உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? பிரம்மாண்ட ஏற்பாடு : திமுக போடும் புதிய கணக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2023, 5:29 pm
Udhaya - Updatenews360
Quick Share

லோக்சபா தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய மாநாட்டை நடத்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். திமுக இளைஞரணி சார்பாக டிசம்பர் 17ம் தேதி இந்த மாநாடு நடக்க உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் இந்த மாநாடு நடக்க உள்ளது,

அமைச்சரவை பணிகளுக்கு இடையில் அரசியல் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி லோக்சபா தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி சார்பாக மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

திமுக இளைஞரணி தலைகள் சிலர் இந்த லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்களுக்கு வாய்ப்புகளுக்கு கொடுக்கும் விதமாக அவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில்தான் அதற்கு முன்னோட்டமாக இந்த மாநாடு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கொங்கில் திமுகவின் முகமாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் வருகை திமுகவிற்கு வலு சேர்க்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.

செந்தில் பாலாஜி இல்லாத காரணத்தால் கொங்கு மண்டல திமுகவினர் அப்செட் ஆகி உள்ளனர். அவர்கள் பெரிய ஆர்வம் இன்றி உள்ளனர். அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக உதயநிதி இங்கே களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.

40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024 லோக்சபா தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவில் போட்டியிட உள்ள எம்பிக்கள் வேட்பாளர்கள் லிஸ்டை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறாராம்.
முன்னதாக கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பலரை தேர்வு செய்வதில் உதயநிதி பங்கு இருந்தது.ஆனாலும் சீனியர்கள் பலர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் உதயநிதியின் முழுமையான லிஸ்ட் அப்போது பயன்படுத்தப்படவில்லை.

பல சீனியர்களுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்கப்பட்டது. இதனால் உதயநிதிக்கு நெருக்கமான சில இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்க முடியாமல் போனது.

இந்த நிலையில்தான் இந்த லோக்சபா தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க உதயநிதி முடிவு செய்துள்ளாராம். 40 தொகுதிகளில் திமுக எப்படியும் 25 தொகுதிகளில் போட்டியிடும். அதில் 12 தொகுதிகளில் இளைஞரணி வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறராம்.

திமுக சார்பாக நடத்தப்படும் இளைஞரணி மாநாட்டிற்கு பின் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதாம்.

இந்த மாநாடு முடிந்ததும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஸ்டாலினின் உடல்நிலை, கட்சியின் எதிர்காலம், அதோடு ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு போனால் மாநில அரசியலில் உதயநிதிக்கு முக்கிய பதவி ஆகியவற்றை மனதில் வைத்தே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Views: - 380

0

0