவி கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இப்போது வேறு வழியின்றி கொறடா பதவியை அவருக்கு ஒதுக்கியுள்ளனர்.

உண்மையில் கே. எஸ்.அழகிரி மீது விஜயதாரணிக்கு எந்த வெறுப்பும்,கோபமும் கிடையாது. அழகிரி வட பகுதி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கட்சியில் வேகமாக வளர்ந்து செல்வாக்குடன் இருக்கிறாரே என்ற பொறாமைதான் காரணம். அதனால்தான் தன்னை மதிக்கவில்லை என்று கற்பனை செய்துகொண்டு விஜயதாரணிக்கு நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தார். கொறடா பதவி கிடைக்காமல் தடுக்கவும் டெல்லியில் முட்டுக்கட்டை போட்டு பார்த்தார். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும்
கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்கள் யார்? என்று சோனியா காந்திக்கும் ராகுலுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர்கள் விஜயதாரணி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, இந்தப் பதவிக்கு அவரை நியமித்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல அழகிரி மிகத் தாமதமாக கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு இப்போது நியமன அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதாவது சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் இதுபற்றி அறிவிப்பு வருகிறது. இதைவிட ஒரு கட்சியில் என்ன கேலிக் கூத்து நடந்துவிட முடியும்? விஜயதாரணி விஷயத்தில் தொடர்ந்து குறுக்கீடு செய்து கடைசியில் கே.எஸ். அழகிரி அவமானப்பட்டதுதான் மிச்சம்” என்று உண்மையை போட்டு உடைத்தனர்.

Views: - 152

0

0