தினகரனால் யாருக்கு பாதிப்பு அதிகம் ? திமுக இழக்கும் முஸ்லீம் வாக்குகள்… அதிமுகவுக்கும் நெருக்கடி!!

25 March 2021, 2:01 pm
TTV dinakaran - stalin - updatenews360
Quick Share

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைத்துள்ள கூட்டணியால் திமுக கூட்டணியின் ஓட்டுகள் அதிகம் பிரியுமா அல்லது அதிமுகவின் ஓட்டுகள் பிரியுமா என்பது வரும் 2021 சட்டமன்றத் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. தினகரனின் கூட்டணியில் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் இன்னொரு இஸ்லாமிய கட்சியான எஸ்.டி.பி.ஐ, கட்சியும் இருப்பதால் திமுக கூட்டணிக்குப் போகும் முஸ்லீம் வாக்குகள் தமிழ் நாடெங்கும் பரவலாக பிரிய வாய்ப்பிருக்கிறது.

அதே நேரத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பல தொகுதிகளில் அதிமுக ஓட்டுக்களையும் தினகரன் பிரிப்பதால் பல அமைச்சர்களே நெருக்கடிக்கு ஆளாகியிருகின்றனர். இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் தினகரன் பிரிக்கும் நிலையில் அதிக தொகுதிகளில் யாருடைய வாக்குகள் பிரிகின்றன என்பதைப் பொறுத்து தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

TTV dinakaran 01 updatenews360

இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் காங்கிரசை நீண்ட காலமாக ஆதரித்து வந்தனர். பாஜகவுக்கு எதிரான வலுவான மாற்று காங்கிரஸ்தான் என்ற கருது நிலவியதால் இந்த ஆதரவு தொடர்ந்தது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பான்மையான இந்து வாக்குகளைத் தங்கள் கட்சியும் பெற வேண்டும் என்பதற்காக மென்மையான இந்துத்துவா போக்கைக் கடைபிடிக்கத் தொடங்கினர். எப்படியும் முஸ்லிம்களுக்கு தங்கள் கட்சியைவிட்டால் வேறு வழியில்லை என்ற மனநிலையில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள், உண்மையில் முஸ்லீம் மக்களின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்நிலையில், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. எதிக்கட்சியாகக் கூட காங்கிரஸ் கட்சியால் வர முடியவில்லை என்பதால் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்ற பிம்பம் சரிந்தது. தங்களுக்கென்று ஒரு தனியான கட்சி வேண்டும் என்று இந்திய முஸ்லிம்கள் விரும்பினார். அதன் விளைவாக மஜ்லிஸ் கட்சி போன்ற பல இஸ்லாமிய கட்சிகள் உருவாகின. பீகாரில் ஓவைசியின் கட்சி களம் இறங்கிய முதல் தேர்தலில் ஐந்து இடங்களில் வென்றது. மஜ்லிஸ் கட்சியால் காங்கிரஸ் இருபதுக்கும் மேலான இடங்களில் தோற்றதால் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி ஆமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் தேர்தலில் போட்டியிட மஜ்லிஸ் கட்சி முடிவு செய்தது.

Asaduddin_Owaisi_UpdateNews360

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் ஓவைஸி கட்சி போட்டியிடும் என்று தெரிந்த திமுக, இஸ்லாமியர் வாக்குகள் சிதறும் என்ற அச்சத்தால் ஒவைசி கட்சியுடன் முதலில் பேச்சு நடத்தியது. ஆனால், உடனிருக்கும் அகில இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கடுமையாக எதிர்த்ததால் அந்த முடிவைக் கைவிட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக தினகரன் கட்சியுடன் ஒவைசி கைகோர்த்தார். இதனால், திமுகவுக்கு செல்லும் முஸ்லீம் வாக்குகள் சிறிதளவாவது பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவைசியின் கட்சி தமிழ் நாட்டில் வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகளில் நிற்கிறது. வாணியம்பாடியை முஸ்லீம் லீக்குக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் ஒவைசியின் கட்சி 10,117 வாக்குகளை வாங்கியுள்ளது. இதனால்தான், திமுக அப்போது தோற்றது. இந்தத் தேர்தலில் திமுக லாவகமாக விலக்கிக்கொண்டு, இன்னொரு முஸ்லீம் கட்சியை நிறுத்தியுள்ளது. இரு முஸ்லீம் கட்சிகளுக்கிடையில் ஏற்படும் போட்டியில் அதிமுக வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்ற சூழல் சங்கராபுரம், கிருஷ்ணகிரி தொகுதிகளிலும் திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தினகரன் அணியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மற்றொரு தொகுதியான ஆம்பூரில் போட்டியிடுகிறது. அந்தத் தொகுதியும் தினகரன் அணிக்குப் போகும் வாக்குகள் திமுக அணியின் வாக்குகளாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. இது மட்டுமின்றி, செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூரிலும் எஸ்.டி.பி,ஐ ஒரு வேட்பாளரை களம் இறக்கி அங்கு போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசனின் வாக்குகளைப் பிரிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. வலுவான வாக்கு வாங்கி இருக்கும் கட்சியாக இருக்கிறது. அங்கு, திருவாரூர், திருச்சி (மேற்கு) ஆகிய இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

பாளையம்கோட்டையில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ மீண்டும் அங்கே நிற்கிறது. தற்போது, திமுக நிறுத்தியுள்ள அப்துல் வஹாப் மீது கட்சியிலேயே அதிருப்தி இருப்பதால், முஸ்லிம்கள் ஓட்டு தினகரன் அணிக்குத் திரும்பும் என்று கூறப்படுகிறது. இதே கட்சி, மதுரை மத்தியிலும் களம் இறங்கியுள்ளது. ஆனால், இங்கே அதிமுக வேட்பாளர் இல்லாத காரணத்தால் திமுக வேட்பாளருக்கு பெரிய அளவு பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை.

Owaisi -Dinakaran - updatenews360

தினகரன் அணியில் ஒன்பது இடங்களில்தான் முஸ்லீம் கட்சிகள் நிற்கின்றன என்றாலும் மீதியுள்ள தொகுதிகளில் முஸ்லீம் வாக்குகளை தினகரனின் அணிக்குத் திருப்ப இந்தக் கட்சிகள் வேலை செய்யும் என்பதால் திமுகவுக்கு பரவலாக பாதிப்பு இருக்க வாய்ப்புகள் உள்ளன.

அதிமுகவைப் பொறுத்தவரை தினகரனின் கட்சியால் வட மாவட்டங்களில் சில இடங்களில்தான் பாதிப்பு இருக்கும் என்றும், கொங்கு மாவட்டங்களில் அதுவும் இருக்காது என்று கருதப்படுகிறது. ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய வேட்பாளர்களான அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோருக்கும், ஒரத்தநாட்டில் போட்டியிடும் வைத்திலிங்கத்துக்கும், தினகரன் அணி பிரிக்கும் வாக்குகள் கடும் சவாலாக உள்ளன. இதனால், இவர்களுக்கு கடும் நெருக்கடியும் தொகுதிகளில் இழுபறி நிலையம் ஏற்பட்டுள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் தினகரனின் கூட்டணிக் கட்சியான விடுதலை தமிழ் புலிகள் அதிமுகவுக்கு சவாலாக இருக்கின்றது.

திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் தினகரனின் கூட்டணிக் கட்சியான மக்கள் அரசுக் கட்சியும் அதிமுக ஓட்டுகளையே பிரிக்கிறது. தளி தொகுதியில் போட்டியிடும் தினகரனின் கூட்டணிக் கட்சியான கோகுலம் மக்கள் கட்சியால் அதிமுக அணியில் நிற்கும் பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏதும் இல்லை.
தினகரன் அணியால் அதிமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் தொகுதிகள் பெரும்பாலும் தென் மாவட்டங்களில்தான் அமைந்துள்ளன.

திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் தினகரன் கூட்டணியான மருதுசேனை சார்பாக களம் இயக்கியுள்ள ஆதி நாராயணத் தேவரால் கடும் நெருக்கடியில் உள்ளார். தினகரன் கட்சி பிறக்கும் வாக்குகளால் தென் மாவட்டங்களில் பல அதிமுக வேட்பாளர்கள் கடும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். தென் மாவட்டங்களிலும் தினகரன் கட்சி வெற்றிபெறாமல் போனாலும், இது திமுகவுக்கு சாதகமாக அமையலாம் என்று கருதப்படுகிறது. தினகரன் கூட்டணியால் எந்தக் கட்சி குறைவான அளவு பாதிப்பை சந்திக்கிறதோ, அந்த அணி கோட்டையைப் பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

Views: - 17

0

0