கே.எஸ். அழகிரியின் ஆட்டம் Close… அடுத்து தமிழகத்திற்கு தலைமை வகிக்கப்போவது யார்..? விஜயதரணியா… ஜோதிமணியா…!!

Author: Babu Lakshmanan
4 January 2022, 6:59 pm
Quick Share

தமிழக காங்., தலைவர்

தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் 69 வயது கே எஸ் அழகிரியின் மூன்றாண்டு பதவி காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. அவருடைய இடத்துக்கு அடுத்து வரப்போவது யார்? என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கிவிட்டது. உண்மையைச் சொல்லப்போனால் அவர் வகித்து வரும் தலைமைப் பதவியை பிடிப்பதற்கு, கடந்த 7 மாதங்களுக்கு முன்பே மல்லுக்கட்டு தொடங்கிவிட்டது.

Nellai KS Alagiri Byte - updatenews360

அப்போது கே எஸ் அழகிரியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சொல்லப்பட்டதால் கட்சி மேலிடம் முன்கூட்டியே அவருடைய பதவியை காலி செய்யலாம் என்ற பரபரப்பு பேச்சும் அடிபட்டது.

எம்பிக்கள் மாணிக்கம் தாக்கூர், கார்த்தி சிதம்பரம், டாக்டர் செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி மற்றும் விஜயதரணி எம்எல்ஏ என்று அரை டஜனுக்கும் மேற்பட்டோருக்கு அந்தப் பதவியின் மீது ஒரு கண் உண்டு.

திருப்தியில்லை

ஆனால் அழகிரியோ, மூன்று ஆண்டுகள் மட்டுமே கொண்ட காங்கிரஸ் தலைவர் பதவியால் எந்த பலனும் கிடைக்காது, மாநிலத்தில் கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 5 வருடங்களாவது ஒருவர் தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்று மறைமுகமாக தனது பதவியை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கவேண்டும் என்பதை சோனியாவுக்கும் ராகுலுக்கும் சுட்டி காண்பித்தார்.

ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கே எஸ் அழகிரி கண்ணீர் விட்டு அழுதும் கூட காங்கிரசுக்கு 30 தொகுதிகளை திமுக ஒதுக்கவில்லையே?…என்ற வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படும்,டெல்லி தலைமை 25 தொகுதிகளை வேறு வழியின்றி கடைசியில் ஏற்றுக்கொண்டது.

Stalin_KSAlagiri - updatenews360

இந்த தேர்தலில் காங்கிரசின் ஸ்ட்ரைக் ரேட் 72 சதவீதம் என்றாலும்கூட கேஎஸ் அழகிரிக்கு அவ்வளவாக பாராட்டு கிடைக்கவில்லை. மேலும் எம்எல்ஏ சீட்டுக்கு பெரும் தொகையை வாங்கிக் கொண்டு, பணக்காரர்கள் மட்டுமே போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்தார் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டு, அவருடைய பெயரை ரொம்பவே டேமேஜ் பண்ணிவிட்டது. அதனால் அப்போதே அவருடைய பதவி காலம் மேலும் நீட்டிக்கப் படமாட்டாது என்பது உறுதியானது.

அழகிரி மீது இப்படி பகீர் குற்றச்சாட்டை கூறிய கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி ஜோதிமணி, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, அழகிரியின் தலை தப்பியது. தொடர்ந்து அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நீடித்தார். புதிய தலைவரை நியமிக்கும் பேச்சும் அப்படியே அமுங்கிப்போனது.

கடும் போட்டி

இந்த நிலையில்தான், தற்போது தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில் முன்னணியில் இருப்பவர்கள் என்று மாநில காங்கிரசின் செயல் தலைவராக உள்ள விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, செல்லக்குமார், மாணிக்கம் தாக்கூர், விஜயதரணி ஆகியோரைக் கூறலாம்.

தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகன் என்பதாலும், கட்சியினரை அரவணைத்து செல்வதில் தயக்கம் காட்டுபவர் என்று கூறப்படுவதாலும் விஷ்ணு பிரசாத்துக்கு தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்று சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்திலேயே பேச்சு உள்ளது.

மாணிக்கம் தாக்கூரை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதிப் பக்கம் அதிகம் எட்டிப் பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அதிரடி அரசியல் காட்டுவதில்லை என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு.

இதேபோல் காங்கிரசில் எந்த கோஷ்யையும் சாராத டாக்டர் செல்லக்குமாருக்கு சென்னை, கிருஷ்ணகிரியை கடந்து வேறு எந்த மாவட்டத்திலும் பரவலான செல்வாக்கு இல்லை என்கிறார்கள். இதனால் அவரும் தலைமை பதவியை பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

எஞ்சி இருப்பவர்கள் ஜோதி மணியும், விஜயதரணியும்தான்.

திமுகவை சீண்டி பிரபலம்

இதில் ஜோதிமணி தமிழகம் முழுவதும் ஓரளவு நன்கு அறியப்பட்ட பெண் எம்பி. காங்கிரஸ் தலைவர் ராகுலின் அன்புக்கும் பாத்திரமானவர். அதிரடி அரசியல் காட்டுவதிலும் கைதேர்ந்தவர்.
அதனால் அடுத்த தலைவர் ரேசில், அண்மைக்காலம் வரை அவர்தான் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் ஓடிக் கொண்டிருந்தார்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டி வந்தவர் என்பதாலும் ஜோதிமணிக்கு கூடுதல் வாய்ப்பும் இருந்தது. அதாவது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இணைப்பு பாலமாக அவர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்கும் விவகாரத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் 2 சதவீத கமிஷன் வாங்கிக்கொண்டுதான் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்கிறார் என்று கடந்த நவம்பர் மாத இறுதியில் ஜோதிமணி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 நாள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். இது அமைச்சர் செந்தில்பாலாஜியையும், திமுகவையும் கடும் எரிச்சலுக்கு உள்ளாகியது.

திமுக அரசை நேரடியாக குற்றம்சாட்டுவதுபோல் ஜோதிமணி நடந்து கொண்டதால், அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமித்தால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்குதான் ஏற்படும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை ஒதுக்க திமுக முன்வராது என்று காங்கிரஸ் தலைவர்களில் சிலர் டெல்லி தலைமைக்கு போட்டுக் கொடுக்க இறுதிச் சுற்றில் ஜோதிமணியின் பெயர் காணாமல் போனது.

விஜயதரணிக்கு வாய்ப்பா..?

தற்போது தலைவர் பதவிக்கான போட்டிக் களத்தில் இருப்பவர் ஒரே ஒருவர்தான். அவர், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதரணி.

எந்த வம்பு தும்புக்கும் போகாதவர், திமுகவுடனும் சுமுகமான அணுகுமுறையை கையாள்பவர் என்பதால் எவ்வித எதிர்ப்பும் இன்றி விஜயதரணி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Vijayadharani_UpdateNews360

இதுகுறித்து தமிழக காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “விஜயதரணி தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டியவர். ஆனால் அழகிரி கடைசி நேரத்தில் தனது தீவிர ஆதரவாளரான செல்வப்பெருந்தகைக்கு அந்தப் பதவி கிடைக்கும்படி செய்து விட்டார்.

தற்போது விஜயதரணிக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும் டாக்டர் செல்லக்குமாரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். தனது ஆதரவாளர்கள் மூலம் டெல்லியில் ராகுலுக்கு அழுத்தமும் கொடுக்கிறார். ஜோதிமணியும் தனது முயற்சியை கைவிடவில்லை. தனக்குத்தான் தலைவர் பதவி கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகளிடம் அடித்து சொல்லி வருகிறார்.

காய் நகர்த்தும் சீனியர்கள்

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டப்பேரவையின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோரும் தங்களது மகன்களை தலைவராக்கி விடவேண்டும் என்ற முனைப்புடன் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

P Chidambaram - Updatenews360

அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடியும் வரை அழகிரியின் தலைவர் பதவிக்கு எந்த பங்கமும் ஏற்பட வாய்ப்பில்லை. அவர் எப்படியும் 10 சதவீத வார்டுகளையும், மாநகராட்சிகளில் குறைந்தபட்சம் 5 மேயர் பதவிகளையும் திமுகவிடம் இருந்து பெற்றுத் தருவதாக டெல்லி மேலிடத்திடம் உறுதி அளித்து இருக்கிறார் என்ற பேச்சு கட்சியில் உள்ளது. அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பிறகே புதிய தலைவர் நியமிக்கப்படலாம்” என்று தெரிவித்தனர்.

எனினும், தற்போதைக்கு விஜயதரணியின் கையே கட்சியில் ஓங்கி இருக்கிறது, என்பதே எதார்த்தம்!

Views: - 415

0

0