‘கொரோனாவை ஜெயிக்க இரவுநேர ஊரடங்கு போதாது… இத செய்யுங்க’ : தமிழக அரசுக்கு ராமதாஸ் ஐடியா..!!!

20 April 2021, 12:31 pm
Quick Share

சென்னை : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு போதுமானதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் இதுவரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வர இருக்கிறது.

மேலும், சுற்றுலாதளங்கள் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் பொழுதுபோக்கு தலங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு போதுமானதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல. மக்களை பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மிகவும் முக்கியமானதான டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்தும், 200 வகையான நோய் பாதிப்புகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியும்.

இவை அனைத்தையும் விட முக்கியமானது மக்களே… விழிப்புணர்வுடன் இருங்கள். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். முகக்கவசம் அணியுங்கள். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 187

0

0