சசிகலாவை நம்பி பிரயோஜனம் இல்லை : அமமுகவை கலைக்க தினகரன் திடீர் முடிவு…?

Author: Babu Lakshmanan
27 June 2021, 2:39 pm
dinakaran - sasikala - updatenews360
Quick Share

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், டிடிவி தினகரன் தனது கட்சி, குறைந்தபட்சம்,10 தொகுதிகளிலாவது வெற்றி பெறும் என்று மிகவும் நம்பியிருந்தார்.

பொசுங்கிப் போன எதிர்பார்ப்பு

அதன்மூலம் தமிழக அரசியல், தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க முடியுமென்றும் கருதினார். ஆனால் அவர் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை, கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டார்.

Dinakaran_UpdateNews360

161 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்களில் நான்கைந்து பேர் தவிர அவ்வளவு பேரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர். 60 தொகுதிகளில் களமிறங்கிய கூட்டணிக் கட்சியான விஜயகாந்தின் தேமுதிகவும் தேறவில்லை. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்தபிறகு தனது சித்தி சசிகலா மீது தினகரன் அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதேநேரம், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தபோது அதிக அதிர்ச்சியும் காட்டவில்லை.

சட்டப்பேரவை தேர்தலில் தோற்ற பின்பு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை தேடி வருவார்கள், அப்போது அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்று கணக்கு போட்டார். அதிமுக மட்டுமே 66 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அது நடக்கவில்லை.

ஆடியோ ஐடியா

இந்த நிலையில்தான் சசிகலா, அதிமுக தொண்டர்களிடம் போனில் பேசுவதாக கூறப்படும் ஆடியோக்களை அடுத்தடுத்து, வெளியிட்டு வருகிறார். அந்த ஆடியோக்கள் ஒரு சில
அச்சு, காட்சி ஊடகங்களில் வெளியாகி அது எத்தனையாவது ஆடியோ என்பது கேள்வியாகவும், கேலியாகவும் மாறிப்போனது.

அண்மையில் சில காமெடிகளையும் இந்த ஆடியோக்களில் கேட்கவும் முடிந்தது.
அதில், ‘எனது தலைமையில் அதிமுக செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்க முடியும்’ என்று சசிகலா கூறியிருந்தார்.

2021-ல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை என்று இதைச் சொல்லலாம். ஏனென்றால் சசிகலா இப்படி கூறுவதை கேட்கும்போது 45 வயதுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களின் அடி மனதில் நிச்சயமாக ஒரு கேள்வி எழுந்து இருக்கும்!

“1996-ல் நடந்த தேர்தலில் அதிமுக 4 இடங்களில் மட்டுமே வென்றது, அந்தத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் அம்மா அவர்களும் தோற்றுப் போனார்களே? அதற்கு காரணம் யார்? அப்போது அம்மாவுடன் இருந்தவர்தானே சசிகலா? அவருடைய அக்காள் மகனும், தினகரனின் தம்பியுமான சுதாகரனை வலுக்கட்டாயமாக வளர்ப்பு மகனாக தத்தெடுக்க வைத்து, அவருக்கு நாடே வியக்கும் அளவிற்கு 1995-ல் சசிகலா ஆடம்பர திருமணம் செய்து வைத்ததுதானே காரணம்?
இல்லாவிட்டால் அம்மாவின் ஆட்சி ஆயுள் முழுக்க தமிழகத்தில் நீடித்திருக்கும்தானே?

32 பேர் கொண்ட சசிகலா மற்றும் தினகரனின் குடும்பம் அம்மாவின் போயஸ் தோட்ட இல்லத்தை ஆக்கிரமித்ததுதானே காரணம்?… அம்மாவை கட்சி நடத்தவிடாமல், இவர்கள்தானே நடத்தினார்கள்? என்று பற்பல கேள்விகள் நிச்சயம் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் மனதிலும் எழும்!”

இதையெல்லாம், யாரோ சசிகலாவுக்கு நினைவு படுத்தி இருக்கவேண்டும். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டு மறுநாளே வேறு விதமாக பல்டி அடித்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்குள் அவுட்

‘அம்மாவின் பெயரை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யாததால்தான் தேர்தலில் அதிமுக தோல்வி கண்டது’ என்று ஒரு புதுக் கதையை சொன்னார். இதுவும் எதற்காக சொல்லப்பட்டது என்று அதிமுகவினருக்கு நன்கு தெரியும்.

சசிகலா இப்படி தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வருவதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் “சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவருடன் போனில் பேசும் யாருக்கும் கட்சியில் இடமில்லை” என்று அதிமுக சார்பில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இப்படி சசிகலாவுடன் பேசியதற்காக 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனே தன்னை நேரில் வந்து சந்தித்து கட்சிக்கு தலைமை ஏற்க வாருங்கள் என்று அழைப்பு விடுப்பார்கள் என சசிகலா நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த விஷயத்திலும் அவர் எதிர்பாராததுதான் நடந்தது.
ஏமாற்றமே மிஞ்சியது. அவருடன் போனில் தொடர்பு கொண்டு பேசியதால் நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளில் 6 பேர் திமுகவில் சேர்ந்து விட்டனர். இன்னும் சிலர் சேர காத்துக் கொண்டிருக்கின்றனர்.

sasikala - dinakaran - updatenews360

தன்னுடன் போனில் பேசியவர்கள், தன்னை சந்தித்த பின், டிடிவி தினகரனின் அமமுகவில் சேர வேண்டும் என்பதே சசிகலாவின் விருப்பமாக இருந்தது. அதன்மூலம் அமமுகவை பலப்படுத்தி அதிமுகவுக்கு எதிராக அவர்களை தூண்டிவிடலாம் என்று சசிகலா மனக் கணக்குப் போட்டு வைத்திருந்தார். ஆனால் நீக்கப்பட்டவர்கள், அவரை எட்டிக்கூட பார்க்கவில்லை.
இது யாருக்கு ஏமாற்றத்தை தந்ததோ, இல்லையோ தினகரனுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளாகவே, அவர்தான் அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று தொடர்ந்து கூறி வந்தவர். சொந்தமாக கட்சி தொடங்கிய பின்பும், அதையே முழங்கியவர். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அதைத்தொடர்ந்தே சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் போனில் பேசியதாகக் கூறப்படும் ஆடியோக்கள் அவ்வப்போது ஊடகங்களில் கசிய விடப்படுகின்றன.

அதேநேரம், தொடர்ந்து 100-வது ஆடியோ 200-வது ஆடியோ என்று வெளியிட்டுக் கொண்டே போவதில் எந்த பிரயோஜனமும் இருக்காது என்பதை உணர்ந்து கொண்ட தினகரன் விரக்தியடைந்து கட்சியை கலைக்கும் திடீர் முடிவிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அவருடைய கட்சி நிர்வாகிகள் பலர் கடந்த சில நாட்களாக பெருமளவில் வேக வேகமாக திமுகவிற்கு தாவி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்குள் அமமுக கூடாரம் முற்றிலுமாக காலியாகி விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கையில் எடுத்த தினகரன்

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “சசிகலாவின் ஆடியோக்கள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை, ஊடகங்களை வைத்தே அறிந்து கொள்ள முடியும். அவர் வெளியிட்ட முதல் ஆடியோ குறித்து காட்சி ஊடகங்கள் 5 நிமிடங்கள் செய்தி வாசித்தன. அச்சு ஊடகங்கள் கால் பக்க அளவிற்கு செய்திகள் வெளியிட்டன. இப்போது, 10-ல் ஒரு பங்காக சுருக்கி வெளியிடப்படுகிறது. ஊடகங்களுக்கே இது ஒரு ஏமாற்று வேலை என்பது தெரியும். அதனால் ஆடியோக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்பு, ஒரு முன்னணி நாளிதழ், வரிந்துகட்டிக்கொண்டு சிறைக்கு செல்லும் வரை 3 மாதங்கள் தொடர்ந்து, சசிகலாவுக்கு படங்களுடன் அதிக அளவில் செய்திகள் வெளியிட்டு வந்தது. ஆனால் அந்த 3 மாதத்தில் அந்த நாளிதழின் தினசரி பிரதிகள் விற்பனை 2 லட்சம் குறைந்துபோய் விட்டது.

dinakaran- updatenews360

ஒரு தலைவர் என்பவர் இயல்பாக உருவாகவேண்டும். அவரை யாரோ பின்னாலிருந்து இயக்கினாலோ அல்லது முட்டுக் கொடுத்தாலோ அவரால் சுயமாக நிற்க முடியாது. எழுதிக் கொடுத்தால் நீண்ட அறிக்கையை யார் வேண்டுமானாலும் வெளியிட முடியும். ஆனால் ஊடகங்கள் நேருக்கு நேராக சந்தித்து, வளைத்து வளைத்து கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் சிலர் திக்கித் திணறுவார்கள். அதுபோன்றவர்களில் ஒருவர்தான் சசிகலா. அவரை தினகரன்தான் பின்னாலிருந்து இயக்குகிறார், என்பது ஊர் உலகம் அறிந்த ஒன்று.

தனது இறுதி கட்ட முயற்சியாகத்தான், இந்த ஆடியோ விவகாரத்தை தினகரன் தன் கையிலெடுத்திருக்கிறார்.

அவர் தனது கட்சியை கலைத்து விடுவார் என்று கூறப்படுவதும் உண்மைதான். அமமுக கூடாரம் காலியாகி வருவதால் உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும். அப்போது அவருக்கு மிச்ச மீதியிருக்கும் மதிப்பும் மரியாதையும் போய் விடும். எனவே அவர் கட்சியை கலைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது நம்பத்தகுந்த ஒன்றுதான். அப்படியொரு சூழலில் தினகரன் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு சசிகலா முற்றிலுமாக அரசியலைத் துறந்து விடுவார் என்பதும் நிச்சயம்” என்று அவர் தெரிவித்தார்.

Views: - 375

1

0