பரவும் கொரோனா… குழப்பத்தில் எதிர்க்கட்சிகள்… மக்களை பீதிக்கு உள்ளாக்கும் அவலம்!!

22 April 2021, 8:53 pm
DMK cover - corona - updatenews360
Quick Share

கொரோனா தொற்று, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு இருந்ததைவிட தற்போது கொரோனாவின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தையும் கடந்துவிட்டது. கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்படாத மாநிலங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு கொரோனா தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்துள்ளது. மராட்டியத்தில், நாளொன்றுக்கு 67 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கேரளா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அன்றாடப் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து விட்டது.

பீகார், தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனாவால் தினசரி 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் பலியாவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தும் விட்டது. இப்படி கொரோனா உச்சம் பெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கொரோனா பற்றி மக்கள் பெரும் பீதி கொள்கிற அளவுக்கு மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்க தொடங்கியிருக்கின்றன.

TN Corona - Updatenews360

நாட்டு மக்கள் கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு அவதிப்படும் நிலையில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி மருந்ததை ஏற்றுமதி செய்யலாமா? இங்கே ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கும்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறீர்களே ஏன்?, தடுப்பூசியின் விலை நிர்ணயத்திலும் நிறைய முரண்பாடுகள் உள்ளதே? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசிடம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

“இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடி என்பது கொரோனாவால் ஏற்பட்டதும் மட்டுமல்ல. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளினாலும் ஏற்படுகிறது. எங்களுக்கு வெற்று பேச்சுக்கள் எதுவும் வேண்டாம், நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள்” என்றும் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியோ, நாட்டின் பேரழிவிற்கு பிரதமர் மோடிதான் காரணம் எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று ஆவேசமாகப் பேசுகிறார்.

dmk stalin - updatenews360

திமுக தலைவர் ஸ்டாலின், “கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி கண்டு விட்டன. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாத பாஜக அரசு மாநில அரசுகளை கிள்ளுக் கீரைக்களாக நினைக்கிறது” என்று விமர்சித்து உள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியினரோ மத்திய அரசிடம் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை என்று கொந்தளிக்கின்றனர். திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், சந்தடி சாக்கில் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடியை தாக்கி மறைமுகமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

உயிர் காக்கும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்தியஅரசு அனுமதி அளிப்பதாக தெரிவித்தால் உடனே மத்திய அரசு மீது வைகோ படுவேகமாக பாய்கிறார். இதை சாக்காக வைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் பங்கிற்கு, “மத்திய அரசின் தவறான நிலைப்பாட்டால்தான் தடுப்பூசியின் விலை உயர்ந்திருக்கிறது” என்று கடுமையாக தாக்கி இருக்கிறார். அதாவது ஒரு பெரும் தொற்று நோய் பரவலை வைத்து எதிர்க்கட்சிகள் ஒரு யுத்தத்தையே மத்திய அரசுக்கு எதிராக நடத்துவது வெளிப்படையாகவே தெரிகிறது.

MNM Kamal - Updatenews360

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் உலக நாடுகளில் கொரோனா பரவியபோது, அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, வெளியில் சென்று வீடு திரும்பும்போது சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுவது ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் பொதுவான அறிவுறுத்தலை அனைத்து நாட்டு மக்களுக்கும் விடுத்தது.

அதை மோடி அரசு, நம் நாட்டு மக்களும் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் எத்தனை சதவீத மக்கள் அதன்படி நடந்துகொண்டனர் என்பது கேள்விக்குறிதான்!

இப்போது மக்களின் உயிர்களைப் பற்றி மிகவும் கவலைப்படும் எதிர்க்கட்சிகள் அன்று மத்திய அரசு கூறிய தற்காப்பு நடவடிக்கைகளை கிண்டலும், கேலியும் செய்தன. மோடி சொல்வதை நாம் கேட்பதா? என்று முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக திரிந்தவர்களையும் காணமுடிந்தது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள்: கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தடுப்பூசி புழக்கத்திற்கு வந்தாலும்கூட மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. 2023-ம் ஆண்டுக்கு பிறகே கொரோனா தொற்று தணியும் என்றும் அப்போது அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது. இதுகுறித்த விழிப்புணர்வை மத்திய அரசு மீண்டும் ஏற்படுத்தியபோது, அதை எதிர்க்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நேரத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்தாலும், தடுப்பூசிகள் பொது பயன்பாட்டுக்கு வரத்தொடங்கியதாலும் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மீண்டும் பொது இடங்களில் கூட ஆரம்பித்தனர். முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அறிவுரைகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன.

அப்போது பொதுமக்களுக்கு எவ்வித விழிப்புணர்வையும் எதிர்க்கட்சிகள் மறு நினைவூட்டவில்லை.

மாறாக தடுப்பூசியால் ஒரு சிலருக்கு பாதகம் ஏற்பட்டால் அதை வைத்து அரசியல் செய்தன. தடுப்பூசி குறித்து பொதுமக்கள் யாரும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவை நம்பிக்கை தரும் விதமாக பேசவும் இல்லை. தமிழகத்தில் சில தனியார் தொலைக்காட்சிகளும் தடுப்பூசி குறித்து பீதியை கிளப்பும் விதமாக தொடர்ந்து விவாதங்களை நடத்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தின.

Corona_Vaccine_UpdateNews360

இப்போது தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறி அதையே ஒரு பெரும் பிரச்சனையாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கி இருக்கின்றன. இதேபோல்தான் தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்கின்றனர், நம்மிடம் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்புகின்றனர். ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கினால் அது மத்திய அரசு செய்யும் சதி வேலை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

உண்மையைச் சொல்லப்போனால், கொரோனா பரவலை தடுக்க ஆக்கப்பூர்வமான யோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு இதுவரை எந்த எதிர்க்கட்சியும் கூறவில்லை. மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்பது பற்றியும் எந்த அறிவுறுத்தலையும் அவை வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு பாதிப்பு என்ற பிறகே அந்த அறிவுரைகள் வெளிவருகின்றன.

இதை வைத்து பார்க்கும்போது ஒரேயொரு விஷயத்தில் எதிர்கட்சிகள் தெளிவாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மக்களின் உயிர்களை காப்பதில் எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டுவதை விட பிரதமர் மோடிக்கும், அவர் சார்ந்த பாஜகவுக்கும் அவப் பெயரை உருவாக்கி 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அவை தயாராகி வருகின்றன.

கொரோனாவை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு எதுவும் கிடைக்காது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் தற்போதைய ஒரே சிந்தனையாக உள்ளது. அதனால்தான் அவர்கள் மத்திய அரசுடன் கைகோர்க்காமலும், மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தாமலும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். குளு குளு பிரதேசங்களை தேடிப்போய் பல நாட்கள் முகாமிட்ட தலைவர்களும் உண்டு.

உண்மையிலேயே, அவர்களுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மத்திய அரசிடம் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை உருவாக்குங்கள். அதில் நாங்களும் பங்கேற்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவை வீழ்த்துவோம் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கலாம். ஆனால் இதுவரை எந்த எதிர்க்கட்சியும் அப்படியொரு யோசனையை கூறவே இல்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் மத்திய அரசுக்கு எதிராக மக்களிடம் கொதி நிலையை ஏற்படுத்தவேண்டும் என்பதாகவே உள்ளது” என்று ஆழ்ந்த கவலையுடன் அவர்கள் குறிப்பிட்டனர்.

இப்படி அரசியல் விமர்சகர்கள் கூறுவதிலும், உண்மை இருக்கவே செய்கிறது!

Views: - 244

0

0