ஸ்டாலினுடன் கறார் பேச்சில் இறங்கத் தயாராகும் ராகுல்காந்தி : உச்சகட்ட இழுபறியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி!!

1 December 2020, 8:00 am
Dmk - cong - cover - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குத் திமுக குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளையே ஒதுக்கும் என்று சொல்வதால், கொதித்துப் போயிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் பிரச்சினையை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்குக் கொண்டு சென்றுள்ளதால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தானே நேரடியாக கறாரான பேச்சுக்களில் இறங்கவுள்ளார்.

நூற்றாண்டு கால பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்று திமுக கறாராகக் கூறுவதால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். குறைந்தது 40 தொகுதிகளைக் கூட ஒதுக்காவிட்டால் திமுக கூட்டணியை முறிக்க வேண்டும் என்றும், மூன்றாவது அணி அமைத்துப்போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தியுடம் சொல்லியிருக்கின்றனர். ஏற்கனவே, ராகுல்காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தொடர்ந்து கோரிவருவதால் ராகுல்காந்தி கடும் கோபத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

DMK - Congress - Updatenews360

இப்போது, காங்கிரஸ் கட்சிக்குத் தரும் தொகுதிகளையும் மிகவும் குறைப்பதால் மேலும் அவர் அதிருப்தியில் இருக்கிறார். இதுவரை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசிவந்தார். இனிமேல், திமுகவுடனான பேச்சுக்களைத் தானே முன்னின்று நடத்தப்போவதாக ராகுல்காந்தி முடிவுசெய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள். ராகுல்காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் முக்கிய தலைவர்களை அவர் நியமித்து அவரது நேரடிக் கண்காணிப்பில் நடக்கப்போகும் பேச்சுகள் மிகவும் கடுமையாகவும் கறாராகவும் இருக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். திமுக தொடர்ந்து 20 தொகுதிகள்தான் தருவோம் என்று பிடிவாதமாக இருந்தால் கூட்டணியை முறிக்கவும் ராகுல்காந்தி தயங்கமாட்டார் என்று அவர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.

dinesh gundu rao - congress - updatenews360

திமுக கூட்டணியில் குறைவான இடங்களில் போட்டியிடுவதைவிட மூன்றாவது அணி அமைக்கலாம் என்று தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவெ முடிவுக்கு வந்ததால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் பிரச்சினையில் கார்த்தி சிதம்பரமும் ஸ்டாலினை சீண்டியுள்ளார்.

ஏற்கனவே, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே இலங்கைத் தமிழர் படுகொலை. காவிரி, முல்லைப்பெரியாறு, நீட் தேர்வு ஆகிய பல பிரச்சினைகளில் கருத்துவேறுபாடு இருக்கும் நிலையில் இப்போது தொகுதிப்பிரச்சினையும் வெடித்துள்ளது. முதலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஆட்சியில் பங்கு பெறுவது பற்றிப் பிரச்சினை எழுந்தது. 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடத்தியபோது, அதற்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலை இருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் அப்போது ஆட்சி நடந்துவந்தது. ஆனாலும் காங்கிரசுக்கு ஆட்சியில் எந்தவிதமான பங்கும் வழங்கப்படவில்லை. அப்போது, திமுக ஆதரவுடன் புதுச்சேரியில் ஆட்சி நடந்துவந்ததை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி காரணமாகக் கூறினார். மத்தியிலும் திமுக ஆதரவுடன் ஆட்சி நடந்துவந்தது.

அப்போது சொன்ன காரணத்தை இப்போது கூறமுடியாது என்று கூறும் காங்கிரஸ், திமுகவுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டால் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் மத்திய தலைவர்கள் வற்புறுத்தவேண்டும் என்று கூறுகிறார்கள். தனித்த பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று திமுக வியூகங்களை வகுத்துவரும்போது தேர்தல் முடிவைப் பொறுத்து காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் எம்.பி, கார்த்தி கூறியிருந்தார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.

காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கி அதில் அவர்கள் வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சியைக் கோருவார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், காங்கிரசுக்குக் குறைவான இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்தது.

DMK-CONGRESS -updatenews360

தேர்தல் நெருங்க நெருங்க இரு கட்சிகளின் தலைவர்களுக்க் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. மாநிலக் காங்கிரஸ் கட்சியினரின் கருத்தை மீறி காங்கிரஸ் தலைமை கூட்டணியைக் கட்டாயப்படுத்தினால் தேர்தலில் இரு கட்சிகளும் ஓருவர் காலை மற்றவர் வாருவதன் மூலம் சொந்தக் கூட்டணியைத் தோற்கடிக்கவும் வாய்ப்பு அதிகம். 1980-ஆம் ஆண்டு திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்பட்டபோது இரு கட்சிகளும் இவ்வாறு ஒருவர் காலை ஒருவர் வாரியதால் இரு கட்சிகளும் தோற்றன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி முடிவுகளை எடுக்க மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் மத்திய தலைமை தமது முடிவுகளைத் திணிக்கக்கூடாது என்றும் கார்த்தி சிதம்பரம் முன்னரே தெரிவித்திருந்தார். இப்போது, மாநில காங்கிரஸ் குரலை ராகுல்காந்தி ஏற்றிருப்பதால் இரு கட்சிகளுக்கும் மேலும் பிரச்சினைகள் அதிகமாகும் என்பது தெளிவாகிறது.

Views: - 0

0

0