கமலுடன் கைகோர்க்கத் திட்டமிடும் காங்கிரஸ் : உடையும் திமுக கூட்டணி.. உதயமாகும் மூன்றாவது அணி!!

21 January 2021, 1:15 pm
Dmk - congress - updatenews360
Quick Share

சென்னை : திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே உரசல் தொடரும் சூழலில் தமிழகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் இருக்கும் கூட்டணிக்குத் திமுகவே தலைமை ஏற்கும் நிலையில், அணியில் யாரைச் சேர்ப்பது என்பதை திமுகதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், திமுகவை கடுமையாகத் தாக்கிப் பேசிவரும் மக்கள் நீதி மையத்தை கூட்டணியில் சேர தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பது அவருடன் சேருவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்பதையே காட்டுகிறது என்று திமுக நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்து வருவதும் திமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதும் தெரியவருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தநிலை இப்போது இல்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

Congress DMK - updatenews360

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் திமுகவுக்குத் தேவைப்படுகிறது என்பதை தொண்டர்களும், மூத்த தலைவர்களும் உணர்ந்து இருந்தாலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி, கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் அவர்களின் முக்கியத்துவத்தை உணராமல் திமுக தனித்தே போட்டியிடும் என்று பொதுவெளியில் பேசிவருகிறார். கட்சிக்குள்ளும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்குக் குறைவான இடங்களே ஒதுக்கவேண்டும் என்றும், சிறிய கட்சிகளை ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வைக்கவேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார். இதனால், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் எல்லாக் கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தேசியக்கட்சியான காங்கிரஸ் கடுமையான அதிருப்தியில் உள்ளது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற 41 இடங்களை மீண்டும் பெற வேண்டும் என்று அந்தக்கட்சி தீவிரமாக இருக்கிறது. ஆனால், திமுக காங்கிரசுக்கு 15 முதல் 20 தொகுதிகளையே கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறது. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக அணியை விட்டு விலகி மூன்றாவது அணி அமைக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிடுவது அந்தக் கட்சியின் தலைவர்கள் கமல்ஹாசனுக்கு விடுக்கும் அழைப்பில் இருந்து அம்பலமாகிறது.

kamal - ks alagiri - updatenews360

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடந்து மக்கள் நீதி மையத்துக்கு அழைப்பு விடுத்து வருகிறார். திமுகவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில், அவரை காங்கிரஸ் அழைப்பது ஏன் என்று திமுகவினர் கடுப்பில் உள்ளனர். கூட்டணியின் தலைமைக் கட்சியான திமுகதான் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்று முடிவுசெய்ய வேண்டும். ஆனால், இந்த முடிவை காங்கிரஸ் தலைவர்கள் எடுத்துப்பேசிவருவது திமுகவை கோபப்படுத்தியுள்ளது.

மேலும், இந்தப் பிரச்சினையில் சிவகங்கை எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி மிகவும் தீவிரமாக இருக்கிறார். கமல்ஹாசனுக்கு அழைப்பு தருவதுடன் அவர் நிற்கவில்லை. திமுகவை வெளிப்படையாக விமர்சித்தும் வருகிறார். தமிழ் புத்தாண்டு தொடர்பாக திமுகவை சாடியுள்ள அவர், தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதை எதிர்த்துள்ளார். சித்திரை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று கூறியுள்ள அவர், கூட்டணியில் இருப்பதால் திமுக சொல்வதையெல்லாம் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை என்று கூட்டணிக்கட்சியை சீண்டும்விதத்தில் பேசியுள்ளார்.

Karthi Chidambaram stalin - Updatenews360

கார்த்தி மீது இருக்கும் வழக்குகளில் அவர் தப்பிக்க வேண்டுமென்றால், திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கவேண்டும் என்று பாஜக அழுத்தம் தருவதாகக் கூறப்படும் நிலையில், கார்த்தி தேவையின்றி திமுகவை விமர்சனம் செய்வதன் பின்னணியில் பாஜக இருக்கிறது என்றும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்குப் பதிலாக கமலுடன் சேர்ந்து அதிருப்தியில் இருக்கும் மற்றக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு மூன்றாவது அணி அமைக்க காங்கிரசின் மற்ற தலைவர்களும் விரும்புகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் சூழலில் போகப்போக திமுக கூட்டணியில் மோதல்கள் அதிகரித்து உடையும் நிலை ஏற்படும் என்றும், 2016 சட்டமன்றத் தேர்தலில் அமைந்ததுபோல் மூன்றாவது அணி அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமையும்போது தேர்தல் முடிவுகளும் போனமுறை அமைந்ததுபோலவே அமையும் என்றும் கருதப்படுகிறது.

Views: - 0

0

0