பெருமையோ பெருமை, விடியல் ஆட்சிக்கு…! திமுக அரசை கலாய்த்த மா.கம்யூ., : தீபாவளி போனஸால் புஸ்வானமாகும் கூட்டணி…?

Author: Babu Lakshmanan
2 November 2021, 1:32 pm
DMK - cover - updatenews360
Quick Share

திமுக அரசு ஆட்சியமைத்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. பொதுவாக புதிய ஆட்சியை முதல் 6 மாதத்திற்கு யாரும் கடுமையாக விமர்சிக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆட்சியாளர்களுக்கு அது தேனிலவு காலம் என்று கூறுவார்கள். ஆனால் இந்த தேன் நிலவு காலத்தில் கூட பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு திமுக அரசு உள்ளானது.

ஏமாற்றம்

இதற்கு பல காரணங்கள் உண்டு. திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. அதில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுக அரசு கூறுகிறது.

CM Stalin -Updatenews360

ஆனால் எதிர்க்கட்சிகளோ கண்களுக்குத் தெரிந்து ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, அரசு சாதாரண உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா கால நிவாரணம் ரூ.4000 ஆகியவை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன மற்றபடி சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிதாக எதுவும் தெரியவில்லை என்கின்றன.

அதேநேரம் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம், சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே இயற்றப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் 4 லட்சம் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் தொடரில் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நொந்துபோன மாணவர்கள், விவசாயிகள்

முதல் கூட்டத்தொடரில் அப்படி சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை. மாறாக, நீட் தேர்வு முடிந்த மறுநாள் செப்டம்பர் 13ம் தேதி சட்டப்பேரவை 2-வது கூட்டத் தொடரில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கும் கூட எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை. இப்போது நீட் தேர்வு ரிசல்ட்டும் கூட வெளியாகி விட்டது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை 1000 ரூபாய் என்றொரு வாக்குறுதி. இதனால் தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 20 லட்சம் குடும்பத் தலைவிகளும், மாதாமாதம் பணப்பயன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், 6 மாதங்கள் ஆகியும் இதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை. தகுதியுள்ள, விளிம்பு நிலை குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என்ற நிபந்தனை இப்போது விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1 கோடியே 20 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கும் மாதம்தோறும்1000 ரூபாய் கிடைக்கப்போவது இல்லை என்பது வெளிப்படை.

விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை 2500 ரூபாய், ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அது என்னவாயிற்று என்பது தெரியாமல் விவசாயிகள் மனம் நொந்து போயுள்ளனர்.

இதேபோல் கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு
போன்ற பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாய் விலையை குறைப்பதாக கூறிவிட்டு 3 ரூபாய் மட்டுமே குறைத்ததையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசு ஊழியர்களோ, தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக உறுதிமொழி கொடுத்துவிட்டு இதுவரை அதுபற்றிய பேச்சையே காணோம் என்று புலம்புவதும் காதுகளில் கேட்கிறது.

அண்ணாமலை நெருக்கடி

தேர்தலில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், முறைகேடு தொடர்பான சில குற்றச்சாட்டுகளையும் இந்த 6 மாதங்களில் திமுக அரசு சந்தித்தது. குறிப்பாக, மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் 4 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டு நிலுவைத் தொகையை திமுக அரசு வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வைத்தார். அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் அண்ணாமலை மீது வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

annamalai - Updatenews360

அதேபோல் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட் வாங்க டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே இந்த டெண்டரில் கலந்துகொண்டு பெரும் ஆதாயம் அடையும் வகையில் நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதன் மூலம் 3 கோடி ரூபாய் வரை கமிஷன் பெறுவதற்கு முயற்சி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் தீபாவளி இனிப்புக்கு டெண்டர் விடுவது ரத்து செய்யப்பட்டது.

மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு ஊழியர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் மட்டுமே இனிப்புகளை வாங்கவேண்டும் என்று அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும்
ஒரு சுற்றறிக்கையும் அனுப்ப நேர்ந்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான், திமுக கூட்டணி கட்சிகள் தற்போது தேர்தல் வாக்கு விஷயத்தில் திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

கூட்டணி கட்சிகள் போர்க்கொடி

முதலில் அரசு ஊழியர்கள் தங்களுக்குரிய அகவிலைப்படியை 2022 ஏப்ரல் மாதம் வழங்கக்கூடாது முன்கூட்டியே தரவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினர். இதனால் அவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவிக்க நேர்ந்தது.

இப்போது திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தொழிற்சங்கமான சிஐடியூ அரசுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியிருக்கிறது.

சென்னை பெரம்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அண்மையில் சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் அவர்களின் அறிவிப்பு பலகையில் நாட்குறிப்பு ஒன்று எழுதி வைக்கப்பட்டது. அதில் அவர்கள் தங்களுடைய கோரிக்கையை நூதன முறையில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழில் வஞ்சகப் புகழ்ச்சி அணி என்பார்கள். அதாவது ஒருவரை அல்லது ஒரு விஷயத்தை உயர்த்திப் பேசுவது போல மட்டம் தட்டுவதுதான் வஞ்சப்புகழ்ச்சி. அப்படி அவர்கள் எழுதி வைத்த திமுக அரசை குத்திக்காட்டும் கோரிக்கைகள்தான் இவை.

  • தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்னர் போனஸ் கொடுத்த பெருமை.
  • 8 நாட்களுக்கு முன்பு, பண்டிகை முன்பணம் கொடுத்த பெருமை.
  • சம்பள பட்டுவாடா சட்டத்தை மீறி காலதாமதமாக சம்பளம் வழங்கும் பெருமை.
  • எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராடுவதும், ஆளுங்கட்சியாக வந்தவுடன் அமைதி காப்பதும் பெருமை.
  • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடங்கிய இடத்திலேயே நிறுத்திய பெருமை.
  • பெருமையோ பெருமை விடியல் ஆட்சிக்கு!

இந்த பஞ்ச் வசனங்களில், தொழிற்சங்கத்தினரின் மனக்குமுறல் அப்படியே பிரதிபலிக்கிறது. இந்த அறிவிப்பு பலகை செய்தி தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதனால் திமுக தலைமை கொந்தளித்துப் போய் இருக்கிறது, என்கிறார்கள்.

வஞ்சப் புகழ்ச்சி

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவின் பிரதான கூட்டணி கட்சி. அவர்களுடைய தொழிற்சங்கத்தினர் ஆட்சிக்கு வந்ததும் திமுக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று மலைபோல் நம்பி இருந்தது, தெரிகிறது.

ஏனென்றால் சிஐடியூ தொழிற்சங்கத்திற்கு இணையானது, திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை. இந்த இரண்டு யூனியன்களும் கடந்த காலங்களில் அதிமுக அரசை எதிர்த்து கூட்டாக பல தொடர் போராட்டங்களை நடத்தியவை. அதனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் நமது கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றி விடும் என்று சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

CITU - updatenews360

ஆனால் 6 மாதங்கள் ஆகியும் திமுக ஆட்சியில் தங்களுக்கு சாதகமாக எந்தவொரு விஷயமும் நடக்கவில்லை என்பது அவர்களுக்கு வேதனையை தந்திருக்கிறது. அதனால்தான் திமுக அரசை புகழ்ந்து பேசுவதுபோல மட்டம் தட்டி இருக்கின்றனர்.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இவர்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் அதிமுக அரசின் ஆட்சி காலமே பரவாயில்லை என்று பாராட்டுவதுபோலவும் தெரிகிறது.
அதனால்தான் சில விஷயங்களில் அவர்கள் மறைமுக ஒப்பீடு செய்தும் இருக்கிறார்கள்.
தவிர, இந்த பழைய ஓய்வூதியத் திட்ட கோரிக்கை எந்தக்காலத்திலும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பெரும் கவலையும் அவர்களது வஞ்சப் புகழ்ச்சியில் வெளிப்படுகிறது” என்று குறிப்பிட்டனர்.

Views: - 482

0

0