இந்த முறையும் தள்ளிப்போகிறதா மாநகராட்சி தேர்தல்… ? திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் புதுப்புது பிரச்னைகள்!
Author: Babu Lakshmanan9 November 2021, 6:12 pm
தமிழக அரசியல் களத்தில் தற்போது, சூறாவளியாய் சுழன்று கொண்டிருப்பது சென்னை நகரில் பெருவெள்ளம், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், பெட்ரோல் டீசல், விலை எப்போது குறையும்? என்னும் மூன்றே மூன்று பிரச்சினைகள்தான்.
தத்தளிக்கும் சென்னை
கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மழைப்பொழிவு எப்போதும் போல் சுமாராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு பெருத்த அதிர்ச்சி.
குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாகவே கன மழை தொடங்கிவிட்டது.
கடந்த 7-ம் தேதியன்று சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. அதன் பிறகும் கூட தினமும் 5 முதல் 7 சென்டிமீட்டர் என்று பெய்து வருகிறது.
வழக்கமாக, சென்னையின் புறநகர் பகுதிகளில்தான் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பெரிய அளவில் மழை நீர் தேங்கும். ஆனால் இம்முறை சென்னை நகரின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தும் இருக்கிறது.
கடலுக்கு, மீன்பிடிக்க செல்லும் படகுகள் மழை, வெள்ளத்தில் மக்களை மீட்க ஊருக்குள்
படையெடுக்கும் வேதனை காட்சிகளையும் காணமுடிகிறது. தாழ்வான பகுதிகளில் மட்டுமின்றி சற்று மேடான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் கூட நள்ளிரவில் வெள்ளம் புகுந்து சென்னை மக்களை நிம்மதி இழக்க வைத்துள்ளது. அவர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் தஞ்சம் புகுந்து இருப்பதும் பரிதாபமான காட்சிகள்.
உயிர் பிழைத்தால் போதும் என்பதற்காக நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்த விலைமதிப்பு மிக்க டிவி, பிரிஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கட்டில் பீரோ, மேஜை நாற்காலி போன்றவற்றை இழந்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம்
1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளது என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
முதலமைச்சர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக களத்தில் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதுவும் எடப்பாடி பழனிசாமி போதிய போலீஸ் பாதுகாப்பு இன்றி முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் களமிறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இது ஒரு புறம் இருக்க, முதலமைச்சர் ஸ்டாலின் “அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரிவர செயல்படுத்தப் படவில்லை அதனால்தான் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது” என்ற குற்றச் சாட்டை கூறி இருக்கிறார்.
“2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தை வைத்து நகரின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததால் அதன்பிறகு சென்னை நகரில் வெள்ளம் என்பதே இல்லை. எனவே இப்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளதற்கு காரணம், திமுக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படாததுதான்” என்று பதிலுக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டி இருக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை
இரண்டாவது பெரிய பிரச்சினை முல்லைப் பெரியாறு அணை விவகாரம்.
கடந்த 30-ம் தேதி தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை இடுக்கி அணையை நோக்கி திருப்பி விட்டதாக தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதுவும் 142 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையிலும் 136 அடியிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கேரள அரசின் அடாவடியை கண்டித்து கடந்த 8-ம் தேதி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனி நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் நடப்பதற்கு முதல் நாள்தான், முல்லைப்பெரியாறில் பேபி அணைக்கு கீழேயுள்ள 15 மரங்களை வெட்டி அகற்றுவதற்கு கேரள வனத்துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு அனுமதி அளித்திருந்தனர்.
இதற்காக நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதமும் எழுதினார். இதன் பிறகுதான் கேரள அரசியலில் பூகம்பமே வெடித்தது.
ஆர்ப்பாட்டம்
எங்களுக்கே தெரியாமல் வன இலாகா அதிகாரிகள் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்திருக்கின்றனர். இது தவறான நடவடிக்கை என்று கூறி கேரள அரசு பேபி அணையின் கீழே இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்தது.
கேரளாவில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமலேயே நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது அண்ணாமலை ஆவேசமாகப் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டபடி இன்று மதுரை, தேனி, திண்டுக்கல்
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நீதி கேட்டு பல ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,விசிக ஆகியவற்றின் தலைவர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரமா…அப்படின்னா என்னங்க?… என்று கேட்பது போல ஒதுங்கிக்கொண்டு விட்டதை தமிழக மக்கள் கேலியாகப் பார்க்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பில்லை
சிக்கலான இன்னொரு பிரச்சனை தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்பதுதான்!
கடந்த 3-ம் தேதி மத்திய பாஜக அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சி செய்யும் 21 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை ஓரளவு குறைந்து மக்களை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தன. புதுச்சேரி போன்ற ஒரு சில மாநில அரசுகள் பிரதமர் மோடி அறிவித்ததையும் விட இன்னும் சில ரூபாய்கள் அதிகமாக குறைத்து ஆச்சரியப்படுத்தவும் செய்தன.
ஆனால் தமிழகத்தில் இதுவரை பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதமே திமுக அரசு பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்து விட்டது. அதனால் இனி குறைப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை என்று காரணம் கூறப்படுகிறது.
எனினும், திமுக அரசு தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியின்படி
பெட்ரோல் விலையை லிட்டருக்கு மேலும் 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் நிச்சயம் குறைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் காணப்படுகிறது.
சரி, இந்த 3 பிரச்சனைகளும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே, இதில் என்ன புதிதாக இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.
தள்ளிப்போகும் தேர்தல்
இந்த 3 பிரச்சினைகளின் காரணமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது தள்ளிப் போகலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் மழை நீர் புகுந்து ஒவ்வொரு குடும்பமும் ஒரு சில லட்ச ரூபாய்களை இழந்துள்ளன. இந்த நேரத்தில் சென்னை மாநகராட்சிக்கு தேர்தலை நடத்தினால் சட்டப்பேரவைத் தேர்தலின்போது சென்னை நகரில் கிடைத்த வெற்றி திமுகவுக்கு மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் வெள்ளத்தால் ஏற்பட்ட சோகம் ஆளும் அரசின் மீது திரும்ப வாய்ப்பு உள்ளது.
அதேபோல மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தேர்தல் நடந்தால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் காரணமாக திமுக கூட்டணிக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காமல் போகலாம்.
பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்காமல் போனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதுவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதனால் டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி
தேர்தலை, வெள்ள சேத நிலைமையை காரணம் காட்டி அடுத்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் திமுக அரசு கால அவகாசம் கேட்கும் வாய்ப்பும் உள்ளது.
ஏற்கனவே மாநகராட்சிகளுக்கு தனிப்பட்ட முறையிலும், நகராட்சி- பேரூராட்சிகளுக்கு தனித்தனியாகவும் என இரு கட்டங்களாக தேர்தலை நடத்த திமுக அரசு திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த தேர்தலை தற்போதைக்கு தள்ளி வைக்கவே திமுக அரசு விரும்பும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
0
0