விரைவில் இடைத்தேர்தல்… திடீர் நெருக்கடி தரும் திமுக…? திண்டாட்டத்தில் தமிழக காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 8:46 pm
Quick Share

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையேயான உறவு மிகவும் சுமுகமாக உள்ளதா?…இல்லையா?… என்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் விதமாக விரைவில் ஒரு அக்னி பரீட்சை நடக்க இருக்கிறது என்று அரசியல் களத்தில் ஒரு பரபரப்பு பேச்சு உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இன்னும் சில மாதங்களில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்தான் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இத் தொகுதி எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 4-ம் தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

ஒரு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தால், அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பொதுவான விதி முறையாகும். அப்படிப் பார்த்தால் வரும் ஜூலை மாதம் 3-ம் தேதிக்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் அதற்கு முன்பாகவே வேறு மாநிலங்களில் எம்பி, எம்எல்ஏ இடைத்தேர்தலோ அல்லது சட்டப்பேரவை தேர்தலோ நடந்தால் அதனுடன் சேர்த்து இடைத் தேர்தலையும் நடத்தலாம்.

அப்படிப் பார்த்தால் வருகிற மார்ச் மாதம் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் உள்ளது. அல்லது மே மாத மத்தியில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம்.

என்றபோதிலும் தேர்தல் ஆணையம் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தலை நடத்தி முடித்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் திமுக அளித்த
தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலை நான்கு ரூபாயும், பெட்ரோல் விலை இரண்டு ரூபாயும் குறைப்பு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு வங்கி கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து போன்றவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் பரவலாக காணப்படுவதுதான். ஏனென்றால் இதுபோன்ற வாக்குறுதிகளில் பெரும்பாலானவை மக்களுக்கு நேரடியாக பணப்பயன் தரக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் என்னவோ ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடுவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் அண்மையில் தொடங்கப்பட்டும் விட்டது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், வார்டு செயலாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழக்கப்பட்டு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது”இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்த முடிவு ஈவிகேஎஸ் இளங்கோவன் கையில்தான் உள்ளது. அவருக்கு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளிக்கப்படுமானால், அவர் சம்மதத்தோடு, ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளது” என்கின்றனர்.

காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில், தற்போது திமுக போட்டியிட தீவிர ஆர்வம் காட்டி வருவது தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிக்கு இக்கட்டானதொரு சூழலை உருவாக்கி இருக்கிறது.

தங்களது தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டு கொடுக்காது என்று என்னதான், அழகிரியின் ஆதரவாளர்கள் கூறினாலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தான் போட்டியிடும் என்று அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்கக் கூடியதாகவே உள்ளது.

“திமுக அரசு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம் என்று சொன்னாலும் கூட அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் மட்டும்தான் நேரடி பணப்பயன் தருவதாக அமைந்திருக்கிறது. அதேபோல பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பதாக கூறி 3 ரூபாய் மட்டுமே குறைத்தனர். மற்றபடி திமுக அரசு எதையும் பெரிதாக செய்யவில்லை என்ற எண்ணம் தமிழக மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.

தவிர அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது என்ற குற்றச்சாட்டை தீவிரமாக வைத்து வருகின்றன. குறிப்பாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து வெடித்த பயங்கர கலவரம், கோவையில் கார் சிலிண்டர் குண்டு வெடித்து ஒருவர் பலியான சம்பவம், அன்றாட செய்திகளாகிவிட்ட கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், சிறுமிகள், இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினரின் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றையும் விமர்சித்து வருகின்றன.

இவற்றை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரமாக முன் வைக்கலாம். அதனால் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரால் இது போன்ற பிரச்சாரங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஒருவேளை காங்கிரஸ் தோற்று விட்டால் அது திமுக அரசின் மீதான நம்பகத்தன்மையை பெரிதும் குறைத்து விடும் என்று திமுக கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதனால் இதுபோன்ற நெருக்கடியான நிலையை தனக்கு ஏற்படுத்திக் கொள்ள திமுக ஒரு போதும் விரும்பாது. அதுமட்டுமின்றி, அதிமுகவிற்கு அதிக செல்வாக்கு கொண்ட மாவட்டங்களில் ஈரோடும் ஒன்று. தற்போது மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகளால் கொங்கு மண்டலத்தில் பாஜகவும் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஈரோடு மாவட்டத்தில் எந்த செல்வாக்கும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்குடன் திமுகவே நேரடியாக களத்தில் குதிக்கும் வாய்ப்புகளே அதிகம்.

2021 தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அந்த ஓட்டு வித்தியாசத்தை 80 ஆயிரம் ஆகவோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ அதிகரிக்க திமுக விரும்பும் என்பது நிச்சயம்.

இதன் மூலம் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. எதிர்க்கட்சியின் பொய்ப் பிரச்சாரத்திற்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டனர் என்று திமுக பெருமைப்பட்டு கொள்ளும் வாய்ப்பும் உருவாகும். காங்கிரஸ் போட்டியிட்டு தோற்றால் அக்கட்சிக்கு பெரிதாக ஒன்றும் இழப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் திமுகவுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தலாம்.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அத்தனை பேரும் கண்களை மூடிக்கொண்டு திமுகவை ஆதரிப்பவர்களாக மாறிவிட்ட நிலையில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிடும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களிடமே இல்லாமல் போய்விட்டது. என்றபோதிலும் திமுகவுக்கும், தமிழக காங்கிரசுக்கும் இடையே மறைமுக முட்டல், மோதல் போக்கு உள்ளதாக கூறப்படும் நிலையில் அது உண்மையா? பொய்யா என்பதை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆகவும் இது அமையும்.

மேலும் இந்த இடைத்தேர்தல் 2024 தேர்தலுக்கு தமிழகத்தில் ஒரு முன்னோட்டமாக அமையலாம் என்பதாலும் திமுகவின் தயவு இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது தங்களுக்கு தாங்களே குழியை வெட்டிக் கொள்வது போன்ற செயலாகும் என்பதாலும் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் விருப்பத்தை ஒருபோதும் தட்டிக் கழிக்க மாட்டார்கள்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 452

0

0