சர்ச்சையாக மாறிய தமிழகத்தின் பிறந்த நாள்….! திமுகவுடன் பாமக மல்லுக்கட்டு!!!
Author: Udayachandran RadhaKrishnan31 October 2021, 1:09 pm
அரசியல் களத்தில் சர்ச்சைகளும், சலசலப்புகளும், இல்லாமல் போனால் அது சுவைக்காது. ஏதாவதொரு விவாதம் நடந்துகொண்டே இருந்தால்தான் சூடாக இருக்கும்.
சர்ச்சையான தமிழ்நாட்டின் பிறந்தநாள்
அந்த வகையில் தற்போது தமிழக அரசியலில், வெடித்துள்ள சர்ச்சை தமிழ்நாட்டின் பிறந்த நாள் எப்போது?… என்பதுதான். இதுபற்றிய விவாதம் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்குப் பின்பு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1-ம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூரும் நாளாகத்தான் அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே அன்றைய தினத்தை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணா 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
அதை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியிருக்கிறார்.
பாமக கடும் எதிர்ப்பு
ஆனால் இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலினுக்கு சுடச் சுட பதில் அளித்து நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “தமிழ்நாடு நாள் என்றைக்கு கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்து தேவையற்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவற்றுக்கு செவிமடுத்து ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்ட 1967 ஜூலை 18-ம் நாளும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட நாளுமான 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாளும் மிகவும் முக்கியமானவைதான்.
நவம்பர் 1 தான் சரியான நாள்
ஆனால் அந்த நாட்களை தமிழ்நாடு நாளென்று கொண்டாட முடியாது இன்றைய தமிழ்நாட்டின் எல்லை பரப்பு உறுதிசெய்யப்பட்ட நாளும் இன்றைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பைக் கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்ட நவம்பர் 1-ம் நாள்தான் தமிழ்நாடு நாள் ஆகும். இதை மாற்ற முடியாது.
ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாக கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ ஒரு குறிப்பிட்ட பெயரை சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாக கொண்டாட முடியாது. இது பின்னாளில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு 66 ஆண்டுகளும், தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 52 ஆண்டுகளும் முதலமைச்சர் கூறுவதைப் போல தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 54 ஆண்டுகளும் ஆகின்றன. தமிழ்நாட்டின் வயது என்ன என்று வினா எழுப்பப்பட்டால் அதற்கான விடை எது?என்ற குழப்பம்தான் ஏற்படும். இது தேவையற்றது.
ஏற்றுக்கொண்ட கருணாநிதி
நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்தது. இதனை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். தமிழ் அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தன. அதையொட்டியே விழாக்களும் எடுக்கப்பட்டன. 2019ல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அப்போது இதை யாரும் எதிர்க்கவில்லை.
கடந்த ஆண்டு தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டபோது கூட அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே நவம்பர் 1-ம் தேதியையே தொடர்ந்து தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
ஏட்டிக்கு போட்டி திமுக
இதுபற்றி அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “முந்தைய அதிமுக அரசு என்ன செய்ததோ அதை ஏற்க மறுத்து அப்படியே ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொள்வது திமுக அரசின் வழக்கமாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழர்கள் காலம் காலமாக சித்திரை மாத முதல் நாளைத்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த நாளைத்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
ஆனால் 2006-ல் ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக அரசு 2008-ம் ஆண்டு பொங்கல் திருநாள்தான் அதாவது தை மாதத்தின் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தது. 2011ல் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு எப்போதும் போல் சித்திரை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்பதை உறுதி செய்தது.
திமுகவை பொறுத்தவரை தமிழ், தமிழர்கள் தொடர்பான விஷயங்கள் என்றால் அது தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாட நினைக்கிறது.
சட்டமேலவையை கொண்டு வர முயற்சி
1986-ல் தமிழக சட்டமேலவையை அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் கலைத்தார். ஆனால்
35 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் சட்டமேலவையை கொண்டுவர திமுக அரசு முயற்சிக்கிறது. மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளதாக திமுக அரசு கூறும் நிலையில் இதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாயை வீணாக செலவிட விரும்புவது தெரிகிறது.
2020ம் ஆண்டே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நவம்பர் முதல் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடி விட்டது. இப்போது திமுக அரசு வேறொரு நாளை அறிவிக்கிறது.
திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கடந்த வாரம்தான் திமுக அரசிடம் தமிழகம் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதியை சிறப்பாக கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
1956-ல் ஆகஸ்ட் மாதம் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளின் அடிப்படையில் நவம்பர் மாதம் 1-ம் தேதி
14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.
தமிழக வரலாறை தவறாக்கும்
எப்போது தமிழ் மொழியை அடிப்படையாக வைத்து மாநிலம் பிரிக்கப்பட்டு விட்டதோ அப்போதே தமிழ்நாடு உருவாகிவிட்டது என்றுதான் அர்த்தம். அது தொடர்பாக தமிழறிஞர்களிடம் கருத்து கேட்டு தெரிந்து கொண்ட பின்புதான் நவம்பர் முதல் நாளை முந்தைய அதிமுக அரசு 2019-ல் தமிழ்நாடு தினமாக அறிவித்து மறுவருடம் கொண்டாடியதும் விட்டது. இதைத்தான் டாக்டர் ராமதாசும் சுட்டிக்காட்டுகிறார். இப்படி எந்தவொரு விஷயத்திலும் திமுக முரண்பட்டு நடந்து கொள்வது மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களை குழப்பமடையச் செய்யும்.
தவிர, தமிழகம் பற்றி வரலாற்றிலும் தவறான தகவல்தான் பதிவாகும்”என்று அந்த நிர்வாகிகள் கூறினர்.
0
0