டெல்லி பேரணியில் விவசாயிகள் வன்முறை… ஒருவர் பலி : 144 தடை உத்தரவை பிறப்பிப்பு…!!!

26 January 2021, 5:15 pm
Quick Share

டெல்லி : போலீசாரின் தடையை மீறி டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து விவசாயிகள் வன்முறை நடத்தி வரும் நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில், ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக போராட்டத்தை நடத்தி வரு’கின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்று வருகின்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் அடாவடியாக நுழைந்து வருகின்றனர்.

ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் தங்களது டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுத்து முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதை இடித்து உள்ளே நுழைந்தனர். ஒருகட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை எரிந்தனர். மேலும், தடையை மீறி உள்ளே நுழைந்த போலீசார் மீது தடியடி நடத்தி விரட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும், தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாமல், போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முதல் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடிக் கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பி வந்தனர்.

இதனிடையே, கத்தியை வைத்து போலீசாரை மிரட்டுவது, அதிவேகமாக டிராக்டரை ஓட்டி சேதத்தை ஏற்படுத்துவது மற்றும் பேருந்தை டிராக்டரில் மோதி கவிழ்க்கச் செய்வது உள்ளிட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த சூழலில் விவசாயி ஒருவர் வன்முறையினால் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக ஓட்டிச் செல்லப்பட்ட டிராக்டர் மோதி இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால்தான் விவசாயி உயிரிழந்தார் என சக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இன்று நள்ளிரவு முதல் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 11

0

0