அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி: விருப்பமனு கேட்டவர் மீது தாக்குதல்…விரட்டியடித்த தொண்டர்கள்..!!

Author: Aarthi Sivakumar
3 December 2021, 5:30 pm
Quick Share

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமனு கேட்டு அக்கட்சி தலைமை அலுவலகம் வந்த தொண்டரை அங்கிருந்த நிர்வாகிகள் விரட்டியடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகிற 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு இன்று தொடங்கியுள்ளது. அப்போது விருப்ப மனு வாங்க வந்த தொண்டரை அங்கிருந்த இபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர். அதாவது நடைபெற உள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங் விருப்ப மனு பெற வந்தார்.

அப்போது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனு கோரினார். ஆனால் அவருக்கு வேட்புமனு மறுக்கப்பட்டது. இதனால் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த போதே அங்கிருந்த ஆதரவாளர்கள் சிலர் அவரை தாக்க தொடங்கினர். பின்னர் அவரை அதிமுக அலுவலகத்தை விட்டு வெளியில் தள்ளினார்.

அப்போது, அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதாவது ஒருங்கிணைப்பாளர் பதவியை பொருத்தவரையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்கு மட்டுமே வேட்புமனு என்றும், வேறு யாருக்கும் கிடையாது என்றும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூறியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் என்பது ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Views: - 102

0

0