கலெக்டருடன் மல்லுக்கட்டிய காங்., எம்பி… இவ்வளவு சொல்லியும் கேட்க மறுப்பது ஏன்..? தர்ணாவில் குதித்த ஜோதிமணி..!

Author: Babu Lakshmanan
25 November 2021, 1:38 pm
karur mp dharna - updatenews360
Quick Share

கரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து காங்கிரஸ் எம்பி ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார். தர்ணா போராட்டம் குறித்து அவர் கூறியதாவது :- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்குவதற்கான மத்திய அரசு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்துகொண்டு மருத்துவ சான்று பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவித்தொகை தொழில் தொடங்க கடன் உதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது, உதவி உபகரணங்கள் பெறுவது, சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர வண்டி, ஊன்றுகோல் கருவி, செயற்கை கால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல், மற்றும் பிற உதவிகள் இந்த முகாமில் வழங்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் இந்த முகாமை ஒவ்வொரு இடத்திலும் நடத்த வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினேன். அவர் முகாம் நடத்த மறுத்து விட்டார். பிற மாவட்ட கலெக்டர்கள் இந்த முகாமை நடத்த ஒத்துழைப்பு தரும் நிலையில், கரூர் மாவட்ட கலெக்டர் மறுத்து வருகிறார். கரூர் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி உதவிகளை வழங்க வேண்டும். அதற்கான தேதியை வழங்கும் வகையில் இந்த போராட்டத்தை தொடர்வேன், என்றார்‌‌.

இதையடுத்து, சிறிது நேரத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அங்கு வந்து ஜோதிமணி எம்பி இடம் பேசினார். மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருக்கிறேன். தயவு செய்து நீங்கள் வரவேண்டும் என்றார். எனக்கு நீங்கள் சரியான பதிலை அளிக்கவில்லை என எம்பி கூறினார். தயவு செய்து வாருங்கள், அந்த முகாமுக்கு தான் செல்கிறேன் என்று கலெக்டர் மீண்டும் கூறினார். மீண்டும் எம்பி மறுக்கவே கலெக்டர் அங்கிருந்து சென்றுவிட்டார். தர்ணா போராட்டத்தை எம்பி ஜோதிமணி தொடர்வதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 217

0

0

Leave a Reply