சைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவாக்கம்..! பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
9 August 2020, 12:24 pmசென்னை: சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் குறைந்த அளவிலான பொது போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. இந்நிலையில், தனி மனித இடைவெளியுடன் கூடிய சுற்றுச்சூழலை காக்கும் வகையில் போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதாவது பொதுமக்களிடம் சைக்கிளை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்காக INDIA CYCLES 4 CHANGE CHALLENGE என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் படி சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை ஆய்வு செய்து, சிறந்த 8 திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட இருக்கிறது.
அதன்படி சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் சமர்ப்பிக்கவுள்ள திட்டம் தொடர்பாக சென்னையில் ஆய்வு ஒன்றை நடத்துகிறது. ஆய்வில் சென்னையில் சைக்கிள் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் சமூக வலைதள பக்கங்களின் மூலம் கருத்துகள் கூறலாம். அவர்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே ஸ்மார்ட் பைக் நிறுவனம் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. 50க்கும் மேற்பட்ட சைக்கிள் நிலையங்கள் இருந்தாலும், கொரோனா பாதிப்பால் தற்போது 13 சைக்கிள் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன.
0
0