நான் சாரி சொன்னேனா..? அமைச்சர் செந்தில் பாலாஜி பொய் சொல்லிவிட்டார்… இயக்குநர் தங்கர்பச்சன் சுடசுட அறிக்கை..!!
Author: Babu Lakshmanan18 August 2021, 7:44 pm
ஏற்கனவே, நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் ஊக்கத்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனக் கூறி, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் திமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. இப்படியிருக்கையில், இயக்குநர் தங்கர்பச்சன், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மாதாந்திர மின்கட்டண முறையை எப்போது அமல்படுத்துவீர்கள்..? எனக் கேட்டு திமுகவின் சுமூகமான ஆட்சியில் குண்டை போட்டார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இயக்குநர் தங்கர்பச்சனின் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைத்ததாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தனது பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல் தவறானது என்றும், நான் சொன்னது வேறு.. அவரோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, செய்தது வேறு என்றுக் கூறி, இயக்குநர் தங்கர் பச்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :-மின் கணக்கீடு குறித்த விளக்கம் தனக்குத் தேவையில்லை. முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மாதாந்திர மின்கட்டணம் பற்றிய எனது கோரிக்கைதான் என மீண்டும் கூறினேன். ஆனால், அமைச்சர் சொன்னதாகக் கூறி, அதிகாரிகள் என்னை சந்தித்து கட்டணம் குறித்த விவரங்கள் அடங்கிய தாள் ஒன்றினை என் கையில் கொடுத்து அதனை படமாக எடுத்துச் சென்றனர்.
நேற்று சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சமூக வலைதளங்களில் மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக நான் புகார் தெரிவித்ததாகவும் அதற்கு உடனே அதிகாரிகள் விளக்கமளித்து விட்டதாகவும் அதன் பின் நான் “சாரி” (வருந்துகிறேன்) எனக் கூறிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். அத்துடன் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான
தவறான செய்திகளை நான் வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும், தனது வேண்டுகோளை புகார் எனக்கூறியதுடன், அதிகாரிகள் விளக்கமளித்தவுடன் “சாரி” எனக்கூறியதாகவும், தவறான தகவலை சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சருக்கு எழுதித்தந்த அதிகாரிகள் தான் இந்த தவறான பொய்யான செய்தியை அமைச்சர் அவர்களுக்கு தந்தார்களா? எதனால் என்னுடைய கோரிக்கை இறுதிவரை புரிந்துகொள்ள முடியாமல் போனது என்பதையும் அமைச்சர் அவர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அமைச்சர் அவர்கள் இப்போதாவது உண்மையை புரிந்துகொண்டு, நான் விளக்கம் கேட்டு வருத்தம் தெரிவிக்கவில்லை எனும் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், அத்துடன் இவ்வளவு காலம் என்னுடைய கோரிக்கை அமைச்சர் அவர்களுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் எட்டாமல் இருந்தால் இப்பொழுதாவது ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மீண்டும் ஒரு குடிமகனாக முதலமைச்சர் அவர்களுக்கும். மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் “இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல; கொரோனா பெருந்தொற்றில் வேலையிழந்து, தொழிலை இழந்து வருமானமின்றி பள்ளி, கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைக்க தவித்துக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன், என இயக்குநர் சங்கர்பச்சன் தெரிவித்தார்.
மேலும், தன்னை பற்றி சட்டமன்ற அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ள தவறான, பொய்யான பதிவை நீக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0
0