ரூ. 2,000 கொரோனா நிவாரணம் விநியோகிக்கும் பணி தொடக்கம் : சேப்பாக்கத்தில் உதயநிதி தொடங்கி வைத்தார்

15 May 2021, 11:07 am
Udhayanidhi stalin - updatenews360
Quick Share

கொரோனா நிவாரணமாக ரூ. 2,000 வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று தொடங்கியது.

கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.4,000 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், முதற்கட்டமாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை கடந்த 10ம் தேதி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி, அதன் அடிப்படையில் தினமும் 200 பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த டோக்கனில், ரேசன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. டோக்கன் எண்ணை குறிப்பிடுவதற்கு தனியாக காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம். தொற்றில் இருந்து மீட்போம்’’ என்கிற கொரோனா விழிப்புணர்வு வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த டோக்கன் வழங்கும் பணிகள் வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 15ம் தேதி முதல் ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சமூக இடைவெளியுடன் டோக்கன் அடிப்படையில் மட்டுமே ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட இருக்கிறது.

முழு ஊரடங்கின் போது ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட தேதிகளில் முகக்கவசம் அணிந்து சென்று சமூக இடைவெளி கடைபிடித்து கொரோனா நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், முதற்கட்ட கொரோனா நிவாரண நிதியான ரூ.2,000 வழங்கும் பணிகளை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இன்று காலை தொடங்கி வைத்தனர். நிவாரண தொகை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு மே 22 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமையும் (மே 16) ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பயனாளிகளுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Views: - 115

0

0