சூர்யாவை காப்பாற்ற இயக்குனர் பலிகடாவா…? தொடரும் ஜெய் பீம் சர்ச்சை… வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!!

Author: Babu Lakshmanan
22 November 2021, 1:27 pm
Jai bhim - updatenews360
Quick Share

சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் பட விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

படத்தில் வரும் பல காட்சிகள் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஊடகங்களிலும் தொடர்ந்து விவாதமும் நடக்கிறது.

திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலரும் கூட நடிகர் சூர்யாவுக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்திருப்பது இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம்.

வன்னியர்கள்

வன்னியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அக்னி கலசத்தை ஜெய்பீம் படத்தின் காலண்டரில் வைத்தது, அதனால் சர்ச்சை எழுந்தவுடன் இந்துக்கள் வணங்கும் தெய்வமான மஹா
லட்சுமியின் படத்தை மாற்றியது, படத்தில் வில்லனாக காட்டப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணான பார்வதி ஆகியோரின் உண்மை பெயர்களை மட்டும் குருமூர்த்தி, செங்கேணி என மாற்றியது போன்றவை திட்டமிட்ட செயல் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, ஜோதிகா இயக்குனர் ஞானவேல் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் நடித்த சூர்யாவுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவருடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதும், வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்டியதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் சூர்யா, ஜோதிகா, ஞானவேல் மூவரிடமும் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதும் அனைவரும் அறிந்ததே.

இயக்குநர் விளக்கம்

இந்தப் படத்தின் மீதான சர்ச்சை கடந்த 2-ம் தேதியே தொடங்கி விட்டது. எனினும்
ஜெய்பீம் பட பிரச்சினை குறித்து 20 நாட்கள் கழித்து இயக்குனர் ஞானவேல் தற்போது ஒரு தன்னிலை விளக்கத்தை அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட நீண்டதொரு அறிக்கையில், “ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளபடும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்த காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், ‘போஸ்ட் புரொடக்‌ஷன்’ பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. ஓடிடி தளத்தில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட, படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன்.

இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யாவைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ஞானவேல் திடீரென ஞானோதயம் பெற்றவர் போல், நடிகர் சூர்யாவுக்கு முட்டு கொடுக்கும் விதமாகவே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்றே பலரும் கருதுகின்றனர்.

இந்துக்கள் அவமதிப்பு..?

இதுபற்றி தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் கூறும்போது, “கடந்த வாரம் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜெய் பீம் தொடர்பாக நடிகர் சூர்யா விளக்கம் அளிக்க கோரி தனிப்பட்ட முறையில் 9 கேள்விகளை எழுப்பி கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக “நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை” சூர்யா எழுதினார்.

அப்போது ஞானவேலிடம் கருத்து எதையும் கேட்காமலா சூர்யா கடிதம் எழுதி இருப்பார்? அந்த நேரத்தில் இந்த தன்னிலை விளக்கத்தை படத்தின் இயக்குனர் ஏன் அளிக்கவில்லை என்ற
கேள்வி எழுகிறது.

காலண்டர் பிரச்சனையாகிறது என்ற நிலையில் அதை மாற்றியபோது இந்துக்கள் வணங்கும் மஹாலட்சுமியின் படத்தை ஏன் வைத்தார்கள்? இதுவும் சர்ச்சையாகும் என்று அவர்களுக்கு தெரியாதா?…என்ற கேள்விக்கும் இதுவரை நடிகர் சூர்யாவிடம் இருந்தோ, ஞானவேலிடம் இருந்தோ தெளிவான விளக்கமும் இல்லை. பதிலும் இல்லை. அப்படியெனில் இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? என்று இந்துக்கள் அமைப்பினர் கேள்வி எழுப்புவதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.

அதேபோல் படத்தில் பெரும்பாலான முக்கிய கதாபாத்திரங்களுக்கு உண்மையான பெயர் சூட்டப்பட்டு இருக்கும் நிலையில் லாக்கப்பில் ராஜாகண்ணுவை சித்ரவதை செய்து கொன்ற போலீஸ் அதிகாரி அந்தோணிசாமியின் பெயரை குருமூர்த்தி என்று மாற்றியதும், ராஜாகண்ணுவின் மனைவியின் பெயரான பார்வதியை செங்கேணி என்று வைத்ததும் திட்டமிட்ட செயல் என்றே கருதத் தோன்றுகிறது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு நடிகர் சூர்யாவோ, இயக்குனர் ஞானவேலோ இதுவரை எந்த எந்த விளக்கமும் கூறவில்லை.

அவமானம்

நடிகர் சூர்யா சென்னையில் படித்த கல்லூரியில் குறிப்பிட்ட ஒரு மதம் தொடர்பான கருத்துகள் மாணவர்களின் மனதில் மிக ஆழமாக பதிய வைக்கப்படுவதாக வெகு வருடங்களாக பலரும் குற்றம்சாட்டிவரும் நிலையில், அதன் காரணமாகத்தான் போலீஸ் அதிகாரியின் உண்மையான பெயரை அவர் பயன்படுத்தாமல் மறைத்து விட்டார் என்று இந்து அமைப்புக்கள் கூறுவதையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நஷ்டஈடு கேட்டு தொடரப்படும் வழக்கு விசாரணைக்கு வரும்போது நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மூவரும் கோர்ட்டுப்படி ஏறவேண்டிய இக்கட்டான நிலையும் உருவாகலாம்.

அப்போது, இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டாத வழக்கில் நடிகர் விஜய் மீது வைக்கப்பட்ட விமர்சனம் போல் சூர்யாவுக்கும் கோர்ட் கொட்டு வைக்க நேர்ந்தால் அதைவிட அவருக்கு வேறு அவமானம் இருக்க முடியாது.

இதனால்தான் ஜெய் பீம் தொடர்பான சர்ச்சையில் எனக்கு மட்டுமே அத்தனை பொறுப்பும் உள்ளது. இதில் சூர்யாவுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்று இயக்குனர் ஞானவேல் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். எல்லாப் பழியையும் தன் மீதே போட்டுக் கொண்டும் இருக்கிறார் என்று சட்ட நிபுணர்கள் கூறுவதிலும் உண்மை இருக்கவே செய்கிறது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 427

0

0