விருதுநகர் கூட்டுப்பாலியல் பலாத்கார கொடூரம்… பொங்கி எழுந்த ஜோதிமணி… பதுங்கும் விருதுநகர் காங்., எம்பி!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 9:15 pm
Quick Share

2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில பெண்கள் இளைஞர்களால்
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அம்பலமாகி
தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது.

அப்போது ஆளும் கட்சியாக அதிமுக இருந்ததால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கூறி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன.

காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகளும் கொந்தளித்ததால் இந்த வழக்கு பின்னர் சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

இப்போது அதேபோன்றதொரு வேதனை தரும் நிகழ்வு விருதுநகரில் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட 22 வயது பெண் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்.

தான் பணிபுரிந்து வரும் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தன்னுடன் வேலை பார்த்து வந்த ஹரிஹரன் என்ற வாலிபரை இந்த பெண் காதலித்து வந்துள்ளார். ஹரிஹரன் திமுக அனுதாபி என்று கூறப்படுகிறது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணுடன் ஹரிஹரன் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். மேலும் அப்படி உல்லாசமாக இருந்ததை செல்போனில் ரகசியமாக வீடியோ படம் பிடித்து தனது சக நண்பர்களுக்கும் அதை அவர் அனுப்பி இருக்கிறார்.

அந்த பெண் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொண்ட உள்ளூர் திமுக இளைஞரணி நிர்வாகி ஜுனைத் அஹமது அவருடைய நண்பர்கள் இருவர் மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் அந்த வீடியோ காட்சிகளை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் காண்பித்து மிரட்டி அவர்களும் கடந்த ஆறு மாதங்களாக அந்த பெண்ணின் கற்பை சூறையாடி வந்துள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அந்தப்பெண் விருதுநகர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காதலன் போல நடித்து இளம்பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த ஹரிஹரன் அவருடைய நண்பர் ஜுனைத் அகமது உள்ளிட்ட 8 பேரையும் அண்மையில் போலீசார் கைது செய்தனர்.

இந்த வேதனை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவரே இந்த பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை அறிந்த திமுக தலைமை அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக சமூகப் போராளிகள் போல குரல் கொடுத்த நடிகர், நடிகைகள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை.

பட்டியலின வகுப்பு பெண்களுக்கு பாஜக ஆளும் எந்த மாநிலத்திலாவது கொடுமை நடந்தால் உடனடியாக இங்கே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று களத்தில் குதிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட இதுவரை விருதுநகர் பாலியல் சம்பவம் பற்றி மூச்சு விடவில்லை. தோழமையின் சுட்டுதல் என்று கூறுவது போல கூட ஒரு மறைமுக கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்களும் இந்த விவகாரத்தில் பெரும் அமைதி காக்கின்றன.

இந்த கொடுமையான சம்பவம் பொது வெளியில் வந்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும் கூட பிரதான தனியார் செய்தி சேனல்களும் இதை கண்டுகொள்ளாமலும் விவாதிக்காமலும் நைசாக ஒதுங்கிக் கொண்டு விட்டன.

அதேநேரம் விருதுநகர் பாலியல் கொடூரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் 2 பேர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதில் கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி ஜோதிமணியும் ஒருவர். தான், ஒரு பெண் என்பதால் என்னவோ இந்த குற்றச் சம்பவத்தை பொங்கி எழுந்து அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் “விருதுநகர் பாலியல் வன்புணர்வு கொடூரம் அதிர்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சி போலவே, பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி 8 பேர் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதில் 4 பேர் பள்ளி மாணவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறைக்கு நன்றி.

பள்ளி மாணவர்கள் மனதில் கூட, கொடூரமான பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபடும் அளவிற்கு பாலியல் வக்கிரம் புரையோடிக் கிடக்கிறது. பெண்ணை வெறும் உடலாக, காமப்பொருளாக மட்டும் பார்க்கும் மன நிலையிலிருந்தே இம்மாதிரியான கொடும் குற்றங்கள் உருவாகின்றன.

கடுமையான சட்ட நடவடிக்கைகளோடு, கல்வித்திட்டத்திலும் பெண்களை சமமாக, அறிவுத்தளத்தில் அணுகுவது பற்றிய உரையாடல் நிகழும் விதமாக மாற்றங்கள் தேவை. அப்பொழுதுதான் இம்மாதிரியான பாலியல் வக்கிரங்களை, வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும்” என்று கொந்தளித்து உள்ளார்.

விருதுநகர் எம்பியான மாணிக்கம் தாக்கூர், ஒரு டிவி சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்திக்கு பதில் சொல்வது போல இந்த சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறார்.

வெளிப்படையாக சொல்லப் போனால் அவர் முழு மனதுடன் கண்டிக்காமல் பதுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த செய்தி சேனலின் ட்விட்டர் பதிவு இதுதான்.

“பொள்ளாச்சி பலாத்கார வழக்கை நினைவூட்டும் விருதுநகரில் நடந்த ஒரு சம்பவத்தில், 22 வயது தலித் பெண், இரண்டு பேர் உட்பட 8 பேரால் பலமுறை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு அறிவாலய நிர்வாகிகள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் அடங்குவர்” என்று பதிவு செய்திருந்தது.

மாணிக்கம் தாக்கூர், தனது பதிவில் அதையும் இணைத்து, “விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விருதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது நம்பிக்கை அளிக்கிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு மதம் அல்லது ஜாதி நிறம் கொடுக்க நினைப்பவர்களை தடுத்து நிறுத்துவோம் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “மாணிக்கம் தாக்கூர் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி நாடாளுமன்றத்தில் புலம்பும் அளவிற்கு நிலைமை உள்ளது. அதனால் விருதுநகர் பாலியல் சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்து இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

ஆனால் அவருடைய பதிவின் கடைசி வரிகளைப் படித்தால் வேடிக்கையாக இருக்கிறது.
இதற்கு மதம் அல்லது ஜாதி நிறம் கொடுக்க நினைப்பவர்களை தடுத்து நிறுத்துவோம் என்கிறார். உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியலின மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் ஏதாவது ஒரு அநீதி இழைக்கப்பட்டு விட்டால் அதை காங்கிரஸ் தலைமைதான் அடையாளப்படுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தும். அதுபோன்ற பல போராட்டங்களை மாணிக்கம் தாக்கூரும் காங்கிரஸ் எம்பி என்கிற முறையில் தமிழகத்தில் முன்னெடுத்து நடத்தியும் இருக்கிறார்.

திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஆதரித்து இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். ஆனால் இப்போதோ ஜாதியையும் மதத்தையும் அடையாளம் காட்டக் கூடாது என்று கூறுகிறார். தனது தொகுதியில் நடந்த சம்பவம் என்பதால் அப்படி சொல்கிறாரா?… அல்லது 2024 தேர்தலில் இந்த கொடுமையான நிகழ்வு தனக்கு தொகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி கூறினாரா?… என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் திமுக ஆட்சியில் இச்சம்பவம் நடந்திருப்பதால் மாணிக்கம் தாக்கூர் பதுங்குகிறார் என்பது மட்டும் அப்பட்டமாக தெரிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னுமிடத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 19 வயது பெண்ணொருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டபோது திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நூற்றுக்கணக்கான பெண்களுடன் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றார்.

தற்போது விருதுநகர் சம்பவம் தனது சகோதரரின் ஆட்சியில் நடந்து இருக்கிறது. அதில் திமுக நிர்வாகி ஒருவரும் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதாலோ என்னவோ கனிமொழியும் இந்த விவகாரம் தொடர்பாக மிகச் சுருக்கமாகவே கருத்து தெரிவித்து இருக்கிறார்.

அவர் தனது பதிவில் “விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்” என்று அடக்கி வாசித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 10 மாதங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கற்பழித்துக் கொலை, ஆசிரியர்களின் பாலியல் சீண்டலால் மாணவிகள் தற்கொலை என்று பல்வேறு துயர நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது.

எனவே இந்த விஷயத்தில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டு குற்றவாளிகளை ஒடுக்கவேண்டும். பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோர் எந்தக் கட்சியினராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டாமல் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் தமிழகத்தில் நடைபெறுவதை தடுக்க முடியும்” என்று திமுக அரசுக்கு அந்த அரசியல் விமர்சகர்கள் ஆலோசனை வழங்கினர்.

Views: - 861

0

0