கொரோனா ருத்ரதாண்டவம் எதிரொலி : 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதி… மருந்துக்கடைகளிலும் விற்பனை…!!!

19 April 2021, 7:56 pm
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி, அதிகம் பாதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய முதல் இடத்தை பிடித்து விட்டது. நாளொன்று 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் முன்பை விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநில அரசுகள் தேவையான கட்டுப்பாடுகளை பிறப்பித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

அதேவேளையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசியையும் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்தே வருகிறது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போட இந்திய மருத்துவ கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி மருந்தை விற்பனை செய்யவும், உற்பத்தியாகும் மருந்துகளில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் எனவும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 72

0

0