27ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி கொரோனா ஆய்வு
24 August 2020, 7:50 pmகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 27ம் தேதி ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், அதிகம் பாதித்த மாநிலங்களாக மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்தை மொத்த பாதிப்பு கடந்துள்ளது.
மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து வரும் 27ம் தேதி கடலூரில் தனது பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, மதியம் நாகப்பட்டினத்தில் ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து மறுநாள் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது, கொரோனா பாதிப்பு குறித்தும் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.