சென்னையில் அமலுக்கு வரும் மினி லாக் டவுன்…? திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு : நேரடியாக களமிறங்கிய மத்திய அரசு..!!!
Author: Babu Lakshmanan30 December 2021, 2:32 pm
சென்னை ; சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் மீண்டும் கடும் ஊரடங்கு விதிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை சற்று கட்டுக்குள் வந்தது. சென்னை, கோவையில் மட்டுமே பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்பட்டு வந்தன. குறிப்பாக, சுமார் 25 மாவட்டங்களில் நேற்று வரை ஒற்றை இலக்கு பாதிப்பு மட்டுமே பதிவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக சராசரி பாதிப்பு 600க்கு குறைவாக இருந்து வந்தது. ஆனால், நேற்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து 739ஆக உயர்ந்தது. இதற்கு முழுக்க முழுக்க சென்னை மாநகரில் அதிகரித்த தொற்று எண்ணிக்கையே காரணமாகும். கடந்த 10 நாட்களாக கோவையில் தொற்று பாதிப்பு குறைந்து வந்த வேளையில், மாறாக சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றது. சென்னையில் கடந்த 28ம் தேதி 194ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று, 294 ஆக அதிகரித்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒமிக்ரான் தொற்று ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகங்களே தங்களுக்கான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
எதிர்வரும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்த நிலையிலும், தமிழக அரசு அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்காதது எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்த நிலையில், இந்திய அளவிலான கொரோனா பாதிப்பும் இன்று உச்சத்தை தொட்டிருப்பதால், பாதிப்புகள் அதிகம் உள்ள நகரங்களுக்கு மத்திய அரசே நேரடி அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், சென்னையில் கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றும், திருமணம், துக்க நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் விரைவில் மினி லாக் டவுன் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
0
0