‘ஆட்சிக்கு வந்தால் நீதிபதியின் நாக்கை அறுப்போம்’.. ராகுலுக்கு ஆதரவான போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி சர்ச்சை பேச்சு..!!

Author: Babu Lakshmanan
7 April 2023, 8:26 am
Quick Share

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் போராட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என விமர்சித்தார். அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

Rahul GAndhi - Updatenews360

மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், 30 நாட்களுக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து, அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்தும், ராகுலின் எம்பி பதவியை பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். அந்த வகையில், தமிழகத்திலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்ஒரு பகுதியாக, திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்பேன்,” என்று கூறினார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பதே குற்றம் என்ற சூழலில், நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று காங்கிரஸ் நிர்வாகி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 200

0

0