பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

11 November 2020, 7:00 pm
Quick Share

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி அமைப்புசாரா நலவாரியம் அமைக்கப்படும் என விருதுநகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் 8,466 பயனாளிகளுக்கு ரூ. 45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, நடந்த உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு விழாவில் அவர் பேசியதாவது :- மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும். புதிதாக அமைக்கப்படும் நல வாரியத்தால் 4 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் பலனடைவார்கள். பட்டாசுக்கு தடை விதித்த மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. பட்டாசு தொழிலுக்காக அரசின் சார்பில் நீதிமன்றத்திலும் வாதாடினோம்.

தமிழகத்தில் வீடுவீடாகச் சென்று கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா சமயங்களில் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு உதவி செய்து வருகிறது. இந்த தொற்று பேரிடர் காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

7 தமிழர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவி முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலின் கீழ்தரமான அரசியலை செய்து வருகிறார். அவரது தந்தையின் இறப்பில் கூட எனக்கு சந்தேகம் வருகிறது. அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் என்ன மர்மம் இருக்கிறது என்பதை ஸ்டாலின்தான் கூற வேண்டும், எனக் கூறியுள்ளார்.

Views: - 21

0

0