‘எல்லாத்துக்கும் மோடிதான் காரணம்…!’ : ட்விட்டர் கணக்கு முடக்கமும்… ராகுலின் கதறலும்…!!
Author: Babu Lakshmanan13 August 2021, 3:47 pm
காங்கிரஸ் தலைவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே ‘மோடி’ போபியா பெரும் நடுக்கத்தையும், கலக்கத்தையும் கொடுத்து வருவதை காண முடிகிறது. அதுவும் ராகுல்காந்திக்கு எந்த விஷயம் என்றாலும் அதில் பிரதமர் மோடியை தொடர்புபடுத்திப் பேசாவிட்டால் தூக்கமே வராது, போலிருக்கிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலின்போது சூரத் நகரில் ராகுல் பேசுகையில், ‘‘நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திரமோடி என்று எல்லாத் திருடர்களும் எப்படி மோடி என்ற பொதுப் பெயரிலேயே உள்ளனர்?” என்று கேள்வி எழுப்பப் போய் ஒரு வழக்கில் சிக்கினார்.
இந்த நிலையில்தான் அவர் இன்னொரு சர்ச்சையில் தற்போது சிக்கி இருக்கிறார்.
புகைப்படத்தால் வந்த சர்ச்சை
2 வாரங்களுக்கு முன்பு தேசிய தலைநகர் டெல்லியில் 9 வயது பட்டியல் இன சமூக சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கயவர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் உடலை அவருடைய பெற்றோரின் சம்மதம் இல்லாமல் போலீசார் எரித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
அந்த சிறுமியின் குடும்பத்தினரை, ராகுல் சந்தித்து, அதை புகைப்படத்தோடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும், ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
ரீ ட்விட்டால் வந்த சிக்கல்
இதையடுத்து ராகுல் தனது ட்விட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். எனினும் அவரின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் சிங் போன்றோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.
அதற்கு முக்கிய காரணம் அந்த சிறுமியின் பெற்றோரை ராகுல் சந்தித்த புகைப்படத்தை இந்த தலைவர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு ‘ரீ ட்விட்’ செய்திருந்ததுதான்.
இதையடுத்து ட்விட்டர் விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.
இதனால் காங்கிரஸ் கொதித்துப் போனது. உடனடியாக இதை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் ட்விட்டர் நிர்வாகம் ராகுலின் ட்விட்டர் பக்கத்தை முடக்கி விட்டதாக குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக அக்கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் ரோஹன் குப்தா கூறுகையில்,
“மத்திய அரசின் அழுத்தத்திற்கு ஏற்ப ட்விட்டர் நிறுவனம் செயல்படுகிறது. அதனால்தான் நாடு முழுவதும் 5 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. விதிகளை மீறியதால் முடக்கிவிட்டோம் என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளிக்கிறது.
விதிமுறை மீறல் இருப்பதாகக் கூறினால், ஆகஸ்ட் 2 முதல் 5-ம் தேதிவரை பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் ட்விட்டர் கணக்கில், சிறுமியின் பெற்றோர் புகைப்படம் எவ்வாறு இருந்தது?
இது இரட்டை நிலைப்பாடு. அழுத்தத்தின் பிடியில், நெருக்கடியில் ட்விட்டர் நிறுவனம் செயல்படுகிறது. இது கொள்கை விதிமுறை மீறலா எனத் தெளிவாகச் சொல்லுங்கள். இது கொள்கை விதிமீறலாக இருந்தால், பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் ட்வீட்டும் நீக்கப்பட வேண்டும். ஏன் 5-ம் தேதிவரை இருந்தது? மக்களின் குரலாக நாங்கள் இருப்பதை யாரும்
தடுக்க முடியாது” எனக் கொந்தளித்து இருக்கிறார்.
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சூடாகி தன் பங்கிற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “இத்தகைய போக்கின் மூலம் பாஜக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் எந்த பதிவும் வெளிவரக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.
உலக வரலாற்றில் ஹிட்லர், முசோலினியின் சர்வாதிகாரத்தை அறிந்திருக்கிறோம். அத்தகைய சர்வாதிகாரிகளின் இறுதி காலம் எப்படி முடிந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். அதைப் போல, ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் மிருக பல பெரும்பான்மையோடு ஒரு சர்வாதிகாரியாக தமது அதிகார பலத்தை வைத்துக் கொண்டு எதேச்சதிகாரமாக மோடி செயல்பட்டு வருகிறார்.
கருத்து சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையாகும். அதன் அடிப்படையில், சமூக ஊடகங்களான ட்விட்டர், முகநூலில் பதிவிடுகிற உரிமையை பறிக்கிற மோடி அரசின் சர்வாதிகாரத்தை முறியடிப்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகள் எல்லாம் ஓரணியில் திரளவேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய முயற்சிகளின் மூலமே மோடியின் சர்வாதிகாரத்தை முறியடிக்க முடியும்” என்று பிரதமர் மீது ஏகத்திற்கும் வசைபாடி இருக்கிறார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
“ஆனால், இந்த விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையில் உள்ள நியாயத்தை தேசிய கட்சியான காங்கிரசின் தலைவர்கள் யாருமே புரிந்து கொள்ளாமல், கதறுவது வேதனையாக உள்ளது” என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், “கட்சி தலைவர்களின் ட்வீட்டை அப்படியே மறு பகிர்வு செய்வதை பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளுமே மேற்கொள்கின்றன. இதுதான் சிக்கலுக்கு காரணம்.
சிறுமிகள், பாலியல் பலாத்கார பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அவர்கள் மாணவிகளாக இருந்தால் பள்ளியின் பெயரையோ, படிக்கும் வகுப்பையோ நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடக் கூடாது, அந்த சிறுமியின் பெற்றோர், உடன் பிறந்தோர் யார் என்பதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று
7 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் ஊடகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
அதன் பிறகும் சில ஊடகங்கள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் புகைப்படத்தை யார் என்பது தெரியாமல் மங்கல் நிறத்தில் மாற்றி வெளியிட்டு வந்தன. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரின் புகைப்படங்களை ஊடகங்கள் பயன்படுத்தின. இது போன்ற புகைப்படங்களை உபயோகித்தால் பார்ப்பவர்கள் மனக்கவலைக்கு உள்ளாவார்கள் என்ற சிந்தனையுடன் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், “பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருமாற்றம் செய்தோ அல்லது முகங்களை மங்கலாகவோ பயன்படுத்தக்கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தது.
காங்கிரஸ் தலைவர்களுக்கு அழகல்ல
இவற்றை மீறும் விதமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்த புகைப்படத்தை ராகுல் வெளியிட்டதால்தான் அவருடைய கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. அதற்கு முன்பாகவே நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் தங்கள் தலைவர் வெளியிட்ட பதிவை ரீ ட்விட் செய்துவிட்டனர். அதனால்தான் அவர்களது டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டது. இதற்கான காரணம் ராகுல் காந்திக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவர் இதை வெளியே சொல்லவில்லை.
இதை அறிந்து கொள்ளாமல் இது ஏதோ மோடி செய்த சதி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. தேசியப் பட்டியல் இனத்தவரின் ஆணைய ட்விட்டர் பதிவுகளில் அந்தப் படம் இருந்ததே என்று காங்கிரஸ் தலைவர்கள் குதர்க்கமாக ஒரு கேள்வியையும் எழுப்புகின்றனர்.
இவர்கள் வைக்கும் வாதம் எப்படி இருக்கிறது என்றால் யாராவது ஒருவர் தவறு செய்துவிட்டால் அதை விட பெரிய தவறை நாங்கள் செய்வோம். அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதுபோல் உள்ளது.
இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் பிரதமர் மோடிதான் காரணம் என்பது போல காங்கிரஸ் கண்மூடித்தனமாக கருத்து தெரிவிக்கிறது. அதாவது காங்கிரசாருக்கு மோடி ‘போபியா’ வந்திருக்கிறது. அதனால்தான் எதையுமே புரிந்து கொள்ளாமல், மோடியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு அழகல்ல” என்று கவலைப்பட்டனர்.
“இந்த விஷயம் குறித்து, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு சட்டவல்லுனர்கள் கொஞ்சம் பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
0
0