அதிக தொகுதி கேட்டு காங்., திடீர் போர்க்கொடி : திகைப்பில் தடுமாறும் திமுக!!

2 February 2021, 2:10 pm
dmk cover 11 - updatenews360
Quick Share


ராகுல்காந்தியின் இருமுறை பயணத்திற்குப்பின் தமிழக காங்கிரஸ் தற்போது சுறுசுறுப்பாகி இருக்கிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக அவர் டெல்லியில் இருந்து மதுரை வந்தார். அன்று மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவேண்டும் என்கிற அவருடைய அரசியல் ஆசை நிறைவேறாவிட்டாலும் கூட தமிழகத்தில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் வேண்டும் என்கிற உந்துதலை அது அவரிடம் ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து கடந்த 23, 24, 25-ந் தேதிகளில் அவர் முதல் முறையாக தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என்று நான்கு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரமும் மேற்கொண்டார். இதற்கு முன்பு அவர் தமிழகம் வந்து பல முறை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசி இருக்கிறார் என்றாலும் கூட இந்த முறை அவருடைய பாணி முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

Rahul - Updatenews360

முக்கிய ஊர்களில் பேசியதோடு மட்டும் அல்லாமல் தேசிய, மாநில சாலைகளின் வழியே சென்றபோது திரண்டிருந்த பொது மக்களை பார்த்த அத்தனை இடங்களிலும் நின்று அவர் பேசினார். காரில் இருந்து இறங்கி தன்னை பார்க்க கூடி இருந்தவர்களிடம் கைகுலுக்கி அவர் உற்சாகப்படுத்தினார். செல்பிக்கும் அழகாக போஸ் கொடுத்தார். கல்லூரி மாணவர் போல் அவர் ஜீன்ஸ் பேண்ட்டும், டீ சர்ட்டும் அணிந்திருந்தது பெரும்பாலான இளையதலைமுறையினரை வெகுவாக ஈர்த்தது.

இந்த மூன்று நாட்களில் மட்டும் ராகுல்காந்தி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களை சந்தித்தார்
என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். திமுகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் கலந்து கொள்ளாமலேயே தனது பிரசாரத்துக்கு இத்தனை பெரிய அளவில் கூட்டம் சேர்ந்தது ராகுலுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் கிடைத்த வரவேற்பு ராகுல் காந்தியைப் போலவே, தமிழக காங்கிரசுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே அவர் 4 மாவட்டங்களில் மக்களை அணுகிய விதம் தமிழக ஊடகங்களில் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் மிகவும் பாராட்டி எழுதப்பட்டது. இரண்டாவது சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி மீண்டும் வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். இந்த முறையும் அவர் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்ய தமிழக காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இரண்டாவது பிரச்சாரப் பயணத்தின்போதும், அதிக அளவில் கூட்டத்தை திரட்டுவதற்கு தமிழக காங்கிரசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதேநேரம் அது தானாக சேர்ந்த கூட்டமாக இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் விரும்புகிறது. ராகுல்காந்தியும் கூட சிறிய இடங்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் கூடினாலே போதும். அதுவே மிகப் பெரிய வெற்றிதான் என்று கருதுகிறாராம். எனினும், ராகுல் காந்தியின் வருகை பற்றி அக்கம் பக்கத்து ஊர் மக்களுக்கும் அறிவித்து பெரும் கூட்டத்தை திரட்ட தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Rahul_Gandhi_UpdateNews360

அவரது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசார பயணம் விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அமைகிறது. மேலும் விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று இடங்களிலும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அந்த தொகுதி முழுவதும் ராகுல் காந்தியின் பிரச்சாரம் நிச்சயம் இருக்கும் என்று நம்பலாம்.

இத்தொகுதியின் எம்பியாக இருந்த ஹெச்.வசந்தகுமார் மரணமடைந்தது தொடர்ந்து, இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
இங்கு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்பது உறுதியாக தெரிய வருகிறது. ராகுலின் முதல்கட்ட பிரச்சாரத்தை பார்த்தபின்பு தமிழக காங்கிரஸ் ஒரு புதிய முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு போன்றோர் திமுகவிடம் தொகுதி பங்கீடு பேர விஷயத்தில் அடிபணிந்து போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதாவது, 15 சீட்டு தருகிறோம், 20 சீட்டு ஒதுக்குகிறோம் என்று திமுக சொன்னால் ஒப்புக்கொண்டு விடக்கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளனர்.

EVKS 01 updatenews360

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தஞ்சாவூரில் கூறுகையில் “ராகுலின் வருகைக்குப் பின் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு இருப்பதை காணமுடிகிறது அவர் மீண்டும் வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். காங்கிரசுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனவே அதற்கேற்ப எங்களுக்கு திமுக கூட்டணியில் தொகுதிகள் அமையும்” என்று சூசகமாக குறிப்பிட்டார்.

மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ராகுலுக்கு அவருடைய தந்தை ராஜீவ் காந்தி போலவே தமிழகத்தில் அபார செல்வாக்கு இருப்பதைக் கண் கூடாக காண முடிகிறது. எனவே கடந்த முறை திமுக எங்களுக்கு ஒதுக்கிய 41 தொகுதிகளை இந்த தேர்தலிலும் கேட்டுப் பெறுவோம். இதில் மிக உறுதியாக இருக்கிறோம். 1989ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது 28 இடங்களை கைப்பற்றியது. எங்களுக்கு 20 சதவீத வாக்குகளும் கிடைத்தது.

அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ்காந்தி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். அதே பாணியில்தான் இன்று ராகுலின் பிரச்சார பாணியும் அமைந்திருக்கிறது.

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் கூட 30 தொகுதிகள் வரை ஜெயிக்க முடியும். அதனால் 15, 20 சீட்டு என்று எங்களை ஏமாற்ற முடியாது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்போது நிச்சயமாக எங்களுடைய இந்த கோரிக்கையில் உறுதியாக இருப்போம்” என்று சற்று குரலை உயர்த்தி கூறினார், அந்த நிர்வாகி.

காங்கிரஸ் தனது சொந்த பலத்தை நம்புவதால் திமுகவிடம் 41 தொகுதிகளை போராடி பெறுவதில் திட்டவட்டமாக இருப்பது தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் உயர்த்தியுள்ள இந்த திடீர் போர்க்கொடி திமுகவுக்கு திகைப்பையும், எரிச்சலையும் ஒரு சேர ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை.

Views: - 0

0

0