‘தொகுதிப்பக்கம் தலைகாட்டாத MLA…சன்மானம் அறிவித்து விளம்பரம்’: சொந்த கட்சியினரால் காங்கிரசுக்கு வந்த சோதனை!!

Author: Aarthi Sivakumar
23 September 2021, 5:47 pm
Quick Share

நெல்லை: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டரே சுவர் விளம்பரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆக ஆனவர் ரூபி மனோகரன். ரூபி மனோகரன் வெற்றி பெற்ற போதிலும், அவருக்கு எதிராக சில காங்கிரஸ் கட்சியினர் சிலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும், அவர் அவ்வப்போது தொகுதிக்கு வரும் சமயங்களில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு MLA ரூபி மனோகரன் தொகுதிப் பக்கம் வரவும் இல்லை, மக்களிடம் கோரிக்கைகளை கேட்கவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் குழு செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி பேருந்து நிலைய சுற்றுச்சுவரில் ‘MLAவை காணவில்லை’ என எழுதியுள்ளனர். ‘வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன், சொன்ன சொல்லை தவறமாட்டாரு ரூபி மனோகரன்’ காணாமல் போன இவரை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சண்மானம் வழங்கப்படும் இப்படிக்கு ஐயப்பன் என எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிருப்தி காங்கிரசாரிடம் கேட்டபோது, ரூபி மனோகரன் வெற்றி பெற்ற போதிலும், அவர் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை. எங்கிருந்தோ வந்த அவர் இதே தொகுதியில் மறுபடியும் போட்டியிடும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

அதனால் தான் அவருக்கு எதிராக உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகிறார்கள். ஏற்கெனவே பலமுறை அவரைக் காணவில்லை என்று போஸ்டர்களை ஒட்டினார்கள். ஆனால் அவற்றைக் கிழித்து விடுவதால் இந்த முறை சுவரிலேயே பெயிண்ட் கொண்டு எழுதி வைத்துவிட்டனர் என தெரிவித்துள்ளனர்.

Views: - 274

0

0